கிரிக்கெட்

ஐ.பி.எல் கிரிக்கெட்; 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றி + "||" + IPL Cricket; The Bangalore team won the match by 10 wickets

ஐ.பி.எல் கிரிக்கெட்; 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றி

ஐ.பி.எல் கிரிக்கெட்; 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப்பை 88 ரன்னில் சுருட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அசத்தல் வெற்றி பெற்றது. #IPL2018 #KXIPvRCB
இந்தூர்,

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை 88 ரன்னில் சுருட்டிய பெங்களூரு அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை பெற்றது.

8 அணிகள் இடையிலான 11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதன் லீக் சுற்று ஆட்டம் முக்கியமான கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த நிலையில் இந்தூரில் நேற்று இரவு நடந்த 48-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்த பெங்களூரு அணியின் கேப்டன் விராட்கோலி பீல்டிங்கை தேர்வு செய்தார். பெங்களூரு அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. பஞ்சாப் அணியில் காயம் அடைந்த முஜீப் ரகுமானுக்கு பதிலாக மார்கஸ் ஸ்டோனிஸ் சேர்க்கப்பட்டார். பரிந்தர் ஸ்ரன் நீக்கப்பட்டு அங்கித் ராஜ்பூத் இடம் பெற்றார்.


முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக லோகேஷ் ராகுல், கிறிஸ் கெய்ல் ஆகியோர் களம் இறங்கினார்கள். உமேஷ் யாதவ் முதல் ஓவரை வீசினார். அந்த ஓவரில் அவர் ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார். 2-வது ஓவரில் லோகேஷ் ராகுல், டிம் சவுதி பந்து வீச்சில் சிக்சர் தூக்கினார். 4-வது ஓவரில் டிம் சவுதி பந்து வீச்சில் கெய்ல் 3 பவுண்டரிகள் விளாசினார்.

இந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 5-வது ஓவரை வீசிய உமேஷ் யாதவ் பஞ்சாப் அணிக்கு இரட்டை செக் வைத்தார். அதிரடியாக ஆடிய லோகேஷ் ராகுல் (21 ரன், 15 பந்துகளில் 3 சிக்சருடன்), கிறிஸ் கெய்ல் (18 ரன், 14 பந்துகளில் 4 பவுண்டரியுடன்) ஆகியோரின் விக்கெட்டை சாய்த்து அதிர்ச்சி அளித்தார். அத்துடன் பஞ்சாப் அணியின் ரன் வேகம் குறைந்ததுடன், அடுத்தடுத்து விக்கெட்டுகளையும் இழந்து தடுமாறியது.

அடுத்து கருண்நாயர் (1 ரன்), மார்கஸ் ஸ்டோனிஸ் (2 ரன்), மயங்க் அகர்வால் (2 ரன்) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார்கள். ஒரு புறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், சற்று நிதானமாக ஆடிய ஆரோன் பிஞ்ச் ஓரளவு தாக்குப்பிடித்தார். ஆரோன் பிஞ்ச் 23 பந்துகளில் ஒரு பவுண்டரி, 2 சிக்சருடன் 26 ரன்கள் எடுத்த நிலை யில் மொயீன் அலி பந்து வீச்சில் விராட்கோலியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்த பந்திலேயே அஸ்வின் (0) ரன் கணக்கை தொடங்கும் முன்பே ரன்-அவுட் ஆனார்.

இதனை அடுத்து களம் கண்ட ஆன்ட்ரூ டை (0) உமேஷ் யாதவ் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் பார்த்தீவ் பட்டேலிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். அப்போது அணியின் ஸ்கோர் 12.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 79 ரன்னாக இருந்தது. இதைத்தொடர்ந்து களம் கண்ட மொகித் ஷர்மா (3 ரன்) ரன்-அவுட் ஆனார். அடுத்து வந்த அங்கித் ராஜ்பூத்தும் (1 ரன்) ரன்-அவுட் ஆனார். பஞ்சாப் அணி 15.1 ஓவர்களில் 88 ரன்னில் சுருண்டது. அக்‌ஷர் பட்டேல் 9 ரன்னுடன் (13 பந்துகளில்) ஆட்டம் இழக்காமல் இருந்தார். பெங்களூரு அணி தரப்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டும், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல், கிரான்ட்ஹோம், மொயீன் அலி தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் 89 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆடிய பெங்களூரு அணி 8.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 92 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர்கள் விராட்கோலி 48 ரன்னும் (28 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன்), பார்த்தீவ் பட்டேல் 40 ரன்னும் (22 பந்துகளில் 7 பவுண்டரியுடன்) எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். ஐ.பி.எல். போட்டி வரலாற்றில் பெங்களூரு அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது இது 3-வது முறையாகும். பெங்களூரு அணி வீரர் உமேஷ் யாதவ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது. தோல்வி கண்ட பஞ்சாப் அணிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எஞ்சிய 2 ஆட்டங்களிலும் பஞ்சாப் அணி கட்டாயம் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்ய முடியும்.

தொடர்புடைய செய்திகள்

1. தேசிய ஆக்கி போட்டி: பெங்களூரு அணி கால்இறுதிக்கு தகுதி
தேசிய ஆக்கி போட்டியில், பெங்களூரு அணி கால்இறுதிக்கு தகுதிபெற்றது.
2. புரோ கபடி லீக்: பெங்களூரு அணி சாம்பியன்
புரோ கபடி லீக் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது.
3. ஐ.எஸ்.எல். கால்பந்து: பெங்களூரு அணி 4-வது வெற்றி
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், கேரளா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 4-வது வெற்றியை பதிவு செய்தது.
4. புரோ கபடி: பெங்களூரு அணி வெற்றி
புரோ கபடியில், அரியானா அணிக்கு எதிராக ஆட்டத்தில் பெங்களூரு அணி வெற்றிபெற்றது.