தேசிய செய்திகள்

காவிரி பிரச்சினையில் மத்திய அரசு அறிவிப்பு வரைவு திட்ட முக்கிய அம்சங்கள் சுப்ரீம் கோர்ட்டில் நாளை இறுதி முடிவு + "||" + Central government announcement on Cauvery issue

காவிரி பிரச்சினையில் மத்திய அரசு அறிவிப்பு வரைவு திட்ட முக்கிய அம்சங்கள் சுப்ரீம் கோர்ட்டில் நாளை இறுதி முடிவு

காவிரி பிரச்சினையில் மத்திய அரசு அறிவிப்பு வரைவு திட்ட முக்கிய அம்சங்கள் சுப்ரீம் கோர்ட்டில் நாளை இறுதி முடிவு
காவிரி பிரச்சினை தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள வரைவு திட்டத்தில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்று உள்ளன. #CauveryIssue
புதுடெல்லி, 

காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்கும் இடையே நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது.

இது தொடர்பான மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கர்நாடகம் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரின் அளவை 177.25 டி.எம்.சி.யாக குறைத்ததோடு, காவிரி நீர் பங்கீடு தொடர்பான வரைவு செயல்திட்டத்தை (‘ஸ்கீம்’) 6 வாரங்களுக்குள் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டு கடந்த பிப்ரவரி 16-ந் தேதி தீர்ப்பு கூறியது.

கர்நாடக சட்டசபை தேர்தல் காரணமாக வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்யாமல் தாமதப்படுத்தி வந்த மத்திய அரசு ஸ்கீம் என்றால் என்ன என்று விளக்கம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தது. அதே சமயம், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை செயல்படுத்த தவறிய மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.

அந்த வழக்கை கடந்த 8-ந் தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, வரைவு செயல்திட்டத்தை 14-ந் தேதி கண்டிப்பாக தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 14-ந் தேதிக்கு ஒத்திவைத்தது.

அதன்படி இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு இணங்க மத்திய நீர்வளத்துறை செயலாளர் உபேந்திர பிரசாத் சிங் கோர்ட்டில் வரைவு செயல் திட்டத்துடன் ஆஜராகி இருந்தார். பார்வையாளர்கள் பகுதியில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் பொதுப்பணித்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களின் மூத்த அதிகாரிகள் அமர்ந்து இருந்தனர்.

விசாரணை தொடங்கியதும் மத்திய நீர்வளத்துறை செயலாளர் உபேந்திர பிரசாத் சிங் கோர்ட்டு உத்தரவின் படி வரைவு செயல்திட்டத்தை மூடி ‘சீல்’ வைக்கப்பட்ட கவரில் வைத்து தாக்கல் செய்தார்.

அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால், “வரைவு செயல்திட்டம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதன் பிரதியை சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு அளிக்கலாம். மாநிலங்கள் இந்த வரைவு செயல்திட்டம் குறித்த தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்கலாம் அல்லது கோர்ட்டு உரிய உத்தரவை பிறப்பிக்கலாம். மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீட்டு சட்டத்தின் அடிப்படையில் இதற்கு மத்திய மந்திரிசபையின் ஒப்புதலை பெற வேண்டி இருக்கும்” என்று கூறினார்.

அதற்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, இந்த விவகாரத்தின் மீது மேலும் புதிது புதிதாக வழக்குகளை விசாரித்துக்கொண்டு இருக்க முடியாது என்றும், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீட்டு சட்டம் 6ஏ பிரிவின் கீழ் செயல்திட்டத்தை வகுக்க வேண்டியது சட்டரீதியாக அவசியமாகிறது என்றும் கூறினார்.

இதைத்தொடர்ந்து கே.கே. வேணுகோபால், இந்த வரைவு செயல்திட்டத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள அமைப்புக்கு ஒரு பெயர் தேவைப்படுகிறது. அது ‘வாரியம்’ அல்லது ‘ஆணையம்’ அல்லது ‘குழு’ என்று எந்த பெயரிலும் இருக்கலாம். இந்த அமைப்புக்கான பெயரை சுப்ரீம் கோர்ட்டு தீர்மானிக்க வேண்டும் என்றார்.

அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக் கீல் சேகர் நாப்டே குறுக்கிட்டு, “தற்போது என்ன செய்ய வேண்டியிருந்தாலும் அதை இப்போதே இந்த கோர்ட்டு அறையிலேயே நீதிபதிகள் முன்னிலையிலேயே செய்ய வேண்டும். இதில் மாநில அரசுகள் செய்ய வேண்டியது எதுவும் இல்லை. மத்திய அரசு தாக்கல் செய்து இருக்கும் வரைவு செயல்திட்டம் பிப்ரவரி 16-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளதா? என்பதை மட்டுமே பார்க்க முடியும்” என்று கூறினார்.

அதற்கு நீதிபதிகள், இந்த வரைவு செயல்திட்டம் சரியாக இருக்கிறதா? என்பது குறித்து கோர்ட்டு ஆராய முடியாது என்றும், கோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பின் கீழ் இந்த அமைப்பு அமைக்கப்படுமா? என்பதைத்தான் இந்த கோர்ட்டு கருத்தில் எடுத்துக் கொள்ளும் என்றும் கூறினார்கள்.

அத்துடன் பிப்ரவரி 16-ந் தேதி இந்த கோர்ட்டு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் இந்த வரைவு செயல்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதா? என்பது பற்றிய தங்கள் கருத்தை தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநில அரசுகள் புதன்கிழமைக்குள் (நாளை) கோர்ட்டுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும், அன்று இந்த வரைவு செயல்திட்டத்தை பரிசீலித்து ஒப்புதல் வழங்குவது பற்றி முடிவு செய்யப்படும் என்றும் கூறிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

14 பக்கங்களை கொண்ட வரைவு செயல்திட்டத்தின் நகல் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களின் சார்பில் ஆஜரான வக்கீல் களுக்கு கோர்ட்டு அறையிலேயே வழங்கப்பட்டது.

ஆணையமா? வாரியமா?

இந்த வரைவு செயல் திட்டத்தில் இடம்பெற்றுள்ள முக் கிய அம்சங்கள் வருமாறு:-

* காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண ‘வாரியம்’ அல்லது ‘ஆணையம்’ அல்லது ‘குழு’ ஆகிய மூன்றில் ஏதாவது ஒன்று அமைக்கப்படும். சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின்படி இந்த பெயர் முடிவு செய்யப்படும். இந்த அமைப்புடன் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவும் அமைக்கப்படும்.

* அதிகாரம் பெற்ற இந்த அமைப்பு தலைவர் மற்றும் 9 உறுப்பினர்களை கொண்டதாக இருக்கும். தலைவரை மத்திய அரசு நியமிக்கும். இந்த தலைவர் நீர்வளம் மற்றும் நீர்மேலாண்மையில் செயல்திறன் கொண்ட பொறியாளராக இருப்பார். 5 ஆண்டுகள் அல்லது 65 வயது பூர்த்தியாகும் வரை இவர் பதவியில் இருப்பார்.

4 மாநிலங்களின் உறுப்பினர்கள்

* தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களைச் சேர்ந்த நீர்வளத்துறை நிர்வாக செயலாளர்கள் தலா ஒருவர் இந்த அமைப்பில் பகுதிநேர உறுப்பினர்களாக இடம் பெறுவார்கள்.

* மேலும் இரு முழுநேர உறுப்பினர்களும், இரு பகுதிநேர உறுப்பினர்களும் இந்த அமைப்பில் இருப்பார்கள். மத்திய நீர்வளத்துறை செயலாளரும் இந்த அமைப்பில் இடம்பெறுவார்.

* உறுப்பினர்கள் அனைவருக்கும் சமமான அதிகாரம் உண்டு.

* மத்திய நீர்வள ஆணையம், தேசிய நீர்த்துறை நிறுவனம், இந்திய வேளாண்மை ஆய்வு மையம், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் இருந்து பிரதிநிதிகளை இந்த அமைப்பின் கூட்டங்களில் பங்கேற்க தலைவர் அழைப்பு விடுக்கலாம்.

அணைகளின் கட்டுப்பாடு

* இந்த அமைப்பின் ஒட்டுமொத்த வழிகாட்டுதலின்படி அணைகள் இயக்கப்படும்.

* ஒழுங்குமுறை குழுவின் உதவியுடன் அணைகளை திறப்பது, நீர் திறப்பை ஒழுங்குபடுத்துவதை இந்த அமைப்பு கண்காணிக்கும்.

* கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் திறந்து விடப்படும் தண்ணீர் இரு மாநிலங்களின் எல்லையில் உள்ள பிலிகுண்டுலுவில் கண்காணிக்கப்பட்டு அளவிடப்படும்.

* காவிரி படுகையில் உள்ள அனைத்து அணைகளும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக் கும். மாநில அரசின் துணையுடன் இந்த குழு அணைகளில் உள்ள நீர் இருப்பு, பங்கீட்டு விகிதம் ஆகியவற்றை மேற்பார்வை செய்யும்.

* இந்த அமைப்பில் உள்ள பெரும்பான்மை உறுப்பினர்களின் பரிந்துரையின் பேரில் அணைகளில் இருந்து நீர் திறக்கப்படும்.

ஒத்துழைக்க மறுத்தால்...

* எந்த மாநிலமாவது காவிரி நடுவர் மன்றம் அல்லது சுப்ரீம் கோர்ட்டு பிப்ரவரி 16-ந் தேதி வழங்கிய தீர்ப்பின்படி தண்ணீரை பகிர்ந்து கொள்ள ஒத்துழைக்க மறுத்தால் இந்த அமைப்பு மத்திய அரசை அணுகும். மத்திய அரசு எடுக்கும் முடிவு இறுதியாக இருப்பதோடு, அந்த முடிவு மாநிலங்களை கட்டுப்படுத்தும்.

* ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் அணைகளில் உள்ள நீர் இருப்பு எவ்வளவு என்பதை இந்த அமைப்பு ஆய்வு செய்யும்.

* ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30-ந் தேதிக்கு முன்பு சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு ஆண்டறிக்கை தயார் செய்து அனுப்பும்.

* வறட்சி காலங்களில் தண்ணீரை பகிர்ந்து கொள்வது பற்றியும் இந்த அமைப்பு முடிவு செய்யும்.

பெங்களூருவில் தலைமையகம்

* இந்த அமைப்பின் தலைமையகம் பெங்களூருவில் செயல்படும்.

* இந்த அமைப்பின் நிர்வாகச் செலவு, தலைவர், உறுப்பினர்களின் ஊதியம் ஆகியவற்றில் 80 சதவீதத்தை தமிழகமும் கர்நாடகமும் தலா 40 சதவீதம் வீதம் பகிர்ந்து கொள்ள வேண்டும். கேரள மாநிலம் 15 சதவீதத்தையும், புதுச்சேரி 5 சதவீதத்தையும் தங்கள் பங்களிப்பாக அளிக்க வேண்டும்.

காவிரி ஒழுங்காற்று குழுவிலும் தலைவர், 4 மாநிலங்களைச் சேர்ந்த தலா ஒரு உறுப்பினர் மற்றும் பிற உறுப்பினர்கள் இடம் பெற்று இருப்பார்கள். இந்த குழு ஜூன் மற்றும் அக்டோபர் மாதங்களில் 10 நாட்களுக்கு ஒருமுறை கூடும். அதன்பிறகு 15 நாட்களுக்கு ஒருமுறை கூடும். அவசர காலங்களில் தேவைக்கேற்ப கூட்டங்கள் நடைபெறும்.

தமிழகத்துக்கு பலன் தருமா?

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள இந்த வரைவு செயல்திட்டம் தமிழகத்துக்கு பலன் தருமா? அல்லது பாதகமாக அமையுமா? என்பது, அதில் உள்ள அம்சங்கள் செயல் பாட்டுக்கு வரும்போதுதான் தெரியவரும்.