மாநில செய்திகள்

மு.க.ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு காவிரி பிரச்சினை தொடர்பான ஆலோசனை கூட்டத்துக்கு அழைப்பு + "||" + Kamal Hassan meets with MK Stalin

மு.க.ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு காவிரி பிரச்சினை தொடர்பான ஆலோசனை கூட்டத்துக்கு அழைப்பு

மு.க.ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு காவிரி பிரச்சினை தொடர்பான ஆலோசனை கூட்டத்துக்கு அழைப்பு
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நேற்று சந்தித்து பேசினார். #CauveryIssue #KamalHaasan
சென்னை, 

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நேற்று சந்தித்து பேசினார். அப்போது, காவிரி பிரச்சினை தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு அவர் அழைப்பு விடுத்தார்.

காவிரி போராட்ட ஒற்றுமைக்காக வரும் 19-ந்தேதி மக்கள் நீதி மய்யம் சார்பில் ஆலோசனை கூட்டம் ஒன்றை அதன் தலைவர் கமல்ஹாசன் கூட்டியுள்ளார். இந்த கூட்டத்தில் பங்கேற்க அனைத்து கட்சி தலைவர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களுக்கு கமல்ஹாசன் அழைப்பு விடுத்து வருகிறார்.

அந்த வகையில், நேற்று மாலை சென்னை அண்ணா அறிவாலயம் சென்ற கமல்ஹாசன், தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து அழைப்பு விடுத்தார். இந்த சந்திப்பின்போது, தி.மு.க. தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, க.பொன்முடி ஆகியோரும், மக்கள் நீதி மய்யம் தரப்பில் உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் ஸ்ரீபிரியா, சி.கே.குமரவேல் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.

இரவு 7.45 மணிக்கு நடைபெற்ற இந்த சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் நீடித்தது. அதன் பிறகு வெளியே வந்த கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு கமல்ஹாசன் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- இந்த சந்திப்பின் நோக்கம் என்ன?

பதில்:- இந்த சந்திப்பு அழைப்பு விடுப்பதற்காக வந்த சந்திப்பு. காலையில் எதேச்சையாக நடந்த சந்திப்பு. நாங்கள் ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று விவசாயிகளுடன் அமர்ந்து ஆலோசித்தோம். அப்போது அவர்களே (விவசாயிகள்), இதுவரை வெவ்வேறு கருத்து உடையவர்கள் எல்லாம் ஒன்றாக அமர்ந்து ஆலோசனை கூட்டம் மட்டும் அல்ல, எந்த திசையை நோக்கி பயணிப்பது என்பதை முடிவு செய்யும் முக்கியமான கூட்டமாக அமைய வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்தார்கள். அதற்கு என்னை அழைப்பதற்கு அவர்கள் வந்தார்கள். அனைத்துக்கட்சி தலைவர்களும் இதில் பங்கெடுத்துக் கொண்டு நம்முடைய ஒற்றுமைப்பாட்டை பக்கத்து மாநிலங்களுக்கு, ஏன் நாட்டுக்கே காட்ட வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது என்று நான் நினைத்ததை சொன்னபோது அவர்கள் விரும்பினார்கள். ஆனால் கூப்பிட்டால் வருவார்கள் என்ற சந்தேகம் அவர்களுக்கு இருந்தது. கண்டிப்பாக வருவார்கள் இந்த மாண்பை அனைவரும் மதிப்பார்கள் என்ற நம்பிக்கையில் நான் எல்லோருக்கும் அழைப்பு விடுக்கிறேன் என்று அவர்கள் சார்பில் சொல்லிக்கொண்டு மக்கள் நீதி மய்யம் ஒரு கருவியாக பயன்படும் என்பதையும் சொல்லிக்கொண்டு, ஸ்டாலினை சந்தித்து பேசி இருக்கிறேன்.

பாகுபாடு, கொள்கைகள் பற்றி எல்லாம் சிந்திக்காமல் தமிழகம், தமிழ் மக்களின் நலன் என்ற ஒரு குடையின் கீழ் பல்வேறு கருத்துகள் உள்ள கட்சிகள் இணைய வேண்டும் என்பது எங்கள் ஆசை. அதற்காக நான் ரஜினிகாந்த், திருநாவுக்கரசர், டி.டி.வி.தினகரன், விஜயகாந்த், தமிழிசை சவுந்தரராஜன், வேல்முருகன், கே.பாலகிருஷ்ணன் ஆகியோரிடம் பேசி இருக்கிறேன். யாருமே இதனால் என்ன பயன் என்று கேட்கவில்லை. நல்ல யோசனை, நல்ல மாண்பு. இது நடக்க வேண்டும் என்ற ஆசையில், ஒரு சிலர் பங்கெடுப்பேன் என்று வாக்குறுதியும் கொடுத்துவிட்டார்கள். இந்த உரையாடல் தொடரும். தொடர வேண்டும் என்ற எண்ணம் மக்கள் நீதி மய்யத்துக்கு இருக்கிறது.

கேள்வி:- ஆளுங்கட்சியை அழைப்பீர்களா?

பதில்:- அதற்கான முயற்சிகளை எடுத்து இருக்கிறோம். நேரம் கேட்கப்பட்டு இருக்கிறது. பார்க்கலாம்.

தேர்தல் கூட்டணி அல்ல

கேள்வி:- தேர்தல் நேரத்திலும் இதுபோல ஆதரவு திரட்டுவீர்களா?

பதில்:- அது வேறு. இது வேறு. இதில் தேர்தல் பற்றிய பேச்சே கிடையாது. அந்த கூட்டணி அல்ல இது. இது தமிழன் எனும் ஓரணி. அவன் தேவை காவிரி என்பதே அதன் ஒரே குரல்.

கேள்வி:- அனைத்து கட்சி கூட்டத்துக்கு நீங்கள் 19-ந்தேதி அழைப்பு விடுத்திருக்கும் வேளையில், 17-ந்தேதி ஒரு அனைத்து கட்சி கூட்டத்துக்கு மு.க.ஸ்டாலினும் அழைப்பு விடுத்திருக்கிறாரே? கலந்துகொள்வீர்களா?

பதில்:- கலந்துகொள்ளலாம். இதற்கு அவசியம் இருப்பதால் தான் விவசாயிகள் வந்து ஆதரவு கேட்டனர். இல்லையென்றால் அவர்கள் கேட்டிருக்க மாட்டார்கள். எனவே இதை விவசாயிகளுக்கு ஏதுவாக செய்துதர வேண்டும் என்பது தான் எனது கருத்து.

கேள்வி:- காவிரி விவகாரத்தில் மாநில அரசு துரோகம் இழைத்ததாக குறிப்பிடும் நீங்கள், கூட்டத்தில் பங்கேற்க மாநில அரசுக்கும் அழைப்பு விடுத்தது எதனால்?

பதில்:- கருத்து வேறுபட்டு இருந்தாலும் உரையாடல் தொடரவேண்டும். இதைத்தான் நாங்கள் வலியுறுத்துகிறோம்.

கேள்வி:- உங்கள் அழைப்பை மு.க.ஸ்டாலின் ஏற்றாரா? வருவேன் என்று உறுதி அளித்தாரா?

பதில்:- அது அவர்கள் தான் முடிவு எடுக்கவேண்டும். அதுகுறித்து ஒரு குழுவாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

கேள்வி:- நீங்கள் கூட்டும் இந்த கூட்டம் தாக்கத்தை ஏற்படுத்துமா?

பதில்:- பொறுத்திருந்து பாருங்கள்.

கேள்வி:- காவிரி பிரச்சினையில் பா.ஜ.க. சரியான வழியில் செல்கிறதா?

பதில்:- அதை 19-ந்தேதி நடக்கும் கூட்டத்தில் சொல்கிறேன். அவரசம் ஏன்? காத்திருங்களேன்.

இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.