மாநில செய்திகள்

நேரு பூங்கா - சென்டிரல் இடையே இம்மாத இறுதியில் மெட்ரோ ரெயிலை இயக்க வாய்ப்பு + "||" + Nehru Gardens - Central to run the Metro Railway at the end of this month

நேரு பூங்கா - சென்டிரல் இடையே இம்மாத இறுதியில் மெட்ரோ ரெயிலை இயக்க வாய்ப்பு

நேரு பூங்கா - சென்டிரல் இடையே இம்மாத இறுதியில் மெட்ரோ ரெயிலை இயக்க வாய்ப்பு
நேரு பூங்கா - சென்டிரல் இடையே சுரங்கப்பாதையில் இம்மாத இறுதியில் மெட்ரோ ரெயில் போக்குவரத்தை தொடங்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.
சென்னை, 

நேரு பூங்கா - சென்டிரல் இடையே சுரங்கப்பாதையில் இம்மாத இறுதியில் மெட்ரோ ரெயில் போக்குவரத்தை தொடங்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். இதற்கான ஆய்வை பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன் நேற்று தொடங்கினார்.

சென்னையில் நடந்து வரும் மெட்ரோ ரெயில் பணியின் ஒரு பகுதியாக ஷெனாய்நகர் - நேரு பூங்கா 2-வது வழிப்பாதை மற்றும் நேரு பூங்கா- சென்டிரல் மற்றும் சின்னமலை - ஏ.ஜி-டி.எம்.எஸ். இடையே நிறைவடைந்த பணிகளை ஆய்வு செய்வதற்காக பெங்களூருவில் இருந்து பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன், சென்னை வந்தார். ஷெனாய் நகர் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு நேற்று காலை வந்த அவரை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன நிர்வாக இயக்குனர் பங்கஜ்குமார் பன்சால் வரவேற்றார்.

பின்னர் கே.ஏ.மனேகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், பாதுகாப்பு ஆணையர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- சுரங்கப்பாதையில் எத்தனை நாட்கள் ஆய்வு நடத்த திட்டமிட்டு உள்ளர் கள்?

பதில்:- ஷெனாய் நகர் - நேரு பூங்காவின் 2-வது பாதை மற்றும் நேரு பூங்கா - சென்டிரல் இடையே இரண்டு பாதைகளிலும் இன்று (நேற்று) தொடங்கி 2 நாட்கள் ஆய்வு செய்யப்படுகிறது. தொடர்ந்து 18 மற்றும் 19-ந்தேதிகளில் சின்னமலை - ஏ.ஜி-டி.எம்.எஸ். (தேனாம்பேட்டை) இடையே ஆய்வு செய்ய திட்டமிட்டு உள்ளோம். ஆக 4 நாட்கள் ஆய்வுப் பணியில் ஈடுபட உள்ளோம்.

கேள்வி:- சுரங்கப்பாதையில் எந்த மாதிரியான ஆய்வுகள் செய்யப்படுகிறது?

பதில்:- சுரங்கப்பாதையில் முதலில் டிராலியில் சென்று அங்குலம், அங்குலமாக ஆய்வு செய்யப்படும். தொடர்ந்து மெட்ரோ ரெயிலை 80 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கிப்பார்த்து ஆய்வு செய்யப்பட உள்ளது. சுரங்கப்பாதையில் தீ விபத்தை தடுக்க என்ன வழிவகை செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக சுரங்கப்பாதையில் தீ வைத்து பார்க்கும் ஆய்வையும் மேற்கொள்ள இருக்கிறோம்.

கேள்வி:- சுரங்கப்பாதையில் எத்தனை கிலோ மீட்டர் தூரம் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு உள்ளது?

பதில்:- ஷெனாய்நகர் - சென்டிரல் இடையே 2-வது பாதையில் 5.6 கிலோ மீட்டரும், நேரு பூங்கா- சென்டிரல் இடையே 1-வது வழிப்பாதையில் 2.5 கிலோ மீட்டர் உள்ளிட்ட 8.1 கிலோ மீட்டர் தூரமும் மற்றும் சின்னமலை - ஏ.ஜி-டி.எம்.எஸ். (தேனாம்பேட்டை) இடையே 4.5 கிலோ மீட்டர் தூரமும் ஆய்வு செய்யப்பட உள்ளது.

கேள்வி:- ஆய்வு அறிக்கையை எப்போது தாக்கல் செய்வீர்கள்?

பதில்:- ஷெனாய்நகர்- நேரு பூங்கா இடையே 2-வது வழிப்பாதைக்கான சான்றிதழை ஓரிரு நாட்களில் வழங்க முடியும். பிற பகுதிகளில் செய்யப்படும் ஆய்வு பற்றிய அறிக்கையை ஒரு வாரத்தில் வழங்க முடியும்.

கேள்வி:- நேரு பூங்கா- சென்டிரல் இடையே சுரங்கப்பாதையில் எப்போது ரெயில் இயக்கப்படும்?

பதில்:- ஆய்வு முடித்த பின்னர், பணிகளில் சில மாற்றங்கள் இருந்தால், அவற்றை சரிசெய்த பின்னர், சான்றிதழ் வழங்கப்படும். அதன் அடிப்படையில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், மத்திய, மாநில அரசுகளின் அனுமதியுடன் ரெயில் இயக்கப்படும். இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தான் முடிவு செய்யும். எப்படியும் இம்மாத இறுதியில் இயக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மெட்ரோ ரெயில் சுரங்கப்பணி பொதுமேலாளர் வி.கே.சிங், இயக்குனர்கள் (கட்டுமானம்) ராஜீவ் நாராயணன் திரிவேதி, (இயக்குதல்) நரசிம் பிரசாத், (நிதி) சுஜாதா ஜெயராஜ், இணை-இயக்குனர் (மக்கள்- தொடர்பு) எஸ்.பாண்டியன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.