கிரிக்கெட்

ஐ.பி.எல் கிரிக்கெட்; ராஜஸ்தானை வீழ்த்தி கொல்கத்தா அணி 7-வது வெற்றி + "||" + IPL Cricket; Kolkata win 7th win

ஐ.பி.எல் கிரிக்கெட்; ராஜஸ்தானை வீழ்த்தி கொல்கத்தா அணி 7-வது வெற்றி

ஐ.பி.எல் கிரிக்கெட்; ராஜஸ்தானை வீழ்த்தி கொல்கத்தா அணி 7-வது வெற்றி
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.
கொல்கத்தா,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தானை வீழ்த்தி கொல்கத்தா அணி 7-வது வெற்றியை ருசித்தது. சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

11-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை நெருங்கி வருகிறது. இதில் கொல்கத்தா ஈடன்கார்டனில் நேற்றிரவு அரங்கேறிய 49-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் கொல்கத்தா நைட் ரைடர்சும், ராஜஸ்தான் ராயல்சும் மோதின. ராஜஸ்தான் அணியில் மூன்று மாற்றமாக டார்சி ஷார்ட், ஸ்ரேயாஸ் கோபால், தவால் குல்கர்னி நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக சோதி, ராகுல் திரிபாதி, அனுரீத்சிங் சேர்க்கப்பட்டனர். கொல்கத்தா அணியில் பியூஸ் சாவ்லாவுக்கு பதிலாக ஷிவம் மாவி இடம் பிடித்தார்.


‘டாஸ்’ ஜெயித்த கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி திரிபாதியும், விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லரும் ராஜஸ்தான் அணியின் இன்னிங்சை தொடங்கினர். பிரசித் கிருஷ்ணாவின் ஓவரின் கடைசி 4 பந்துகளில் திரிபாதி ஒரு சிக்சர், 3 பவுண்டரி தொடர்ச்சியாக விரட்டினார். ஷிவம் மாவியின் அடுத்த ஓவரை நையபுடைத்து எடுத்த ஜோஸ் பட்லர் 4 பவுண்டரி, 2 சிக்சர் நொறுக்கி அமர்க்களப்படுத்தினார். அதாவது தொடர்ச்சியாக 10 பந்துகள் எல்லைக்கோட்டை நோக்கி ஓடிக்கொண்டே இருந்தன. பட்லரின் ஒரு சிக்சர் நடப்பு ஐ.பி.எல். தொடரின் 700-வது சிக்சராகவும் அமைந்தது. 3.2 ஓவர்களில் அந்த அணி 50 ரன்களை தொட்டது.

இவ்வாறு விறுவிறுவென உயர்ந்த ரன்வேகம் அடுத்த சில ஓவர்களில் அதல பாதாளத்திற்குள் விழும் என்று யாரும் எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள். ஸ்கோர் 63 ரன்களை (4.5 ஓவர்) எட்டிய போது திரிபாதி 27 ரன்களில் (15 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் ஆனார்.

அடுத்து வந்த கேப்டன் ரஹானே (11 ரன்) குல்தீப் யாதவின் சுழலில் ‘ரிவர்ஸ் ஸ்வீப்’ அடிக்க முயற்சித்து கிளன் போல்டு ஆனார். அவரது அடுத்த ஓவரில் இதே போல் ஜோஸ் பட்லரும் (39 ரன், 22 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) ‘ரிவர்ஸ் ஸ்வீப்’ ஷாட் அடிக்க முயற்சித்து அது சரியாக ‘கிளிக்’ ஆகாமல் கேட்ச் ஆனார். தொடர்ச்சியாக 5 அரைசதங்கள் அடித்து சாதனை படைத்திருந்த பட்லர், இந்த முறை 11 ரன்களில் அரைசதத்தை நழுவ விட்டார்.

பின்னர் இறங்கிய சஞ்சு சாம்சன் (12 ரன்), பென் ஸ்டோக்ஸ் (11 ரன்) ஆகியோரும் கொல்கத்தாவின் சுழல்வலையில் சிக்க, ரன்ரேட் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டது. பின்வரிசை வீரர்களில் ஜெய்தேவ் உனட்கட் (26 ரன்) தவிர மற்ற அனைவரும் ஒற்றை இலக்கத்தில் வீழ்ந்தனர். முடிவில் ராஜஸ்தான் அணி 19 ஓவர்களில் 142 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. கொல்கத்தா சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 4 ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை அள்ளினார். ஆந்த்ரே ரஸ்செல், பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டுகளும், சுனில் நரின், ஷிவம் மாவி தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

அடுத்து களம் இறங்கிய கொல்கத்தா அணி 18 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 145 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கிறிஸ் லின் 45 ரன்களும், கேப்டன் தினேஷ் கார்த்திக் 41 ரன்களும் (நாட்-அவுட்) விளாசினர். 13-வது லீக்கில் ஆடிய கொல்கத்தாவுக்கு இது 7-வது வெற்றியாகும். இதன் மூலம் அந்த அணி பிளே-ஆப் சுற்று வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டது. அதே சமயம் 7-வது தோல்வியை தழுவிய ராஜஸ்தானுக்கு அடுத்த சுற்று வாய்ப்பு சிக்கலாகியுள்ளது.