தேசிய செய்திகள்

கர்நாடகாவில் ஆட்சியமைக்க எடியூரப்பாவிற்கு ஆளுநர் அழைப்பு, 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவு + "||" + Karnataka Governor has invited BS Yeddyurappa to form govt

கர்நாடகாவில் ஆட்சியமைக்க எடியூரப்பாவிற்கு ஆளுநர் அழைப்பு, 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவு

கர்நாடகாவில் ஆட்சியமைக்க எடியூரப்பாவிற்கு ஆளுநர் அழைப்பு, 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவு
கர்நாடகாவில் ஆட்சியமைக்க எடியூரப்பாவிற்கு ஆளுநர் அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்து உள்ளார். #KarnatakaElections2018 #BJP


பெங்களூரு, 

பா.ஜனதா 104 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. காங்கிரஸ் 78 இடங்களிலும், ஜனதா தளம்(எஸ்) கூட்டணி 38 தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது. மாநிலத்தில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், தொங்கு சட்டசபை அமைந்துள்ளது. இந்த நிலையில் காங்கிரசும், ஜனதா தளம் (எஸ்) கட்சியும் கூட்டணி அமைத்துள்ளது. ஜனதா தளம்(எஸ்) கட்சி தலைமையில் ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

 இருதரப்பிலும் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆளுநர் இறுதி முடிவு எடுக்காத நிலையில் எம்.எல்.ஏ.க்களை காப்பாற்றும் விதமாக காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் நடவடிக்கையை மேற்கொண்டது.

 மணிப்பூர் மற்றும் கோவாவில் பாரதீய ஜனதா கட்சி தனிப்பெரும் கட்சியாக வராத நிலையில் ஆட்சியை அமைத்தது. அங்கு காங்கிரஸ் கட்சிதான் முதன்மை கட்சியாக வந்தது. ஆனால் சிறிய கட்சிகளை இணைத்து பா.ஜனதா ஆட்சியை அமைத்தது. இரு மாநிலங்களிலும் ஆளுநர், தனிப்பெரும் கட்சியாக வந்த கட்சிக்கு அனுமதி அளிக்காமல் கூட்டணியுடன் வந்த கட்சிக்குதான் ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார் என்பதை இன்று குமாரசாமி சுட்டிக்காட்டி பேசினார். 

இப்போது தேர்தலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் எடியூரப்பாவை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்து உள்ளார்.

பாரதீய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ. சுரேஷ் குமார் டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், தனிப்பெரும் கட்சியாக வந்த பா.ஜனதாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்து உள்ளார். நாளை 9:30 மணி அளவில் எடியூரப்பா பதவி ஏற்கிறார், என குறிப்பிட்டார்.  

கர்நாடகாவில் ஆட்சி அமைக்க எடியூரப்பாவிற்கு ஆளுநர் வஜூபாய் வாலா அழைப்பு விடுத்து உள்ளார். நாளை காலை 9:30 

மணியளவில் பாரதீய ஜனதா அரசு பதவியேற்கிறது என கர்நாடகா மாநில பாஜகவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தகவல் 

வெளியிடப்பட்டது. 

இதற்கிடையே ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தாரா? என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு ‘வி’ வடிவ வெற்றி விரல்களை கர்நாடக பாஜக பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகர் காண்பித்தார். பெங்களூருவில் நாளை போலீஸ் யாரும் விடுப்பு எடுக்கக்கூடாது என காவல் ஆணையர் உத்தரவிட்டு உள்ளார். 104 தொகுதியில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதாவிற்கு பெரும்பான்மை கிடையாது, ஆட்சி அமைத்தாலும் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். இந்நிலையில் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க 11 நாட்கள் அவகாசம் கொடுக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகியது.

யஷ்வந்த் சின்ஹா 

யஷ்வந்த் சின்ஹா டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், “வெட்கமில்லாமல் கர்நாடகாவில் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்க முயற்சி செய்யும் கட்சியில் இருந்து வெளியேறியதில் மகிழ்ச்சியடைகிறேன். அடுத்த வருடம் மக்களவை தேர்தலில் மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றாலும், இதேபோன்ற செயலை அங்கும் செய்யும்,” என குறிப்பிட்டு உள்ளார். 

டுவிட்டர் பதிவுகள் நீக்கம்  

எடியூரப்பாவிற்கு அழைப்பு என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கட்சியிடம் இருந்து எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கர்நாடக பாரதீய ஜனதா மற்றும் எம்.எல்.ஏ. சுரேஷ் குமார் டுவிட்டரில் இருந்து இதுதொடர்பான செய்திகள் எடுத்துவிடப்பட்டது.

மீண்டும் பதிவு

இந்நிலையில் நாளை காலை 9.00 மணிக்கு பெங்களூருவில் உள்ள ராஜ்பவனில் எடியூரப்பா கர்நாடகா முதல்வராக பதவியேற்பார் என பாரதீய ஜனதா டுவிட்டரில் மீண்டும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆளுநர் அழைப்பு

இதற்கிடையே கர்நாடகாவில் ஆட்சியமைக்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்து உள்ளார். பதவியேற்பு நாளில் இருந்து 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டு உள்ளார். பதவியேற்பு நாள் குறித்து எடியூரப்பாவே முடிவு செய்து தெரிவிக்கும்படி ஆளுநர் கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.