கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்; பஞ்சாப் அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் 3 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி ‘திரில்’ வெற்றி + "||" + IPL Cricket; The Mumbai team won by three runs in an exciting match against Punjab

ஐ.பி.எல். கிரிக்கெட்; பஞ்சாப் அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் 3 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி ‘திரில்’ வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட்; பஞ்சாப் அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் 3 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி ‘திரில்’ வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் மும்பை அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #IPL2018
மும்பை,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 3 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது. பஞ்சாப் வீரர் லோகேஷ் ராகுல் 94 ரன்கள் விளாசியும் பலன் இல்லாமல் போய் விட்டது.

11-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. பங்கேற்றுள்ள 8 அணிகளில் ஐதராபாத், சென்னை அணிகள் மட்டுமே இதுவரை அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்துள்ளன.


இந்த நிலையில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்றிரவு நடந்த 50-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை எதிர்கொண்டது. மும்பை அணியில் டுமினிக்கு பதிலாக கீரன் பொல்லார்ட் சேர்க்கப்பட்டார். பஞ்சாப் அணியில் கருண் நாயர், மயங்க் அகர்வால் நீக்கப்பட்டு யுவராஜ்சிங், மனோஜ் திவாரி இடம் பிடித்தனர்.

‘டாஸ்’ ஜெயித்த பஞ்சாப் கேப்டன் அஸ்வின் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி சூர்யகுமார் யாதவும், இவின் லீவிசும் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். அங்கித் ராஜ்பூத்தின் ஓவரில் சூர்யகுமார் 2 சிக்சரும், 2 பவுண்டரியும் ஓட விட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். ஆனால் இவின் லீவிஸ் (9 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. அடுத்து வந்த விக்கெட் கீப்பர் இஷான் கிஷன், மொகித் ஷர்மாவின் ஓவரில் 2 சிக்சரும், ஒரு பவுண்டரியும் சாத்தினார். 5 ஓவர்களில் மும்பை அணி ஒரு விக்கெட்டுக்கு 57 ரன்களை எட்டியது.

ஆண்ட்ரூ டையின் அடுத்த ஓவரில் இஷான் கிஷன் (20 ரன்), சூர்யகுமார் யாதவ் (27 ரன்) இருவரும் வீழ்ந்தனர். இந்த முறையும் கேப்டன் ரோகித் சர்மா (6 ரன்) சோபிக்கவில்லை. அடுத்தடுத்து விக்கெட் சரிவால் மும்பையின் ரன்வேகம் சற்று தளர்ந்தது. 5 ஓவர்களில் பந்து எல்லைக்கோடு பக்கமே செல்லவில்லை. 10 ஓவர்களில் அந்த அணி 4 விக்கெட்டுக்கு 79 ரன்களுடன் தடுமாறியது. இதன் பின்னர் ஆல்-ரவுண்டர்கள் பொல்லார்ட்டும், குணால் பாண்ட்யாவும் இணைந்து மும்பையின் ஸ்கோரை எகிற வைத்தனர். ஸ்டோனிசின் பந்து வீச்சில் குணால் பாண்ட்யா இரு சிக்சர்களை பறக்க விட்டார். ராஜ்பூத்தின் ஓவரில் பொல்லார்ட் ஒரு சிக்சர், 2 பவுண்டரி விரட்டியடித்து ரசிகர்களை உற்சாகத்தில் மிதக்க வைத்தார்.

குணால் பாண்ட்யா தனது பங்குக்கு 32 ரன்கள் (23 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார். மறுமுனையில் பொல்லார்ட்டின் அதிரடி நீடித்தது. அவர் 22 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். 15-வது ஓவரின் முடிவில் மும்பையின் (5-151 ரன்) ரன்ரேட் 10 ரன்களுக்கு மேல் நகர்ந்தது. ஆனால் பொல்லார்ட் 50 ரன்களில் (23 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) அஸ்வின் சுழலில் வெளியேற்றப்பட்டதும் மும்பையின் உத்வேகம் கொஞ்சம் குறைந்து போனது. அடுத்து வந்த பென் கட்டிங் 4 ரன்னிலும், ஹர்திக் பாண்ட்யா 9 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர். 20 ஓவர் முடிவில் மும்பை அணி 8 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் குவித்தது. மெக்லெனஹான் (11 ரன்), மயங்க் மார்கண்டே (7 ரன்) களத்தில் இருந்தனர். பஞ்சாப் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரூ டை 4 ஓவர்களில் 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

பின்னர் 187 ரன்கள் இலக்கை நோக்கி பஞ்சாப் அணி ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் 18 ரன்களில் கேட்ச் ஆனார். இதைத் தொடர்ந்து லோகேஷ் ராகுலும், ஆரோன் பிஞ்சும் கூட்டணி அமைத்து அணியை தூக்கி நிமிர்த்தினர். அபாரமாக ஆடிய ராகுல் நடப்பு தொடரில் தனது 6-வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். 16 ஓவர்களில் பஞ்சாப் அணி ஒரு விக்கெட்டுக்கு 145 ரன்களுடன் வெற்றி வாய்ப்பிலேயே இருந்தது.

17-வது ஓவரை வீசிய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, ஆரோன் பிஞ்ச் (46 ரன்), மார்கஸ் ஸ்டோனிஸ் (1) ஆகியோரின் விக்கெட்டுகளை கபளகரம் செய்ததுடன் அந்த ஓவரில் 4 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார். 18-வது ஓவரில் பென் கட்டிங் 15 ரன் வழங்கினாலும், 19-வது ஓவரை மறுபடியும் வீச வந்த பும்ரா யார்க்கர்களை போட்டு அட்டகாசப்படுத்தினார். அச்சுறுத்திக்கொண்டிருந்த லோகேஷ் ராகுலை (94 ரன், 60 பந்து, 10 பவுண்டரி, 3 சிக்சர்) வெளியேற்றியதுடன் இந்த ஓவரில் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து ஆட்டத்தை தங்கள் அணி பக்கம் திருப்பினார்.

இதன் பின்னர் கடைசி ஓவரில் பஞ்சாப்பின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. பரபரப்பான 20-வது ஓவரை வீசிய வேகப்பந்து வீச்சாளர் மெக்லெனஹான், ஒரு சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து யுவராஜ்சிங்கின் (1 ரன்) விக்கெட்டையும் வீழ்த்தி மும்பைக்கு ‘திரில்’ வெற்றியை தேடித்தந்தார்.

பஞ்சாப் அணியால் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 183 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் மும்பை அணி 3 ரன் வித்தியாசத்தில் 6-வது வெற்றியை பெற்றதுடன், பிளே-ஆப் சுற்று வாய்ப்பையும் தக்கவைத்துக் கொண்டது. பும்ரா 4 ஓவர்களில் 15 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அதே சமயம் 7-வது தோல்வியை தழுவிய பஞ்சாப் அணி, ரன்ரேட்டிலும் பின்தங்கி இருப்பதால் அவர்களின் பிளே-ஆப் சுற்று வாய்ப்பு மங்கி போய் இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டி; இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2. முதல் ஒரு நாள் போட்டி; ஆஸ்திரேலியா 34 ரன்களில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி
முதல் ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 34 ரன்களில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
3. ரஞ்சி கிரிக்கெட்டில் மும்பை அணிக்கு முதல் வெற்றி
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் மும்பை அணி இந்த சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்தது.
4. தேசிய ஆக்கி போட்டி: வெற்றியுடன் தொடங்கியது தமிழக அணி
தேசிய ஆக்கியின் முதலாவது லீக் ஆட்டத்தை, தமிழக அணி வெற்றியுடன் தொடங்கியது.
5. வங்காளதேச நாடாளுமன்ற தேர்தலில் அபார வெற்றி: ஷேக் ஹசினா மீண்டும் பிரதமரானார் - நரேந்திர மோடி வாழ்த்து
வங்காளதேசத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் ஷேக் ஹசினா 4-வது முறையாக பிரதமரானார்.