தேசிய செய்திகள்

கர்நாடகாவில் விளையாடும் விதி! 2011 மோடி‘டுவிட்’டை வைத்து ஆளுநரை திரும்பப்பெற காங்கிரஸ் வலியுறுத்தல் + "||" + Congress Agrees With Narendra Modis Tweet On Karnataka Governor

கர்நாடகாவில் விளையாடும் விதி! 2011 மோடி‘டுவிட்’டை வைத்து ஆளுநரை திரும்பப்பெற காங்கிரஸ் வலியுறுத்தல்

கர்நாடகாவில் விளையாடும் விதி! 2011 மோடி‘டுவிட்’டை வைத்து ஆளுநரை திரும்பப்பெற காங்கிரஸ் வலியுறுத்தல்
பிரதமர் மோடி 2011-ம் ஆண்டு ஆளுநரை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தியதை இப்போது காங்கிரஸ் ஒப்புக்கொண்டு உள்ளது. #VajubhaiVala #Congress #BJP
புதுடெல்லி,

கர்நாடகாவில் எந்தஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் 104 தொகுதிகளில் வெற்றிப்பெற்ற பா.ஜனதா ஆட்சி அமைத்து உள்ளது. பெரும்பான்மையில்லாத பா.ஜனதாவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்த விவகாரம் சுப்ரீம் கோர்ட்டு சென்று உள்ளது. இதற்கிடையே கர்நாடக தேர்தலில் இப்போது முக்கிய இடம் வகிப்பவர்களின் சுவாரசியமான வரலாறுகள் வெளியாகிய வண்ணம் உள்ளது. 

தேவேகவுடா - வஜுபாய் வாலா

குஜராத்தில் கடந்த 1995-ல் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜனதா ஆட்சியமைத்தது.  சுரேஷ் மேத்தா முதல்வராக பதவியேற்றார். பா.ஜனதா ஆட்சி அமைந்து ஓராண்டு ஆன பின்னர் 1996 செப்டம்பரில் சுரேஷ் மேத்தாவுக்கு எதிராக மூத்த தலைவர் சங்கர் சிங் வகேலா எழுந்தார். பிளவின் போது சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் சுரேஷ் மேத்தா வெற்றி பெற்றார். எனினும் சட்டப்பேரவையில் பெரும் அமளி ஏற்பட்டது. மத்தியில் இருந்த தேவேகவுடாவின் அரசு ஆட்சியை கலைத்தது. அன்றைய குஜராத் மாநில ஆளுநர் கிருஷ்ணபால் சிங் பரிந்துரையின்பேரில் குஜராத் அரசு கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமல் செய்யப்பட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற அரசை கலைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போது குஜராத் மாநில பாரதீய ஜனதா தலைவராக இருந்தவர் வஜுபாய் வாலா. இப்போது கர்நாடக மாநில ஆளுநராக உள்ளார். பெரும்பான்மை எம்.எல்.ஏ. பட்டியலை சமர்பித்தும் தேவேகவுடாவின் மகன் குமாரசாமியை ஆட்சியமைக்க அழைக்கவில்லை. 22 ஆண்டுகளுக்கு பின்னர் இச்சம்பவம் நடந்து உள்ளது.

மோடியின் ‘டுவிட்’ காங்கிரஸ் வலியுறுத்தல்

இப்போது பிரதமர் மோடி  2011-ம் ஆண்டு ஆளுநரை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி பதிவிட்ட டுவிட் செய்தியை காங்கிரஸ் கையில் எடுத்து உள்ளது. 

பிரதமர் மோடி குஜராத் முதல்-மந்திரியாக இருந்தபோது 2011 மே 19-ம் தேதி பதிவிட்ட டுவிட் செய்தியை காங்கிரஸ் முன்னெடுத்து வந்து உள்ளது. பிரதமர் மோடி பதிவிட்ட செய்தியில், “ இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பை கர்நாடக மாநில ஆளுநர் அழிக்கிறார். ஜனாதிபதி அவரை திரும்பப்பெற பிரதமர் கேட்டுக்கொள்ள வேண்டும்,” என்று வலியுறுத்தியிருந்தார். ஆளுநர் எச்.ஆர். பரத்வாஜ் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார், கர்நாடகாவில் பா.ஜனதா தலைமையிலான அரசிற்கு தொல்லை கொடுத்து வருகிறார் என்று மோடி குறிப்பிட்டார்.  இப்போது அதனை ஒப்புக்கொள்வதாக கூறிஉள்ள காங்கிரஸ், இப்போதைய கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலாவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.

கர்நாடகாவில் 2011-ல் நடந்தது 

இப்போது போன்று அப்போதும் கர்நாடக மாநில அரசியலில் தினம், தினம் திருப்பம் ஏற்பட்டது. முதல்-மந்திரி எடியூரப்பா மற்றும் ஆளுநர் பரத்வாஜ்க்கு இடையிலான மோதல்கள் தொடர்கதையாகியது. அப்போது சபாநாயகரால் 11 பாரதீய ஜனதா எம்.எல்.ஏ தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லாது என சுப்ரீம் கோர்ட் கூறிவிட்டது. இதைத்தொடர்ந்து ஜூன மாதம் 2-ம் தேதி சட்டசபையை கூட்டி பலத்தை நிரூபிக்க அனுமதிக்குமாறு ஆளுநர் பரத்வாஜிடம் எடியூரப்பா கோரிக்கையை முன்வைத்தார். ஆனால் மத்திய அரசிடம் இருந்து பதில் கிடைக்கவில்லை என பரத்வாஜ் தட்டிக்கழித்தார். இதனால் ஆத்திரமடைந்த எடியூரப்பா கவர்னரின் செயலுக்கு மக்களிடம் நீதி கேட்டு போராட முடிவெடுத்தார். இந்நிலையில்தான் மோடி கர்நாடக மாநில ஆளுநர் பரத்வாஜை திரும்ப பெற வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதினார். 

கர்நாடக அரசியல் சம்பவம் தொடர்பாக அப்போது பா.ஜனதா ஆளும் கட்சியாக இருந்த மாநிலங்களின் முதல்வர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதினார்கள். அப்போது குஜராத்தில் முதல்வராக இருந்த மோடி, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், உத்தரகாண்ட் முதல்வர் ரமேஷ் பொக்கரியால், இமாச்சல பிரதேச முதல்வர் பிரேம்குமார் தும்ஹால் ஆகியோர் இணைந்து பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடிதம் எழுதினார்கள். ஆளுநரை திரும்ப பெற மன்மோகன் சிங், ஜனாதிபதியிடம் கேட்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 

கர்நாடக மாநில ஆளுநர் பரத்வாஜ் மத்திய அரசின் ஊழியர் போல் செயல்படுகிறார். அரசியலமைப்பு சட்டத்தின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை மதித்து நடக்க வேண்டியது ஆளுநரின் கடமையாகும். மெஜாரிட்டி எம்.எல்.ஏ.க்களை கொண்ட முதல்வராக எடியூரப்பா உள்ளார். அரசியலமைப்பு சட்டம் 356 பிரிவை பயன்படுத்தும் விஷயத்தில் மத்திய அரசுக்கு அதிகாரமில்ல‌ை என எஸ்.ஆர்.பொம்மை தொடர்ந்த வழக்கில், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியிடம் நல்ல பெயர் எடுக்க ஆளுநர் பரத்வாஜ் இப்படி செயல்படுவது வருத்தமளிக்கிறது. எனவே அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காத பரத்வா‌ஜை திரும்ப அழைக்க வேண்டும் என நான்கு மாநில முதல்வர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. 

இப்போது இதே கோரிக்கையை முன்வைத்து காங்கிரஸ், ஆளுநர் வஜுபாய் வாலாவை திரும்ப பெற கோரிக்கை விடுத்து உள்ளது.