தேசிய செய்திகள்

கர்நாடகாவில் பதவிக்கு போர்க்கொடி: 2 வருடங்களுக்கு சுழற்சி முறையில் மந்திரி பதவி காங்கிரஸ் முடிவு + "||" + Karnataka: After protests over cabinet berth allotment, Congress plans to rotate ministers in 2 years

கர்நாடகாவில் பதவிக்கு போர்க்கொடி: 2 வருடங்களுக்கு சுழற்சி முறையில் மந்திரி பதவி காங்கிரஸ் முடிவு

கர்நாடகாவில் பதவிக்கு போர்க்கொடி:   2 வருடங்களுக்கு சுழற்சி முறையில் மந்திரி பதவி காங்கிரஸ் முடிவு
கர்நாடகாவில் மந்திரி பதவிக்கு 25 க்கும் மேற்பட்டவர்கள் போர்க்கோடி தூக்கி வருவதால் 2 வருடங்களுக்கு ஒருமுறை சுழற்சி அடிப்படையில் மந்திரி பதவி வழங்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. #Congress
பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ்–ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. குமாரசாமி முதல்–மந்திரியாகவும், பரமேஸ்வர் துணை முதல்–மந்திரியாகவும் பதவி ஏற்றனர். அதைத்தொடர்ந்து புதிதாக 25 மந்திரிகள் நேற்று முன்தினம் பதவி ஏற்றனர். இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னணி தலைவர்கள் பலருக்கு மந்திரி பதவி கிடைக்கவில்லை.

லிங்காயத் சமூகத்தை சேர்ந்த தனக்கு துணை முதல்–மந்திரி பதவி வேண்டும் என்று எம்.பி.பட்டீல் கேட்டார். ஆனால் அவருக்கு மந்திரி பதவி கூட கிடைக்கவில்லை. இதனால் அவர் கடும் அதிருப்தியில் உள்ளார். 

இந்த நிலையில் மந்திரி பதவி கிடைக்காததால், காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முன்னாள் மந்திரி எம்.பி.பட்டீல் தலைமையில் பெங்களூருவில் உள்ள அவருடைய வீட்டில் நேற்று நடைபெற்றது. 

 அதேபோல் அதிருப்தியில் உள்ள மற்றொரு முன்னாள் மந்திரி எச்.கே.பட்டீல் தலைமையில் தனியாக ஒரு ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் உள்ள அவருடைய வீட்டில் நடந்தது. 

அதேபோல் ஹாவேரி மாவட்டம் ஹிரேகூரு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பி.சி.பட்டீல். மந்திரி பதவி கிடைக்காததால் அவருடைய ஆதரவாளர்கள் நேற்று அங்கு போராட்டம் நடத்தினர். டயர்களை ரோட்டில் போட்டு தீ வைத்து எரித்து ஆக்ரோ‌ஷத்தை வெளிப்படுத்தினர்.

சதீஸ் ஜார்கிகோளி எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் பெலகாவியில் காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சதீஸ் ஜார்கிகோளிக்கு மந்திரி பதவியை வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். மந்திரி பதவி கேட்டு ரகுமூர்த்தி எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் செல்லக்கெரேயில் போராட்டம் நடத்தினர்.

 காங்கிரசில் மந்திரி பதவி கிடைக்காத எம்.எல்.ஏ.க்கள் தனித்தனியாக ஆலோசனை கூட்டம் நடத்துவதால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கூட்டணி ஆட்சிக்கு ஆபத்து ஏற்படுமோ? என்ற இக்கட்டான நிலை எழுந்துள்ளது.

அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தனித்தனியாக ஆலோசனை நடத்தி உள்ள நிலையில் அவர்களை சமாதானப்படுத்த காங்கிரஸ் தலைவர்கள் தீவிர முயற்சி செய்து வருகிறார்கள். மாநில காங்கிரஸ் தலைவரும், துணை முதல்–மந்திரியுமான பரமேஸ்வர் தலைமையில் பெங்களூருவில் உள்ள அவருடைய வீட்டில் நேற்று அதிருப்தியாளர்களை சமாளிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்களான மந்திரிகள் ஆர்.வி.தேஷ்பாண்டே, டி.கே.சிவக்குமார், கே.ஜே.ஜார்ஜ் மற்றும் செயல் தலைவர் தினேஷ் குண்டுராவ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

இது குறித்து கர்நாடக காங்கிரஸ் பொறுப்பாளர் வேணுகோபால் கூறியதாவது:-

இது இறுதி அமைச்சரவை அல்ல. அமைச்சர்களின் செயல்திறன் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் பரிசீலிக்கப்படும். மற்றும் இலக்குகளை சந்திக்காதவர்கள் மாற்றப்படுவார்கள்.தற்போதைக்கு, முதல் முறையாக எம்எல்ஏ ஆகி இருப்பவர்கள் அமைச்சரவையில் சேர்க்கப்படமாட்டாது. ஆறு துறைகள் இன்னும்  நிரப்பப்படவில்லை. 2 வருடங்களுக்கு ஒரு முறை சுழற்சி அடைப்படையில் மந்திரி பதவி மாற்றி அமைக்கப்படும் என கூறினார்.