தேசிய செய்திகள்

துணை நிலை ஆளுநர் அலுவலகத்தில் தொடர்ந்து தர்ணா போராட்டம் நடத்தும் கெஜ்ரிவால் + "||" + Kejriwal, ministers sit-in at L-G office continues overnight

துணை நிலை ஆளுநர் அலுவலகத்தில் தொடர்ந்து தர்ணா போராட்டம் நடத்தும் கெஜ்ரிவால்

துணை நிலை ஆளுநர் அலுவலகத்தில் தொடர்ந்து தர்ணா போராட்டம் நடத்தும் கெஜ்ரிவால்
டெல்லி துணை நிலை ஆளுநர் அலுவலகத்தில் முதல் மந்திரி கெஜ்ரிவால் மற்றும் மூத்த மந்திரிகள் தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுடெல்லி,

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அரவிந்த் கெஜ்ரிவால் முதல் அமைச்சராக இருந்து வருகிறார். இந்த நிலையில், ஐஏஎஸ் அதிகாரிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தி, கவர்னர் அலுவலகத்துக்கு சென்று கவர்னர் அனில் பைஜாலை நேற்று மாலை 5.30 மணியளவில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பை தொடர்ந்து கவர்னரின் சேம்பரை விட்டு கெஜ்ரிவால் வெளியே வந்தார். ஆனால், அலுவலகத்தை விட்டு வெளியேற மறுத்த கெஜ்ரிவால், இரவு முழுவதும் அங்கு தங்கி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். கெஜ்ரிவாலுடன் துணை முதல் மந்திரி மனிஷ் சிசோடியா உட்பட மேலும் இரண்டு மந்திரிகள் உள்ளனர். 

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள கெஜ்ரிவால், தனது இல்லத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட பிரத்யேக உணவை அருந்தியதாக அங்குள்ள வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன. டெல்லியில், தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முதல் மந்திரி ஒருவர் கவர்னர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டுள்ளது டெல்லி அரசியல் வரலாற்றில் இதுதான் முதல் தடவையாகும். இன்று காலை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள கெஜ்ரிவால், “ எனது அன்பார்ந்த டெல்லி மக்களே, காலை வணக்கம், போராட்டம் தொடர்கிறது” என்று தெரிவித்துள்ளார். ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள், ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் துணை நிலை ஆளுநர் அலுவலகத்திற்கு வெளியே குவிந்துள்ளதால், தடுப்புகள் அமைத்து போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இருந்த போதிலும், கெஜ்ரிவாலின் உள்ளிருப்பு போராட்டத்தை கவர்னர் அலுவலகம் விமர்சித்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ”காரணமற்ற தர்ணா”வின் மற்றொரு நிகழ்வு இது என்று விமர்சித்துள்ளது. இதற்கிடையே, இன்று காலை கெஜ்ரிவால், மனிஷ்சிசோடியா, ராஜ் மற்றும் ஜெயின் ஆகியோர் கையெழுத்திட்ட கடிதம் ஒன்று கவர்னர் அனில் பைஜாலுக்கு அனுப்ப பட்டுள்ளது. இந்த கடிதத்தில், ஐஏஎஸ் அதிகாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அனைத்து தேவையான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும் பணிக்கு திரும்பாவிட்டால் எஸ்மா சட்டத்தையும் பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

ஆம் ஆத்மி மந்திரிகள், தலைமைச்செயலாளர் அன்சு பிரகாஷை தாக்கிய சம்பவத்திற்கு பிறகு, ஐஏஎஸ் அதிகாரிகள் ஆம் ஆத்மி மந்திரிகளுடனான சந்திப்பை தவிர்ப்பதாகவும் இதனால், அரசுப்பணிகள் பாதிக்கப்படுவதாகவும் ஆம் ஆத்மி அரசு குற்றம் சாட்டி வருகிறது.