தேசிய செய்திகள்

எத்தனை வழக்குகள் வேண்டுமென்றாலும் போடட்டும்; போராடி அவற்றை வெற்றி கொள்வோம்: ராகுல் காந்தி + "||" + Gandhi slams Modi; dares BJP, RSS to slap cases against him

எத்தனை வழக்குகள் வேண்டுமென்றாலும் போடட்டும்; போராடி அவற்றை வெற்றி கொள்வோம்: ராகுல் காந்தி

எத்தனை வழக்குகள் வேண்டுமென்றாலும் போடட்டும்; போராடி அவற்றை வெற்றி கொள்வோம்:  ராகுல் காந்தி
எங்கள் மீது எத்தனை வழக்குகள் வேண்டுமென்றாலும் போடட்டும். போராடி அவற்றை வெற்றி கொள்வோம் என ராகுல் காந்தி இன்று கூறியுள்ளார்.
தானே,

மராட்டிய சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தின்போது மகாத்மா காந்தி கொலைக்கு ஆர்.எஸ்.எஸ்.தான் காரணம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். இதனை தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். தொண்டர் ஒருவர் தானே மாவட்டம் பிவண்டியில் உள்ள கோர்ட்டில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இதுபற்றிய வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் வந்தபொழுது கடந்த ஏப்ரல் 23ந்தேதி மற்றும் மே 2ந்தேதி அவர் ஆஜராகவில்லை.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் ராகுல் காந்தி ஆஜராகவில்லை என அவரது வக்கீ்ல்கள் தெரிவித்தனர். இதையடுத்து ஜூன் 12-ந் தேதி ராகுல் காந்தி நேரில் ஆஜராக வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று ஆஜரான ராகுல் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.  தொடர்ந்து ராகுல் காந்திக்கு ஆதரவாக அவரது வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

ராகுல் காந்தி நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் விவசாயிகள் பற்றி பிரதமர் மோடி பேசுவதில்லை என கண்டனம் தெரிவித்துள்ளார்.

என் மீது பாரதீய ஜனதா கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் அவர்கள் விரும்பியபடி எத்தனை வழக்குகள் வேண்டுமென்றாலும் போடட்டும்.  எங்களுடையது கொள்கைக்கான போராட்டம்.  நாங்கள் போராடி அவற்றை வெற்றி கொள்வோம் என்றும் கூறினார்.

தொடர்ந்து அவர், எங்களது போராட்டம் பிரதமரின் கொள்கைகளுக்கு எதிரானது.  விவசாயிகள் ஏமாற்றமடைந்து உள்ளனர்.  இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் பற்றி பிரதமர் பேசுவதில்லை.  இந்த அரசாங்கம் பணக்காரர்களுக்கானது என்று கூறினார்.