தேசிய செய்திகள்

வாஜ்பாய் உடல்நிலையில் முன்னேற்றம் எய்ம்ஸ் இயக்குனர் தகவல் + "||" + AIIMS hopeful of Atal Bihari Vajpayee's recovery over next few days

வாஜ்பாய் உடல்நிலையில் முன்னேற்றம் எய்ம்ஸ் இயக்குனர் தகவல்

வாஜ்பாய் உடல்நிலையில் முன்னேற்றம் எய்ம்ஸ் இயக்குனர் தகவல்
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா கூறியுள்ளார். #Vajpayee
புதுடெல்லி,

பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான வாஜ்பாய் (வயது 93), கடந்த 1998 முதல் 2004-ம் ஆண்டு வரை பிரதமராக பதவி வகித்தார். பின்னர் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் பொதுவாழ்வில் இருந்து அவர் படிப்படியாக விலகினார். நாளடைவில் அவரது நோய் பாதிப்பு தீவிரமடைந்ததால், வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.

நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டு இருந்த வாஜ்பாய்  டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அனைத்து பரிசோதனைகளையும் மேற்கொண்ட மருத்துவர்கள், சிறப்பு வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

வாஜ்பாய், வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரந்தீப் குலேரியா மேற்பார்வையின் கீழ் மருத்துவக்குழுவினர் அவரது உடல்நிலையை கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. மேலும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறினர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள வாஜ்பாயை, பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜனதா தலைவர் அமித்ஷா, மூத்த தலைவர் அத்வானி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், சுகாதார மந்திரி ஜே.பி.நட்டா உள்ளிட்டவர்களும் ஆஸ்பத்திரிக்கு சென்று வாஜ்பாய் உடல்நலம் குறித்து விசாரித்தனர்.

இந்தநிலையில் அவரது உடல்நிலை தொடர்பாக, எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா கூறியதாவது: 

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் உள்ளது. தொடர் சிகிச்சை காரணமாக சிறுநீரக தொற்று சரியாகி வருகிறது. ஒரு சில நாட்களில் வாஜ்பாய் வீடு திரும்புவார்.

இவ்வாறு அவர் கூறினார்.