உலக செய்திகள்

தாய்லாந்து: குகைக்குள் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி துவங்கியது + "||" + Operation To Rescue Boys Trapped In Thai Cave Resumes: Officials

தாய்லாந்து: குகைக்குள் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி துவங்கியது

தாய்லாந்து: குகைக்குள் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி துவங்கியது
தாய்லாந்தில் குகைக்குள் சிக்கிய எஞ்சியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி மீண்டும் துவங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. #Thai
பாங்காங், 

தாய்லாந்து நாட்டில் தாம் லுவாங் என்கிற குகையை சுற்றிப்பார்ப்பதற்காக 12 சிறுவர்களை அவர்களது கால்பந்து பயிற்சியாளர் கடந்த மாதம் 23-ந் தேதி அழைத்துச் சென்றார். அவர்கள் அப்போது பெய்த மழை, வெள்ளத்தில் குறுகலான அந்த குகைக்குள் சிக்கிக்கொண்டனர். 

அவர்கள் கதி என்ன ஆனது என்றே தெரியாத நிலையில், மீட்பு பணி முடுக்கி விடப்பட்டது. உள்நாட்டு குழுவுடன் இங்கிலாந்து நாட்டில் இருந்து வந்த மீட்பு வீரர்கள் 2 பேர் இணைந்தனர்.அவர்கள்தான், 12 சிறுவர்களும், பயிற்சியாளரும் உயிருடன் இருப்பதை அவர்கள் மாயமாகி 9 நாட்களுக்கு பின்னர் கடந்த 2-ந் தேதி கண்டு பிடித்து சொன்னார்கள். அது தவித்துப்போய் இருந்த அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதலை அளித்தது.

இருப்பினும் குகைக்குள் வெள்ளமும், சேறும் இருப்பதால் அவர்களை மீட்பதற்கு மாதக்கணக்கில் ஆகலாம் என வல்லுனர்கள் கருதியதால், குகைக்குள் மீட்பு வீரர்கள் மூலம் ஆக்சிஜன் சிலிண்டர்கள், உணவுகள், மருந்துகள் அனுப்பிவைக்கப்பட்டன. 

இதிலும் ஆக்சிஜன் எடுத்துச்சென்று விட்டு திரும்பிக்கொண்டு இருந்த மீட்பு படை வீரர் ஒருவர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழக்க நேரிட்டது. ஆனாலும்  மீட்பு முயற்சி தொய்வின்றி நடத்தப்படும் என தாய்லாந்து கடற்படை அறிவித்தது. அதன்படி சிறுவர்களையும், அவர்களது பயிற்சியாளரையும் பத்திரமாக மீட்பதற்கு வியூகங்கள் வகுக்கப்பட்டன.

இந்த நிலையில் அங்கு அடுத்த சில நாட்கள் மேலும் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதால், சிறுவர்களையும், பயிற்சியாளரையும் மீட்க நேற்று உகந்த நாள் என மீட்பு படையினர் முடிவு செய்தனர்.  சிறுவர்கள், பயிற்சியாளர் என 13 பேரும் நல்ல மன வலிமையுடனும், உடல் வலிமையுடனும் காணப்பட்டதால் அவர்களை நேற்று மீட்க அதிரடியாய் திட்டமிட்டு, ‘டி-டே’ என பெயரிட்டு, அந்த பணிகளை உள்ளூர் நேரப்படி காலை 10 மணிக்கு தொடங்கினர்.

சிறுவர்களையும், பயிற்சியாளரையும் மீட்பதற்காக 18 ‘டைவர்’கள் (முக்குளிப்பு வீரர்கள்) குகைக்குள் சென்றனர். நேற்று மொத்தம் 4 சிறுவர்கள் மீட்கப்பட்டு விட்டனர்.

எஞ்சிய 8 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளரை மீட்கும் பணி, நேற்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இரவு நேரம் என்பதாலும், பிராண வாயு நிரப்புதல் உள்ளிட்ட வேறு சில பணிகளுக்காகவும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தற்போது மீண்டும் குகைக்குள் சிக்கிய வீரர்களை மீட்கும் பணி துவங்கியது. 

மீட்பு பணி முழுவதுமாக முடிய மூன்று முதல் நான்கு நாட்கள் வரை ஆகலாம் என்று சியாங் ராய் மாகாண கவர்னர் தெரிவித்தார். ராய்டர்ஸ், ஏ.எப்.பி உள்ளிட்ட செய்தி நிறுவனங்கள் மீட்பு பணி துவங்கியதாக செய்தி வெளியிட்டுள்ள போதிலும்,  மீட்பு பணி மீண்டும் துவங்கியதாக மீட்புக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை.