மாநில செய்திகள்

தூத்துக்குடி கலவரம் தொடர்பான ‘வீடியோ’ காட்சிகளை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு + "||" + Court orders to file 'video' scenes

தூத்துக்குடி கலவரம் தொடர்பான ‘வீடியோ’ காட்சிகளை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு

தூத்துக்குடி கலவரம் தொடர்பான ‘வீடியோ’ காட்சிகளை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு
தூத்துக்குடி கலவரம் தொடர்பான வீடியோ காட்சிகளை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
சென்னை, 

தூத்துக்குடி கலவரம் தொடர்பான வீடியோ காட்சிகளை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

ஸ்டெர்லைட் நிறுவனத்தை மூட வலியுறுத்தி மே 22–ந் தேதி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள்.

இதுகுறித்து ஐகோர்ட்டு மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளுடன் வக்கீல்கள் ஜிம்ராஜ் மில்டன், பார்வேந்தன், பாவேந்தன், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், மணலியை சேர்ந்த தே.மு.தி.க. பிரமுகர் விஜயகுமார் உள்பட பலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கு விசாரணையின்போது, துப்பாக்கி சூடு சம்பவம் மாநில போலீசாருக்கு எதிராக உள்ளதால், சி.பி.ஐ. விசாரணைக்கு ஏன் உத்தரவிடக் கூடாது? என்று தலைமை நீதிபதி ஏற்கனவே இருமுறை கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது 3–வது முறையாக துப்பாக்கி சூடு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு ஏன் உத்தரவிடக்கூடாது? என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண், மனுதாரர்கள் சார்பில் வக்கீல்கள் சங்கரசுப்பு, சேவியர் பெலிக்ஸ், சூரியபிரகாசம், பார்த்தசாரதி, ரமேஷ், கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் ஆஜராகி வாதிட்டனர். வாதம் விவரம் வருமாறு:–

விஜய் நாராயண்:– துப்பாக்கி சூடு தொடர்பான விசாரணையை தமிழக போலீசார் நேர்மையாக விசாரித்து வருகின்றனர். சி.பி.ஐ. விசாரிக்க தேவையில்லை. அமைதியாக ஊர்வலம் செல்வதாக கூறிவிட்டு, பெட்ரோல் குண்டுகளை எடுத்து வந்து பொதுச்சொத்துகளை போராட்டக்காரர்கள் சேதப்படுத்தியுள்ளனர். போலீசாரை தாக்கியுள்ளனர். இதனால் வேறு வழியில்லாமல் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

சங்கரசுப்பு:– பொதுமக்கள் யாரும் பெட்ரோல் குண்டுகளை எடுத்துச்செல்லவில்லை. போலீசார் திட்டமிட்டு 13 அப்பாவிகளை கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

சேவியல் பெலிக்ஸ்:– ஒரு கும்பல் திரண்டுவந்து கலவரத்தை ஏற்படுத்தினால் அவர்களை கலைப்பது எப்படி? என்று போலீஸ் நிலை ஆணையில் உள்ளது. ஆனால் இதை போலீசார் கடைபிடிக்கவில்லை. பொது சொத்தை சேதப்படுத்தியவர்களுக்கு 2 முதல் 7 ஆண்டு சிறை தண்டனையும், அபராதமும் தான் விதிக்க முடியும். அதற்காக போலீசாரே துப்பாக்கி சூடு நடத்தி மரண தண்டனை வழங்க முடியாது.

ஆர்.கிருஷ்ணமூர்த்தி:– துப்பாக்கி சூடு நடத்தி உயிர் பலி ஏற்படும்போது சம்பந்தப்பட்ட போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்யவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு பல வழக்குகளில் தீர்ப்பு அளித்துள்ளது. ஆனால் இந்த சம்பவத்தில் போலீசார் மீது இதுவரை கொலை வழக்கு பதிவு செய்யவில்லை.

தலைமை நீதிபதி:– நான் ஆங்கில தொலைக்காட்சியை பார்த்தபோது, போலீஸ் வாகனத்தை போராட்டக்காரர்கள் கவிழ்த்து தள்ளுவது, தீ வைப்பது போன்ற சம்பவங்களை பார்த்தேன். அதனால், யார் மீதும் தப்பும் சொல்ல முடியாது, நியாயமும் சொல்ல முடியாது. குட்கா ஊழல் வழக்கில் அமைச்சர், டி.ஜி.பி. என்று உயர் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு வந்தது. சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்ட நாங்கள், குற்றச்சாட்டு குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அதை சி.பி.ஐ. கண்டுபிடிக்க வேண்டும். தூத்துக்குடி சம்பவத்தில் போலீசார் மீது மட்டும் குற்றம் சொல்லமுடியாது.

சூரியபிரகாசம்:– யார் குற்றம் செய்தாலும், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதற்கு நேர்மையான, வெளிப்படையான புலன் விசாரணை தேவை.

இவ்வாறு வாதம் நடந்தது.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘இந்த வழக்கை 30–ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம். அப்போது தூத்துக்குடி கலவரம் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களை தமிழக அரசு தாக்கல் செய்யவேண்டும். பலியானவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைக்கப்பெறாத இறந்தவர்களின் உறவினர்கள், தூத்துக்குடி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யவேண்டும். அந்த மனுவை விசாரித்து, பிரேத பரிசோதனை அறிக்கையை இறந்தவர்களின் உறவினர்களுக்கு மாஜிஸ்திரேட்டு வழங்க வேண்டும்’’ என்று கூறினர்.