தேசிய செய்திகள்

மும்பை கனமழை: ரெயில் நிலையங்களில் சிக்கித்தவித்த பயணிகள் 1500 பேர் மீட்பு + "||" + Mumbai heavy rain: Trapped in train stations passengers get 1500 rescued

மும்பை கனமழை: ரெயில் நிலையங்களில் சிக்கித்தவித்த பயணிகள் 1500 பேர் மீட்பு

மும்பை கனமழை: ரெயில் நிலையங்களில் சிக்கித்தவித்த பயணிகள் 1500 பேர் மீட்பு
மும்பையில் பெய்து வரும் கனமழையால் ரெயில் நிலையங்களில் சிக்கித்தவித்த பயணிகள் 1500 பேர் பேரிடர் மீட்புக் குழுவினர் மூலம் மீட்கப்பட்டனர்.
மும்பை,

மராட்டியத்தில் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் பெய்து வரும் கனமழை தொடர்ந்து இன்று 4-வது நாளாக மழை நீடிக்கிறது.  இதன் காரணமாக மும்பை மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகிறார்கள். சுற்றுப்புற மாவட்டங்களும் வெள்ளத்தில் மிதக்கின்றன. மும்பை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களான தானே, ராய்காட், பால்கர் மாவட்டங்களில் இடைவிடாமல் கொட்டி வரும் மழை மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டிப் போட்டு உள்ளது. இந்த பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.


ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. நகர பகுதிகள் மற்றும் கிராமங்களில் பல இடங்களில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. அந்த பகுதிகளை சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். சாலைகள், தெருக்களிலும் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். மாநில தலைநகர் மும்பை வெள்ளத்தில் மிதக்கிறது. ரெயில் நிலையங்களையும் வெள்ளம் சூழ்ந்தது. மாட்டுங்கா, சயான், கல்வா, தானே, நாலச்சோப்ரா, டோம்பிவிலி ரெயில் நிலையங்களில் தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கின. மழை காரணமாக ரெயில் மற்றும் சாலை போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மும்பை நோக்கி வந்த சதாப்தி எக்ஸ்பிரஸ் மற்றும் வதோதரா எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நாலா சோபாரா மற்றும் வசாய் ரெயில் நிலையங்களுக்கு இடையில் நிறுத்தப்பட்டன. தண்டவாளத்தில் மழைநீர் அதிக அளவில் தேங்கியதால் ரெயிலை இயக்க முடியாத சூழ்நிலை நிலை ஏற்பட்டது. பயணிகளும் செய்வதறியாது தவித்தனர்.

இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்களுக்கு உதவியாக பேரிடர் மீட்புக்குழுவினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் படகுகள் மூலம் இரண்டு ரெயில்களிலும் பயணம் செய்த சுமார் 1500 பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் அங்கு தவித்து வந்த பயணிகளுக்கு 2000 உணவு பொட்டலங்கள் அவர்களால் வழங்கப்பட்டன. பின்னர் அவர்கள் மீட்கப்பட்டு, பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இன்னும் 2 நாட்களுக்கு மும்பையில் கனமழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அடுத்த 24 மணி நேரங்களுக்கு அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மும்பையில் கனமழை மற்றும் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது.