கிரிக்கெட்

டி.என்.பி.எல் கிரிக்கெட்: திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி த்ரில் வெற்றி + "||" + TNPL Cricket: Ruby Trichy Warriors win thriller against Dindigul Dragons

டி.என்.பி.எல் கிரிக்கெட்: திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி த்ரில் வெற்றி

டி.என்.பி.எல் கிரிக்கெட்:  திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி த்ரில் வெற்றி
டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி வெற்றிபெற்றது. #TNPL2018
நெல்லை,

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் ‘டி.என்.பி.எல்.’ என்று அழைக்கப்படும் தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2016-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதன் அறிமுக போட்டியில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியும், 2-வது சீசனில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின.


இந்நிலையில் 3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நெல்லையில் இன்று தொடங்கியது. இதில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில்,  அஷ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், பாபா இந்திரஜித் தலைமையிலான ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியும் மோதின.

டாஸ் வென்ற திண்டுக்கல் அணி கேப்டன் அஷ்வின் பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியில் அதிகபட்சமாக ராமலிங்கம் ரோகித் 30 பந்துகளில் 3 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் உட்பட 46 ரன்கள் சேர்த்தார். இறுதியில் திண்டுக்கல் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிக்கு 173 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியில், பரத் ஷங்கர் மற்றும் கேப்டன் பாபா இந்திரஜித் முதலாவதாக களமிறங்கினர். இதில் பாபா இந்திரஜித் 14(9) ரன்களில் வெளியேறினார். அவரைத்தொடர்ந்து பரத் ஷங்கருடன் அரவிந்த் ஜோடி சேர்ந்தார். சிறப்பாக விளையாடிய இருவரும் அணியின் ரன் ரேட்டை மெதுவாக உயர்த்தினர்.

அப்போது பரத் ஷங்கர் 39(31) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்து களமிறக்கிய கணபதி 5(5), அரவிந்த் 19(22), மணி பாரதி 3(5) ஆகியோர் கேட்ச் ஆகி வெளியேறினர். அதன் பிறகு களமிறங்கிய சுரேஷ் குமார் மற்றும் சோனு யாதவ் ஆகியோர் அதிரடியாக விளையாடி அணியின் ரன்ரேட்டை வேகமாக உயர்த்தினர். அப்போது சோனு யாதவ் 30(17) ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சஞ்சய், தனது அதிரடியின் மூலம் வெற்றிக்கு வித்திட்டார்.

கடைசியில் சுரேஷ் குமார் 45(24) ரன்களும், சஞ்சய் 11(5) ரன்களும் எடுத்து இறுதி வரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். இறுதியில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி 19.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றது.