மாநில செய்திகள்

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் 2 நாட்களுக்கு கனமழை வானிலை ஆய்வு மையம் தகவல் + "||" + Heavy weather forecasting information for 2 days

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் 2 நாட்களுக்கு கனமழை வானிலை ஆய்வு மையம் தகவல்

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் 2 நாட்களுக்கு கனமழை வானிலை ஆய்வு மையம் தகவல்
தென்மேற்கு பருவமழை வலுப்பெற்றுள்ளதால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,

தென்மேற்கு பருவமழை வலுப்பெற்றுள்ளதால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் 1–ந்தேதி தொடங்கி கேரளா, கர்நாடகா, மராட்டியம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தென்மேற்கு பருவமழை, வெப்பச்சலனம் காரணமாக பரவலாக மழை பெய்கிறது.

இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை கேரளா, தெற்கு உள்கர்நாடக பகுதிகளில் தீவிரம் அடைந்து இருக்கிறது. இதன் காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:–

தென்மேற்கு பருவமழை கேரளாவிலும், கர்நாடகாவிலும் வலுப்பெற்றுள்ள நிலையில் நீலகிரி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள வால்பாறை உள்ளிட்ட பகுதிகளிலும், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்து இருக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியின் இதர பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக மிதமான மழை பெய்துள்ளது.

இந்த நிலை அடுத்து வரும் 2 தினங்களுக்கு தொடரும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மிதமான மழை பெய்யும். பலத்த காற்று வீசுவதால் தென் கடலோர பகுதி மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப்போது வீசும் காற்றானது இயல்பான அளவில் தான் வீசுகிறது.

கடந்த ஜூன் மாதம் 1–ந்தேதி முதல் இந்த மாதம் 11–ந்தேதி(நேற்று) வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 6.8 செ.மீ. மழை பெய்து இருக்க வேண்டும். ஆனால் இப்போது 8.6 செ.மீ மழை பெய்து இருக்கிறது. இது இயல்பை விட 27 சதவீதம் அதிகம் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், கோவை சின்னக்கல்லாரில் 17 செ.மீ., வால்பாறையில் 15 செ.மீ., நீலகிரி தேவலாவில் 11 செ.மீ., ஜி.பஜாரில் 8 செ.மீ., தேனி பெரியாரில் 7 செ.மீ., நீலகிரி நடுவட்டத்தில் 6 செ.மீ., பொள்ளாச்சியில் 2 செ.மீ., ஊட்டி, பேச்சிப்பாறை, வாழப்பாடி, பொன்னேரி, ஏற்காடு, கூடலூர், வடசென்னை, மன்னார்குடி, கொடைக்கானல், காஞ்சீபுரத்தில் தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.