மாநில செய்திகள்

அப்பல்லோ மருத்துவர், செவிலியர் வாக்குமூலத்தில் முரண்பாடு தீவிர விசாரணை நடத்த ஆணையம் முடிவு + "||" + Apollo doctor, contradiction in nursing confession

அப்பல்லோ மருத்துவர், செவிலியர் வாக்குமூலத்தில் முரண்பாடு தீவிர விசாரணை நடத்த ஆணையம் முடிவு

அப்பல்லோ மருத்துவர், செவிலியர் வாக்குமூலத்தில் முரண்பாடு தீவிர விசாரணை நடத்த ஆணையம் முடிவு
சிகிச்சையின் போது ஜெயலலிதா இனிப்பு மற்றும் பழங்கள் சாப்பிட்ட விவகாரம் தொடர்பாக அப்பல்லோ மருத்துவர், செவிலியர் வாக்குமூலத்தில் முரண்பாடு இருப்பதால் இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளது.
சென்னை, 

சிகிச்சையின் போது ஜெயலலிதா இனிப்பு மற்றும் பழங்கள் சாப்பிட்ட விவகாரம் தொடர்பாக அப்பல்லோ மருத்துவர், செவிலியர் வாக்குமூலத்தில் முரண்பாடு இருப்பதால் இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளது.

ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. அப்பல்லோ மருத்துவர் ஷில்பா, செவிலியர் ஹெலனா ஆகியோர் நேற்று ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.

மருத்துவர் ஷில்பா அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

நான், 2016-ம் ஆண்டு அக்டோபர் 7-ந் தேதி பணியில் சேர்ந்தேன். அப்போது, ஜெயலலிதா உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. அபாயகரமான கட்டத்தில் இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருந்த நோயாளியாகவே ஜெயலலிதா இருந்தார். ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட டிசம்பர் 4-ந் தேதி அன்று நான், இரவு பணிக்கு வந்தேன்.

நான் பணிக்கு வந்தபோது, ஜெயலலிதாவுக்கு இருதயம் செயல் இழந்து போய் அதை செயலுக்கு கொண்டுவர பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு இறுதியாக ‘எக்மோ’ பொருத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. ஜெயலலிதாவுக்கு ‘எக்மோ’ பொருத்தப்படுவதற்கு முன்பாக அவரது இருதயத்தை கையால் மசாஜ் செய்து செயலுக்கு கொண்டுவர முயற்சித்து அது பயன் அளிக்காமல் போனதும் ‘கரண்ட் ஷாக்’ கொடுத்து செயலுக்கு கொண்டுவர முயற்சித்துள்ளனர்.

அதுவும் பயன் அளிக்காமல் போகவே, இருதயத்தை பிளந்து நேரடியாக இருதய பகுதியில் மசாஜ் செய்து உயிரூட்ட முயற்சித்துள்ளனர். அதுவும் பயன் அளிக்காததால் மார்பு எலும்புகள் துண்டிக்கப்பட்டு இருதய பகுதியில் ‘எக்மோ’ பொருத்தப்பட்டதாக தெரிந்துகொண்டேன்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக ஆணையம் தரப்பில் கூறப்படுகிறது.

செவிலியர் ஹெலனா அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

நான், 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பணியில் சேர்ந்தேன். நான் பணியில் இருந்த நாட்களில் சசிகலா, மருத்துவர் சிவக்குமாரை தவிர வேறு யாரும் ஜெயலலிதாவை அவர் சிகிச்சை பெற்று வந்த வார்டில் பார்க்கவில்லை. கண்ணாடி வழியாகவும் யாரும் பார்க்கவில்லை. டிசம்பர் 2-ந் தேதி மூச்சுத்திணறல் காரணமாக ஜெயலலிதாவுக்கு வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டது.

3-ந் தேதி காலை 11 மணிக்கு வெண்டிலேட்டர் எடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மதியம் 1 மணிக்கு மீண்டும் சீரியஸ் ஆனதால் உடனடியாக வெண்டிலேட்டர் இணைக்கப்பட்டது. இதன்பின்பு, இருதயம் செயல் இழக்கும் வரை ஜெயலலிதாவுக்கு வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டிருந்தது. சிகிச்சையில் இருந்தபோது ஜெயலலிதாவுக்கு இனிப்பு கொடுத்ததாக கூறுவது தவறு. எனக்கு தெரிந்தவரை ஜெயலலிதா இனிப்பு, பழங்கள் எதுவும் சாப்பிடவில்லை.

இவ்வாறு வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.

‘டிசம்பர் 4-ந் தேதி அதிகாலை ஜெயலலிதா 50 மில்லி காபி குடித்தார். அதன்பின்பு, ஜெயலலிதா எந்த உணவும் எடுத்துக்கொள்ளவில்லை’ என்று ஹெலனா தனது வாக்குமூலத்தில் கூறி உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சாட்சியம் அளித்த அப்பல்லோ மருத்துவர் ரமா, டிசம்பர் 4-ந் தேதி மதியம் ஜெயலலிதா சாப்பாடு சாப்பிட்டதாக கூறி உள்ளார்.

டிசம்பர் 2 மற்றும் 3-ந் தேதி ஜெயலலிதாவுக்கு வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டதாக செவிலியர்களின் குறிப்பில் உள்ளது. இதுதொடர்பாக செவிலியர் ஹெலனாவும் வாக்குமூலம் அளித்துள்ளார். ஆனால், மருத்துவர்களின் குறிப்பில் வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டது சம்பந்தமாக எந்த குறிப்பும் இல்லை. மாறாக டிசம்பர் 2 மற்றும் 3-ந் தேதிகளில் ஜெயலலிதாவின் உடல்நிலை நார்மலாக இருந்ததாக மருத்துவர்களின் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

‘நவம்பர் 22-ந் தேதி தேர்தல் வெற்றியை கொண்டாட ஜெயலலிதா இனிப்பு எடுத்துக்கொண்டார்’ என்று அப்பல்லோ மருத்துவர் ஜெயஸ்ரீகோபால் வாக்குமூலம் அளித்துள்ளார். அப்பல்லோ மருத்துவ அறிக்கையில், ‘ஜிலேபி, ரசகுல்லா, பாதுஷா மற்றும் திராட்சை, மாம்பழம், மலைவாழைப்பழம் போன்றவற்றை ஜெயலலிதா எடுத்துக்கொண்டார்’ என்று கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதா இனிப்பு, பழங்கள் சாப்பிடவில்லை என்று செவிலியர் ஹெலனா வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதுபோன்று அப்பல்லோ மருத்துவர்கள், செவிலியர்களின் வாக்குமூலம் முன்னுக்கு பின் முரணாக உள்ளது. அதேபோன்று மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ள விஷயங்களும், மருத்துவர்கள், செவிலியர்களின் வாக்குமூலமும் முரண்பாடாக உள்ளது. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளது.