மாநில செய்திகள்

நீர்வரத்து 37 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு மேட்டூர் அணை நீர்மட்டம் 73 அடியை எட்டியது 4 நாட்களில் 10 அடி உயர்ந்தது + "||" + The Mettur dam water level reached 73 feet

நீர்வரத்து 37 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு மேட்டூர் அணை நீர்மட்டம் 73 அடியை எட்டியது 4 நாட்களில் 10 அடி உயர்ந்தது

நீர்வரத்து 37 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு மேட்டூர் அணை நீர்மட்டம் 73 அடியை எட்டியது 4 நாட்களில் 10 அடி உயர்ந்தது
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 37 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து உள்ளதால், அணையின் நீர்மட்டம் 73 அடியை எட்டியது.
மேட்டூர், 

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 37 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து உள்ளதால், அணையின் நீர்மட்டம் 73 அடியை எட்டியது. கடந்த 4 நாட்களில் 10 அடி வரை உயர்ந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளதால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் உள்பட முக்கிய அணைகள் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளன. இதன் காரணமாக இந்த அணைகளுக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 53,768 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

இவ்வாறு திறந்து விடப்படும் தண்ணீர் தமிழகம் மற்றும் கர்நாடக எல்லைப்பகுதியான பிலிகுண்டுலுவை கடந்து, மேட்டூர் அணைக்கு வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 32 ஆயிரத்து 284 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை அதிகரித்து 34,426 கனஅடி வீதம் வந்தது. மாலையில் மேலும் அதிகரித்து 37 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது.

இதன் எதிரொலியாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த 9-ந் தேதி 63.72 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் 10-ந் தேதி 65.15 அடியாக உயர்ந்தது. அது நேற்று முன்தினம் 70 அடியாக உயர்ந்தது. அது நேற்று மாலை நிலவரப்படி 73 அடியாக இருந்தது.

அதாவது, கடந்த 4 நாட்களில் மட்டும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 10 அடி வரை உயர்ந்து உள்ளது. நீர்வரத்தானது இதேபோல் அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 73 அடியை எட்டியதால் அணையின் நீர்த்தேக்க பகுதியில் உள்ள வீரபத்திரன் கோவில், ராஜா கோட்டை, ஜலகண்டேஸ்வரர் ஆலய முகப்பு, நந்தி சிலை ஆகியவை தண்ணீரில் முழுமையாக மூழ்கின. தொடர்ந்து அணைக்கு அதிக நீர் வருவதால் கிறிஸ்தவ கோவில் கோபுரமும் விரைவில் மூழ்கும் நிலையில் உள்ளது.

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருவிகளில் நேற்று 3-வது நாளாக வெள்ளப்பெருக்கு நீடித்தது. அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அருவிகளில் குளிக்கவும் தடை நீடிக்கிறது. பரிசல்கள் இயக்கப்படாமல் ஆற்றங்கரையோர பகுதிகளில் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்தன.

ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளை போலீசார், தீயணைப்பு படையினர் மற்றும் வருவாய்த்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். ஒகேனக்கல், மேட்டூர் சுற்றுவட்டார பகுதிகளில் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ஏற்கனவே வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தொடர் கனமழையால் 118 அடியை எட்டி உள்ள கிருஷ்ணராஜசாகர் அணை வருகிற 20-ந் தேதிக்குள் தனது முழு கொள்ளளவான 124.80 அடியை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் வருகிற 20-ந் தேதி முதல்-மந்திரி குமாரசாமி கே.ஆர்.எஸ். அணையில் சிறப்பு பூஜை செய்து வழிபட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.