மாநில செய்திகள்

‘பண்டைய தமிழ் இலக்கியங்களை அழிவில் இருந்து மீட்டவர் உ.வே.சா.’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேச்சு + "||" + U.V.S. saved Tamil literature from ruins

‘பண்டைய தமிழ் இலக்கியங்களை அழிவில் இருந்து மீட்டவர் உ.வே.சா.’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேச்சு

‘பண்டைய தமிழ் இலக்கியங்களை அழிவில் இருந்து மீட்டவர் உ.வே.சா.’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேச்சு
‘பண்டைய தமிழ் இலக்கியங்களை அழிவிலிருந்து மீட்டவர் உ.வே.சா.’ என்று சென்னையில் நடந்த விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசினார்.
சென்னை, 

சென்னையில் உள்ள டாக்டர் உ.வே.சாமிநாத அய்யர் நூல் நிலையத்தின் 75-வது ஆண்டு நிறைவு பவள விழா மற்றும் ‘உ.வே.சாமிநாத அய்யர் கடித கருவூலம்’ என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் ப.துரைசாமி தலைமை தாங்கினார். நூலை கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட, வி.ஐ.டி. வேந்தர் ஜி.விஸ்வநாதன் பெற்றுக்கொண்டார்.

விழாவுக்கு தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி, தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ.சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் நூலாசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி கவுரவிக்கப்பட்டார்.

விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசியதாவது:-

தமிழ் மொழி அறிஞரான உ.வே.சுவாமிநாத அய்யர் அழிந்துபோகும் நிலையிலிருந்த பண்டைய தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டு பதிப்பித்தார். சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், புராணங்கள் என 90-க்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகளுக்கு நூல்வடிவம் தந்தார். சங்ககாலத் தமிழும் பிற்காலத் தமிழும், புதியதும் பழையதும், நல்லுரைக் கோவை போன்ற பல உரைநடை நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். உ.வே.சா. கருத்தாழத்தோடு நகைச்சுவை இழையோட பேசும் திறமை உடையவர்.

சென்னை பல்கலைக்கழகத்தில் உ.வே.சா ஆற்றிய சொற்பொழிவே ‘சங்ககாலத் தமிழும் பிற்காலத்தமிழும்’ எனும் நூலாக வெளியிடப்பட்டது. உ.வே.சா. தமிழுக்கும் இலக்கியத்துக்கும் ஆற்றிய பங்களிப்பினை பாராட்டி 1932-ம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் பட்டம் அளித்தது.

இவருடைய வாழ்க்கை வரலாறு தமிழ்பால் அன்பு கொண்ட அனைவரும் போற்றும் ஒரு பொக்கிஷமாகும். பல்வேறு கடினமான சூழ்நிலையிலும் தமிழை விடாமுயற்சியுடன் கற்றுக்கொண்டதால், பிற்காலத்தில் அடைந்த இமாலய வெற்றிக்கு இவர் கற்ற கல்வியும், விடாமுயற்சியும் பெரும் அடித்தளமாக அமைந்தது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் இல.கணேசன் எம்.பி. உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக நூல் நிலைய செயலாளர் தி.சத்தியமூர்த்தி வரவேற்றார். பேராசிரியர் ய.மணிகண்டன் நன்றி கூறினார்.