மாநில செய்திகள்

குரங்கணி தீவிபத்து விசாரணை அறிக்கை தாக்கல் முதல்-அமைச்சரிடம் ஐ.ஏ.எஸ். அதிகாரி அதுல்யா மிஸ்ரா வழங்கினார் + "||" + File a report of the monkey fire firing

குரங்கணி தீவிபத்து விசாரணை அறிக்கை தாக்கல் முதல்-அமைச்சரிடம் ஐ.ஏ.எஸ். அதிகாரி அதுல்யா மிஸ்ரா வழங்கினார்

குரங்கணி தீவிபத்து விசாரணை அறிக்கை தாக்கல் முதல்-அமைச்சரிடம் ஐ.ஏ.எஸ். அதிகாரி அதுல்யா மிஸ்ரா வழங்கினார்
குரங்கணி காட்டுத்தீ விபத்து தொடர்பாக முதல்-அமைச்சரிடம் விசாரணை அறிக்கையை ஐ.ஏ.எஸ். அதிகாரி அதுல்யா மிஸ்ரா வழங்கினார்.
சென்னை, 

தேனி மாவட்டம், போடி குரங்கணி மலைப்பகுதியில் 11.3.18 அன்று ஏற்பட்ட தீ விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் பலியாயினர். இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் முதன்மை செயலாளர் அதுல்யா மிஸ்ராவை விசாரணை அதிகாரியாக அரசு நியமித்து உத்தரவிட்டது.

அதில், குரங்கணி மலையில் மலையேற்றம் சென்றவர்கள் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்த சூழ்நிலை எப்படி ஏற்பட்டது?, மலையேற்ற சுற்றுலாவை ஏற்பாடு செய்யும் நிறுவனங்கள் மற்றும் வனத்துறை அலுவலர்களால் ஏற்பட்ட குறைபாடுகள் என்ன?, எதிர்காலங்களில் இதுபோன்ற நிகழ்வு ஏற்படுவதை தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் தமிழ்நாடு அரசுக்கு 2 மாதங்களுக்குள் பரிந்துரைகளை வழங்க வேண்டும் என்றும் அதுல்யா மிஸ்ராவுக்கு அரசு உத்தரவிட்டு இருந்தது.

அதைத்தொடர்ந்து, தீ விபத்து தொடர்பாக விசாரணை செய்து, அது சம்பந்தப்பட்ட அறிக்கையை தயாரித்து தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம், அதுல்யா மிஸ்ரா நேற்று வழங்கினார். அந்த அறிக்கை குறித்து அரசு வட்டாரத்தில் தெரிவித்த தகவல்கள் வருமாறு:-

குரங்கணி சம்பவத்துக்கு வனத்துறை அலுவலர்களின் கவனக்குறைவும் காரணம். மலையேற்றத்துக்காக, முறையாக பயிற்சி இல்லாத ஆட்களுடன் சென்றுள்ளனர். கவனக்குறைவாக செயல்பட்ட சில வனத்துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

விபத்து காலங்களில் உடனடியாக நடவடிக்கை எடுக்க சிறப்பு படையை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தீ எச்சரிக்கை தகவல்கள் அனுப்பப்பட வேண்டும். வெள்ளம், புயல், விபத்து காலகட்டத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்பதை சுட்டிக்காட்டும் செயல்பாட்டு முறைகளை காட்டுத் தீ விபத்துக்காகவும் உருவாக்க வேண்டும்.

காட்டுப் பகுதிகளில் முறையாக அனுமதி பெறாத தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றை முறைப்படுத்த வேண்டும். நன்றாக பயிற்சி பெற்ற மலையேற்ற பயிற்சி வீரர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அறிக்கையை தயாரிப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த அறிக்கை 125 பக்கங்களை கொண்டுள்ளதாக தெரிகிறது.