மாநில செய்திகள்

இன்று நடைபெற இருந்த ரே‌ஷன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு + "||" + Ration shop staff strike postponed

இன்று நடைபெற இருந்த ரே‌ஷன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு

இன்று நடைபெற இருந்த ரே‌ஷன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு
இன்று நடைபெற இருந்த ரே‌ஷன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு
சென்னை, 

தமிழ்நாட்டில் 35,169 ரே‌ஷன் கடைகள் உள்ளன. இதில், 25,589 முழு நேரக்கடைகளும், 9,580 பகுதி நேரக்கடைகளும் அடங்கும். இந்த கடைகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். 1 கோடியே 96 லட்சத்து 16 ஆயிரத்து 93 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சம வேலைக்கு சம ஊதியம், அனைத்து ரே‌ஷன் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கான முழு ஒதுக்கீடு, ஊழியர்களுக்கு ஓய்வூதியம், பணிநிரந்தரம், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை ரே‌ஷன் கடை ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக பல்வேறு கட்ட போராட்டங்களையும் அவர்கள் முன் எடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில் தமிழ்நாடு கூட்டுறவு நியாயவிலைக்கடை அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் திட்டமிட்டப்படி ஆகஸ்டு 6–ந் தேதி (அதாவது, இன்று) ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

மொத்தம் உள்ள 35 ஆயிரம் ரே‌ஷன் கடைகளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் இன்று அடைக்கப்படும் என்றும், பணிபுரியும் 50 ஆயிரம் ஊழியர்களில் 35 ஆயிரம் ஊழியர்கள் இன்றைய வேலை நிறுத்தத்தில் பங்கேற்பார்கள். எனவே, பொருட்கள் வினியோகம் வெகுவாக பாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து தமிழ்நாடு கூட்டுறவு நியாயவிலைக்கடை அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகளை தமிழக அரசு நேற்று பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. அதன்படி சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் பதிவாளர் பழனிசாமி, கூடுதல் பதிவாளர் கோவிந்தராஜன் ஆகியோரது முன்னிலையில் நேற்று மாலை 5.30 மணியளவில் பேச்சுவார்த்தை தொடங்கியது.

அ.தி.மு.க., தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்பட அனைத்து கட்சிகளின் தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளும் கூட்டத்தில் பங்கேற்றனர். பேச்சுவார்த்தை இரவு 8.45 மணி வரை நீடித்தது. இதில் சுமுக தீர்வு எட்டப்பட்டது. இதையடுத்து இன்று நடைபெற இருந்த வேலைநிறுத்த போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக சி.ஐ.டி.யு (கூட்டுறவு பணியாளர் சம்மேளனம்) பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:–

எங்களுடைய கோரிக்கைகளை 2 மாதத்தில் குழு அமைத்து நிறைவேற்றி தருவதாக அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளித்துள்ளனர். எனவே நாங்கள் இன்று அறிவித்திருந்த வேலைநிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக திரும்ப பெற்றுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.