மாநில செய்திகள்

பழங்கால கார்கள்-மோட்டார் சைக்கிள்கள் கண்காட்சி சென்னையில் நடந்தது + "||" + Antique Cars-Motorcycles Exhibition

பழங்கால கார்கள்-மோட்டார் சைக்கிள்கள் கண்காட்சி சென்னையில் நடந்தது

பழங்கால கார்கள்-மோட்டார் சைக்கிள்கள் கண்காட்சி சென்னையில் நடந்தது
பழமையை நினைவுபடுத்தும் விதமாக சென்னையில் பாரம்பரிய கார்கள்-மோட்டார் சைக்கிள்கள் கண்காட்சி நேற்று நடைபெற்றது.
சென்னை,

‘மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டரிங் கிளப்’ சார்பில் பழமையை நினைவுபடுத்தும் விதமாக சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்சன் சென்டரில் பழங்கால கார்கள்-மோட்டார் சைக்கிள்கள் கண்காட்சி நேற்று நடைபெற்றது. கண்காட்சியை நடிகர் சத்யராஜ் தொடங்கி வைத்தார்.

கண்காட்சியில் 1923-ம் ஆண்டில் இருந்து 1975-ம் ஆண்டு வரை ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ் உள்பட பல்வேறு நாடுகளில் புழக்கத்தில் இருந்த ஜாக்குவார், எம்.ஜி., டாட்ஜ் பிரதர்ஸ், செவர்லெட், போர்டு, பீகட், ஆஸ்டின் மற்றும் மெர்சடிஸ் போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களின் வாகனங்கள் சுமார் 130-க்கும் மேற்பட்ட கார்களும், மேட்ஜ்லெஸ், தி ஊல்ப், பி.எஸ்.ஏ., சுசுகி ஆர்.வி.90, பஜாஜ் போன்ற பழமையான 84 மோட்டார் சைக்கிள்களும் என மொத்தம் 200-க்கும் மேற்பட்ட வாகனங்களை அதன் உரிமையாளர்கள் கொண்டு வந்தனர்.

இந்த கண்காட்சியை பார்வையிடுவதற்காக சென்னை மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பார்வையாளர்கள் வந்திருந்தனர்.

‘போர்டு டி ரோட்ஸ்டர்’(1923), ஆஸ்டின் சும்மி(1926), ஆஸ்டின் பெர்ஹாம் சலூன்(1930), ஸ்டர்ட்பேக்கர் பிரசிடெண்ட்(1956), செவரோலேட் இம்பாலா(1962), இந்துஸ்தான் 14(1949), மெர்சடிஸ் பென்ஸ் 170வி(1938), போர்டு பேரலைன்(1966), போர்டு மஸ்டாங்(1967), எம்.ஜி.டி.சி. (1947), பக்பியட்(1948), மெர்சடிஸ் பென்ஸ் பான்டான்(1954), மோரிஸ் இ டூரர்(1946) போன்ற பாரம்பரிய வாகனங்கள் பார்வையாளர்களின் கண்களை வெகுவாக கவர்ந்தன.

அதுமட்டுமல்லாமல் முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். பயன்படுத்திய டாட்ஜ் கிங்ஸ்வே கார், ஏ.வி.எம். ஸ்டூடியோ நிறுவனர் ஏ.வி.மெய்யப்பன் பயன்படுத்திய வாக்ஸ்ஹால் கார், ஜெமினி ஸ்டூடியோ அதிபர் எஸ்.எஸ்.வாசன் பயன்படுத்திய வாக்ஸ்ஹால் வெலாக்ஸ் கார், டி.வி.சுந்தரம் அய்யங்கார் பயன்படுத்திய செவரோலேட் மாஸ்டர் பேன்டான் காரும், ரஜினிகாந்த் நடிப்பில் ‘சிவாஜி’ படத்தில் வரும் ஒரு பாடலில் பயன்படுத்தப்பட்ட எம்.ஜி.டி.பி. காரும் கண்காட்சியில் இடம்பெற்று இருந்தன.

இன்றைய கால இளையதலைமுறை பலர் இந்த பழமையான கார்களுக்கு முன்பு நின்றுக்கொண்டு ‘செல்பி’ எடுத்தும், அந்த கார்களை பற்றிய வரலாற்றையும் ஆர்வமுடன் கேட்டனர்.

இதுகுறித்து ‘மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டரிங் கிளப்’ செயலாளர் வி.எஸ்.கைலாஷ் கூறுகையில், ‘2002-ம் ஆண்டு முதல் பாரம்பரிய கார்கள் கண்காட்சியை நாங்கள் நடத்தி வருகிறோம். பழமையை நினைவுப்படுத்தும் வகையில் இந்த கார்கள்-மோட்டார் சைக்கிள்கள் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதில் பலர் ஆர்வமுடன் பங்கு பெறுகிறார். இது எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. இதுபோன்ற பழமையான கார்களை சாலையில் ஓட்டி வருவது தனி ‘திரில்’ தான். அதை உணர்ந்தவர்களுக்கு தெரியும்’ என்றார்.

கண்காட்சியில் இடம் பெற்று இருந்த கார்களில் சுமார் 65 கார்கள் சென்னையை சேர்ந்த ரஞ்சித் பிரதாப் என்பவருக்கு சொந்தமானது. பாரம்பரிய கார்கள் பற்றி அவரிடம் கேட்டபோது, ‘சின்னவயதில் இருந்து பழமையான கார்கள் மீது எனக்கு தீராத ஆசை. அப்போது எனக்கு என் அப்பா வாங்கித்தரவில்லை. ஆனால் இப்போது நான் தொழில் அதிபர் ஆகி, என்னுடைய ஆசையை நிவர்த்தி செய்து வருகிறேன். இது எனக்கு தொழில் இல்லை. பொழுதுபோக்குக்காக தான் செய்கிறேன். தபால் தலை(ஸ்டாம்ப்), நாணயம்(காயின்) எப்படி சேகரிக்கிறார்களோ? அதேபோல், நான் பாரம்பரிய கார்களை சேகரிக்கிறேன். இந்த கார்களை நான் குழந்தை போல பார்த்துக் கொள்கிறேன். இதை வாங்குவதை விட பராமரிப்பது தான் மிகவும் கஷ்டம்’ என்றார்.

அதேபோல் கண்காட்சியில் பங்குபெற்ற தொழில் அதிபர் ஜெயராமையா கூறும்போது, ‘நான் எம்.ஜி.டி.சி., பக் பியட் ஆகிய 2 பழமையான கார்களை இந்த கண்காட்சிக்கு கொண்டு வந்து இருக்கிறேன். கடந்த 25 ஆண்டுகளாக இந்த காரை பராமரிக்கிறேன். இதை பராமரிப்பதற்கு ஆர்வம் இருக்க வேண்டும். உதிரிபாகங்கள் கிடைப்பது கஷ்டம். அதனால் கண்ணாடி போல இந்த காரை பார்த்து கொள்கிறேன். தினமும் இந்த காரில் தான் காலையில் நடைபயிற்சி செய்ய கடற்கரைக்கு செல்வேன். அந்த அளவுக்கு அன்றாட வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த கண்காட்சியில் பங்குபெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்.

கண்காட்சியில் இடம் பெற்று இருந்த கார்களின் வடிவமைப்பு, மெக்கானிக்கல், அழகுப்படுத்துதல், ஒரிஜினல் உதிரிபாகங்கள் ஆகியற்றை அடிப்படையாக வைத்து சிறந்த கார்களை நடுவர் கள் தேர்வு செய்தனர். அந்த கார்களின் உரிமையாளர்களுக்கு ‘பெடரேஷன் ஆப் ஹிஸ்டாரிக் வேகிள்ஸ்’ தலைவர்(இந்தியா) ரவி பிரகாஷ் பரிசுகள் வழங்கினார்.