மாநில செய்திகள்

கருணாநிதி உடல் நலம் : மருத்துவமனை முன் மீண்டும் திரண்ட திமுக தொண்டர்கள்; பாதுகாப்பு அதிகரிப்பு + "||" + Karunanidhi's health: DMK volunteers re-gathered before the hospital; Increase in security

கருணாநிதி உடல் நலம் : மருத்துவமனை முன் மீண்டும் திரண்ட திமுக தொண்டர்கள்; பாதுகாப்பு அதிகரிப்பு

கருணாநிதி உடல் நலம் : மருத்துவமனை முன் மீண்டும் திரண்ட  திமுக தொண்டர்கள்; பாதுகாப்பு அதிகரிப்பு
கருணாநிதி உடல் நலம் குறித்து வந்த தகவலை அடுத்து காவேரி மருத்துவமனை முன் திமுக தொண்டர்கள் மீண்டும் திரண்டு உள்ளனர். இதனால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. #Karunanidhi #DMK
சென்னை,

வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கடந்த 27-ந் தேதி நள்ளிரவில் திடீரென்று மோசமானது. இதைத்தொடர்ந்து அ நள்ளிரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கருணாநிதியின் உடல்நிலையை டாக்டர்கள் குழுவினர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இன்றுடன் 10 நாட்கள் ஆகின்றன.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் காவேரி ஆஸ்பத்திரிக்கு வந்து கருணாநிதியை நேரில் பார்த்து உடல் நலம் விசாரித்து சென்றனர்.

மேலும் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், முன்னாள் பிரதமர் தேவேகவுடா, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், ஆந்திர முதல்- மந்திரி சந்திரபாபு நாயுடு உள்பட பல்வேறு தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும்  ரஜினிகாத், கமல்ஹாசன் உள்பட திரையுலக பிரபலங்கள் ஆஸ்பத்திரிக்கு வந்து உடல்நலம் விசாரித்து சென்றனர்.

அந்த வகையில் கருணாநிதியை நேரில் பார்த்து உடல் நலம் விசாரிப்பதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று சென்னை வந்தார்.
கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் அறைக்கு சென்று அவரை பார்த்தார். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி. மற்றும் டாக்டர்களிடம் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.

இன்று 10-வது நாளாக கருணாநிதிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று காலை காவேரி மருத்துவமனைக்கு  ஸ்டாலின், கனிமொழி, ராஜாத்தி அம்மாள், ஆ.ராசா, கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் வருகை தந்தனர்.

மு.க. அழகிரி மருத்துவமனைக்குக்கு வருகை தந்துள்ளார்.திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனைக்கு இன்று முதன் முறையாக தயாளு அம்மாள் வருகை தந்தார்.  

தயாளு அம்மாளுடன் மு.க.தமிழரசு, துரை தயாநிதி, அருள்நிதி உள்ளிட்டோரும் காவேரி மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.  

வயது முதிர்வு காரணமாக கருணாநிதி உடல்நிலையில் ஏற்றமும்-இறக்கமுமாக காணப்படுவதாக டாக்டர்கள் சொல்கிறார்கள்

இந்த நிலையில்  கருணாநிதி உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டு இருப்பதாக இன்று மதியம் தகவல்கள் வெளியானது. இது தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

கருணாநிதியின் தனி மருத்துவர் கோபால், முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, ஐ.பெரியசாமி, கே.என்.நேரு ஆகியோரும் காவேரி மருத்துவமனை வருகை தந்து உள்ளனர். திராவிடர் கழகத் தலைவர் வீரமணி மருத்துவமனை வருகை தந்துள்ளார். 

கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரித்த திருநாவுக்கர்சர் பேட்டி அளிக்கும் போது  அவரின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள், குடும்ப உறுப்பினர்களிடம் கேட்டறிந்தேன்.  திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில்  பின்னடைவு ஏற்பட்டு தற்போது கண்காணிப்பில் உள்ளார் என கூறினார். 

இரண்டு அல்லது மூன்று நாட்களில் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கருணாநிதி தற்போது மீண்டும் தீவிர சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார். இதனால் ஸ்டாலின், தயாளு அம்மாள் உள்ளிட்ட கருணாநிதி குடும்பத்தினர் மீண்டும் காவேரி மருத்துவமனைக்கு வருகை புரிந்துள்ளனர்.

இதனால் காவேரி மருத்துவமனை முன் மீண்டும் திமுக தொண்டர்கள் கூடி வருகிறார்கள். நூற்றுக்கணக்கான தொண்டர்கள் மீண்டும் அங்கே கூடி வருகிறார்கள். 

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்த காவேரி மருத்துவமனையின் அறிக்கை மாலை 6 மணிக்கு மேல் வெளியாகும் என தகவல் கள் தெரிவிக்கின்றன.