மாநில செய்திகள்

சிலை முறைகேடு வழக்கு; இந்து அறநிலைய துறை அதிகாரி கவிதாவுக்கு நிபந்தனை ஜாமீன் + "||" + Statute bribery case; Conditional bail of the Hindu chancellery officer Kavitha

சிலை முறைகேடு வழக்கு; இந்து அறநிலைய துறை அதிகாரி கவிதாவுக்கு நிபந்தனை ஜாமீன்

சிலை முறைகேடு வழக்கு; இந்து அறநிலைய துறை அதிகாரி கவிதாவுக்கு நிபந்தனை ஜாமீன்
சிலை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட இந்து அறநிலைய துறை அதிகாரி கவிதாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.
சென்னை,

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் கடந்த 2015ம் ஆண்டு சோமாஸ்கந்தர் சிலையும், ஏலவார்குழலி சிலையும் புதிதாக செய்யப்பட்டது.

இந்த சிலைகள் செய்ததில் தங்கம் முறைகேடு நடந்து இருப்பதாக புகார் எழுந்தது. சோமாஸ்கந்தர் சிலை 111 கிலோ எடையிலும், ஏலவார்குழலி சிலை 65 கிலோ எடையிலும் செய்யப்பட்டது.

2 சிலைகளிலும் 8.75 கிலோ தங்கம் சேர்க்கப்பட்டு இருக்க வேண்டும். இந்த தங்கம் பக்தர்களிடம் இருந்து நன்கொடை மூலம் பெறப்பட்டது. ஆனால், இது தொடர்பாக எழுந்த புகாரில் 2 சிலைகளிலும் சிறிது அளவு கூட தங்கம் சேர்க்கப்படவில்லை என்றும், 8.75 கிலோ தங்கமும் முறைகேடு மூலம் மோசடி செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

இது தொடர்பாக தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த ஜனவரி மாதம் வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கினார்கள். ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி உள்ளிட்ட 4 போலீஸ் அதிகாரிகள் அடங்கிய தனிப்படை போலீசார் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.

குறிப்பிட்ட 2 சிலைகளையும் சென்னை ஐ.ஐ.டி. நிபுணர்கள் 2 முறை சோதனை செய்து பார்த்தனர். சோதனையில் அந்த சிலைகளில் சிறிதளவுகூட தங்கம் சேர்க்கப்படவில்லை என்று கண்டறியப்பட்டது. 8.75 கிலோ எடை தங்கத்தையும் முறைகேடு மூலம் மோசடி செய்து இருப்பது வெளிச்சத்துக்கு வந்தது.

இந்த வழக்கில் அறநிலையத்துறை தலைமை ஸ்தபதி முத்தையா உள்ளிட்ட 9 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அவர்களில் முத்தையா ஸ்தபதி உள்ளிட்ட 6 பேர் முன்ஜாமீன் பெற்றுவிட்டனர்.

இந்த நிலையில், அறநிலையத்துறை உயர் அதிகாரிகளுக்கு தங்கம் முறைகேட்டில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

அறநிலையத்துறையின் முன்னாள் ஆணையர் ஒருவருக்கும், தற்போதைய கூடுதல் ஆணையர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது உறுதிபட தெரியவந்தது.

அதுபற்றி நடத்திய விசாரணையில் தங்கம் முறைகேட்டில் ஈடுபட்டது அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் (கோவில் திருப்பணிகள்) கவிதா என்பது தெரியவந்தது.  இதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.  அவரை வருகிற 14ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இந்து அறநிலைய துறை கூடுதல் ஆணையர் கவிதாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து அவர் திருச்சியில் 30 நாட்கள் தங்கியிருக்க வேண்டும் என்றும் ஆணை பிறப்பித்து உள்ளது.  தேவைப்படும்பொழுது கும்பகோணத்தில் ஆஜராகவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.