மாநில செய்திகள்

திமுக தலைவர் கருணாநிதி நல்லடக்கம்: தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு ஸ்டாலின் நன்றி + "||" + DMK leader Karunanidhi Nalanda: Thanks to Stalin for the leaders and volunteers

திமுக தலைவர் கருணாநிதி நல்லடக்கம்: தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு ஸ்டாலின் நன்றி

திமுக தலைவர் கருணாநிதி நல்லடக்கம்: தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு ஸ்டாலின் நன்றி
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது தொடர்பாக தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். #Karunanidhi #RIPKarunanidhi
சென்னை,

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நல குறைவால் நேற்று(செவ்வாய்க்கிழமை) மாலை காலமானார். அவருக்கு வயது 95. இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரும் ஆளுமைகளில் ஒருவரான கருணாநிதியின் மறைவுக்கு, ஜனாதிபதி, பிரதமர் மோடி, தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி உள்பட தேசிய தலைவர்கள், திரை பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர்.


குடும்பத்தினர் அஞ்சலிக்காக கோபாலபுரம் மற்றும் சிஐடி காலனி இல்லத்தில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை வைக்கப்பட்டு இருந்த  கருணாநிதியின் உடல், அதிகாலை 5 மணியளவில், பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டது. திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு தேசியக் கொடி போர்த்தி ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது. கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த, திமுக தொண்டர்கள் பல ஆயிரக்கணக்கில் திரண்டு வந்தனர். தங்கள் தலைவருக்கு  கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்த குவிந்து இருந்த தொண்டர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் மாலை 4 மணியளவில் துவங்கியது. முப்படை  வீரர்கள் அவரது உடலை அலங்கரிக்கப்பட்ட ராணுவ  வண்டியில் ஏற்றிக்கொண்டு சென்றனர். அண்ணாசாலை, வலாஜா சாலை வழியாக,  கருணாநிதியின் உடல் ராணுவ வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது. பொதுமக்கள், தொண்டர்கள் கண்ணீர் கடலில் மிதந்தபடி திமுக தலைவர் கருணாநிதியின் உடல் மெரினாவுக்கு சென்றது. வழியெங்கும் வாழ்த்து முழக்கங்களை இட்ட படி, கண்ணீருடன் திமுக தொண்டர்கள் பின் தொடர்ந்தனர்.

பின்னர் மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு தரைப்படை, கப்பற்படை, விமானப்படை வீரர்கள் மரியாதை செலுத்தினர். இதையடுத்து, மெரினாவில் காத்திருந்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் தேவகவுடா, உள்பட தேசிய தலைவர்கள் மரியாதை செலுத்தினர். ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழக அரசு சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோரும் கருணாநிதி உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். பின்னர் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை அளிக்கப்பட்டது. முழு அரசு மரியாதையுடன் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள கடிதத்தில், “நல்லடக்கம் வரை கண்கலங்கி நின்றாலும் கட்டுப்பாடு காத்த தொண்டர்களுக்கு நன்றிகள் சொல்ல வார்த்தைகள் இல்லை, கருணாநிதியின் இலட்சிய தீபத்தை கையில் எடுத்து தமிழர்களுக்கு பெருமை சேர்க்க வேண்டியுள்ளது. ஈடுசெய்ய முடியாத பேரிழப்பான கருணாநிதியின் மறைவு சுமையை தாங்கியபடி செல்லும் தொண்டர்கள் அமைதியுடன் ஊர் திரும்ப வேண்டும். திமுக தலைவர் கருணாநிதிக்கு இறுதி மரியாதை செலுத்திய பிரதமர், ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் பல்வேறு துறையைச் சார்ந்தவர்களுக்கும் நன்றி” என்று அதில் தெரிவித்துள்ளார்.