தேசிய செய்திகள்

கேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 20 பேர் பலி + "||" + At least 20 dead in Kerala due to flooding, landslides triggered by incessant rains

கேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 20 பேர் பலி

கேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 20 பேர் பலி
கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் நிலச்சரிவால் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
திருவனந்தபுரம்,

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால்  கேரளாவில் உள்ள அணைகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. பெரியாறு நதியில் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறுவுறுத்தப்பட்டுள்ளனர்.

இடுக்கி மாவட்டத்தில் மட்டும் நிலச்சரிவில் சிக்கி 10 பேர் இறந்துள்ளனர். தேவிகுளம் தாலுகாவில் உள்ள அடிமாலியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தனர், இவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், இருவர் தேவிகுளம் தாலுகாவில் நிலச்சரிவில் உயிரிழந்துள்ளனர். இடுக்கி தாலுகாவிலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர் ஆனால், அவர்களின் உடல்கள் மீட்கப்படவில்லை.

அதே போல் மலப்புரம் மாவட்டத்தில் 5 பேரும், கண்ணூரில் 2 பேரும், வயநாடு மாவட்டத்தில் ஒருவரும் நிலச்சரிவு மற்றும் மழைக்குப் பலியாகியுள்ளனர். மேலும் வயநாடு, பாலக்காடு, கோழிக்கோடு மாவட்டங்களில் 3 பேரைக் காணவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றது.

 எர்ணாகுளம், கோழிக்கோடு, மலப்புரம், இடுக்கி மாவட்டம் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  அடுத்த 24 மணிநேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. 

இடுக்கி மாவட்டத்தில் உள்ள இடமலையார் அணையில் இருந்து 600 கனஅடி நீர் நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், பெரியாற்றில் வெள்ளம் ஓடுகிறது.  இடுக்கி அணையின் நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டியதால் 26 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

கேரளாவில் கனமழை காரணமாக மீட்புப் பணிக்காக ராணுவம், கப்பற்படையிடம் உதவி கோரப்பட்டுள்ளது. கடலோர காவல்படை, தேசிய பேரிடர் மீட்புப் படையிடமும் உதவி கோரப்பட்டுள்ளது என்று கேரள முதல்-மந்திரி  பினராயி விஜயன் கூறியுள்ளார்.