தேசிய செய்திகள்

கேரளாவில் தொடரும் கனமழை: 40 ஆண்டுகளுக்கு பின்னர் இடுக்கி அணையின் 5 ஷட்டர்களும் திறப்பு + "||" + Kerala rains intensify all 5 floodgates of Idukki dam opened after 40 years

கேரளாவில் தொடரும் கனமழை: 40 ஆண்டுகளுக்கு பின்னர் இடுக்கி அணையின் 5 ஷட்டர்களும் திறப்பு

கேரளாவில் தொடரும் கனமழை: 40 ஆண்டுகளுக்கு பின்னர் இடுக்கி அணையின் 5 ஷட்டர்களும் திறப்பு
கேரளாவில் தொடரும் கனமழை காரணமாக 22 அணைகள் நிரம்பி கூடுதல் தண்ணீர் ஆறுகளில் வெள்ளமாக செல்கிறது. #KeralaRains #IdukkiDam

இடுக்கி,


கேரள மாநிலத்தில் கடந்த ஒரு மாதமாக தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்தது. சில நாட்களாக மழை ஓய்ந்த நிலையில் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். இந்நிலையில் மாநிலம் முழுவதும் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. அதன்படி நேற்று முன்தினம் முதல் இடி, மின்னலுடன் கனமழை கொட்டியது. இடுக்கி, மலப்புரம், வயநாடு, கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் பெய்த கன மழையால் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதுதொடர்பான விபத்து சம்பவங்களில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். 

மேலும் சிலர் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளனர். இதனால் உயிர்பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

நிலச்சரிவால் பெரும்பாலான பகுதிகளுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பலத்த மழையால் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டு வருவதால் மீட்பு பணியில் ராணுவம் தீவிரமாக இறங்கியுள்ளது. இடுக்கி அணை ஆசியாவிலேயே 2–வது மிகப்பெரிய அணையாக விளங்குகிறது. கடல் மட்டத்தில் இருந்து 2 ஆயிரத்து 401 அடி உயரம் உள்ள இந்த அணையில் நீர்மட்டம் 2 ஆயிரத்து 398 அடியாக உயர்ந்தது. இதனால் அணையில் இருந்து நேற்று தண்ணீர் திறந்துவிடப்பட்டது. 

இடுக்கி அணைக்கு மதகுகள் இல்லாததால் அதன் துணை அணையான செருதோணி அணை வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது. இடுக்கி அணை முழு கொள்ளளவை எட்டியதால் பாதுகாப்பு கருதி 1981–ம் ஆண்டும், 1992–ம் ஆண்டும் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் 26 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மழையின் வேகம் அதிகரிக்கும் நிலையில் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அணையின் 5 வெள்ள நீர் திறப்பு ஷட்டர்களும் திறக்கப்பட்டது. வெள்ள நீரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், கட்டுப்பாட்டுடன் உள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கனமழை எச்சரிக்கை

பெரியார் ஆற்று கரையோர பகுதிகளில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். சுமார் 10 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை மாவட்டம் நிர்வாகம் செய்து கொடுத்து வருகிறது. மழையின் வேகம் அதிகரிக்கும் நிலையில் கடற்படையும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே மழை தொடரும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநில பேரிடர் மீட்பு படையின் தரப்பில் விடுக்கப்பட்டு உள்ள எச்சரிக்கையில் வயநாட்டில் 14-ம் தேதி வரையிலும், இடுக்கியில் ஆகஸ்ட் 13-ம் தேதி வரையிலும், கோட்டயம், எர்ணாகுளம், மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களில் ஆகஸ்ட் 11 ம்தேதி வரையிலும் மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.