மாநில செய்திகள்

மேகதாது அணை பிரச்சினையில் கர்நாடகத்துக்கு தூதராக செயல்படுவதா?டாக்டர் ராமதாஸ் கண்டனம் + "||" + Megadhathu on dam issue Being an ambassador to Karnataka Dr Ramadoss condemned

மேகதாது அணை பிரச்சினையில் கர்நாடகத்துக்கு தூதராக செயல்படுவதா?டாக்டர் ராமதாஸ் கண்டனம்

மேகதாது அணை பிரச்சினையில் கர்நாடகத்துக்கு தூதராக செயல்படுவதா?டாக்டர் ராமதாஸ் கண்டனம்
இருதரப்புக்கும் பொதுவானவராக இருக்க வேண்டிய மத்திய மந்திரி நிதின் கட்காரி மேகதாது அணை பிரச்சினையில் கர்நாடகத்துக்கு தூதராக செயல்படுவதாக கூறி டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் புதிய அணை கட்டுவது தொடர்பாக தமிழகத்துடனும், கர்நாடகத்துடனும் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தும் என்று மத்திய நீர்வளத்துறை மந்திரி நிதின் கட்காரி உறுதியளித்திருப்பதாக கர்நாடக அரசு தெரிவித்திருக்கிறது. காவிரி பிரச்சினையில் இரு தரப்புக்கும் பொதுவானவராக இருக்க வேண்டிய மத்திய மந்திரி நிதின் கட்காரி, கர்நாடகத்தின் தூதராக மாறி தமிழகத்துடனும் பேச்சு நடத்தப்போவதாக அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது; இதை ஏற்க முடியாது.


மேகதாது அணை விவகாரத்தில் நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டிய நிதின் கட்காரி, கர்நாடகத்தின் பக்கம் நின்று கொண்டு பஞ்சாயத்து பேச தமிழகத்தை அழைக்கக்கூடாது. அது அநீதி. மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழகத்தை பேச்சுக்கு அழைக்க நிதின் கட்காரிக்கு எந்த உரிமையும் இல்லை.

அதுமட்டுமின்றி, கர்நாடகத்தில் காவிரி மற்றும் துணை நதிகளின் குறுக்கே இப்போதுள்ள அணைகளின் கொள்ளளவு 104.59 டி.எம்.சி. ஆகும். 67.14 டி.எம்.சி. கொள்ளளவுள்ள மேகதாது அணையும் கட்டப்பட்டால் கர்நாடக அணைகளின் கொள்ளளவு 171.73 டி.எம்.சி.யாக அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, இடைப்பட்ட காவிரிப் பரப்பு, நீர்நிலைகள் ஆகியவற்றையும் கணக்கில் கொண்டால் 200 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகத்தால் தேக்கிவைக்க முடியும்.

இந்த அளவுக்கு கொள்ளளவு இருந்தால் காவிரியில் தமிழகத்திற்கு ஒரு சொட்டு நீரைக்கூட கர்நாடகம் தராது. மேகதாது அணைகட்டப்படுவது அனைத்து வழிகளிலும் தமிழகத்திற்கு ஆபத்தானது என்பதால் அதுகுறித்து பேச்சு நடத்துவதற்கான அழைப்பு, ஒருவேளை முழு அதிகாரம் பெற்ற காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு அதனிடம் இருந்து வந்தால் தவிர, வேறு யாரிடம் இருந்து வந்தாலும் அதை தமிழக அரசு ஏற்கக்கூடாது என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.