தேசிய செய்திகள்

கேரளா: எதிர்க்கட்சி தலைவருடன் சென்று வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார் முதல் மந்திரி பினராயி விஜயன் + "||" + Kerala CM undertakes aerial survey of flood-hit districts Kerala CM undertakes aerial survey of flood-hit districts

கேரளா: எதிர்க்கட்சி தலைவருடன் சென்று வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார் முதல் மந்திரி பினராயி விஜயன்

கேரளா: எதிர்க்கட்சி தலைவருடன் சென்று வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார்  முதல் மந்திரி பினராயி விஜயன்
கேரளாவில் வெள்ள பாதிப்புகளை முதல் மந்திரி பினராயி விஜயன் ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட்டார். #KeralaFloods
திருவனந்தபுரம்,

கேரளாவில் சில நாட்களாக ஓய்ந்து இருந்த தென்மேற்கு பருவமழை, மீண்டும் தீவிரம் அடைந்து உள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விடாமல் கனமழை கொட்டி வருகிறது. இதனால் மாநிலத்தின் பல மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. தாழ்வான இடங்களில் வெள்ளநீர் புகுந்து உள்ளது. ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது.

கடந்த இரு நாட்களில் பெய்த பலத்த மழை, வெள்ளம் காரணமாக மாநிலம் முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்து உள்ளது. பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது. மாநிலத்தில் உள்ள 24 அணைகள் நிரம்பி முழு கொள்ளளவை எட்டின. இதையடுத்து பாதுகாப்பு கருதி அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.  மழை, வெள்ளத்தால் பாதிக் கப்பட்டவர்கள் தங்குவதற் காக மாநிலம் முழுவதும் 439 நிவாரண முகாம்கள் அமைக் கப்பட்டு இருக்கின்றன. வெள்ளத்தில் சிக்கியவர் களை மீட்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டு உள்ளனர்.

மூணாறை அடுத்த பள்ளிவாசல் என்ற மலைப்பகுதியில் தனியார் தங்கும் விடுதி உள்ளது. பலத்த மழையால் இந்த விடுதியின் முன்பகுதி மற்றும் பின்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த விடுதிக்கு செல்லும் பாதை மண்ணால் மூடியது. அங்கு தங்கி இருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்பட 61 பேர் வெளியே வர முடியாமல் சிக்கித் தவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்று அவர்களை பாதுகாப்பாக மீட்டனர்.

எர்ணாகுளத்தில் இருந்து பேரிடர் மீட்பு குழுவினர் 200 பேர் இன்று (சனிக்கிழமை) இடுக்கி வந்தனர். அவர்களை வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணியில் ஈடுபடுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட கோழிக்கோடு, வயநாடு பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட இடங்களில் இருந்து வெளியே வரமுடியாமல் தவித்த மக்களை சிறிய அளவில் தற்காலிக பாலங்களை கட்டி ராணுவ வீரர்கள் பாதுகாப்பாக மீட்டு முகாம்களில் தங்க வைத்தனர்.

கேரளாவில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக அந்த மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை அனைத்து பொது நிகழ்ச்சிகளையும் ரத்து செய்தார். மேலும் இன்று (சனிக்கிழமை) மந்திரிகள் மற்றும் அதிகாரிகளுடன் ஹெலிகாப்டரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர் பார்வையிட்டார்.  இடுக்கி அருகே உள்ள கட்டப்பனா பகுதியில், அதிகாரிகளை சந்தித்து மீட்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய திட்டமிட்டு இருந்தார். 

ஆனால், கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக அவரது ஹெலிகாப்டர் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதன்காரணமாக வயநாடு சென்ற கேரள முதல் மந்திரி பினராயி விஜயன், நிவாரண முகாம்கள் சென்று பார்வையிட்டார். அங்குள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் மீட்பு பணிகள் குறித்து ஆலோசித்தார். முதல் மந்திரியுடன் எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா, வருவாய்த்துறை அமைச்சர் சந்திரசேகரன் ஆகியோரும்உடன் சென்று வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்கின்றனர்.

உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நாளை கேரளா வந்து, மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட உள்ளார். பின்னர், முதல்வர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து மீட்பு பணிகள் குறித்து கேட்டறிவார் என தகவல் வெளியாகி உள்ளது.