தேசிய செய்திகள்

கனமழையால் வெள்ளத்தில் மிதக்கிறது கேரளா: பலி எண்ணிக்கை 37 ஆக உயர்வு + "||" + Death toll mounts to 37, Rajnath Singh to visit flood-hit Kerala on Sunday

கனமழையால் வெள்ளத்தில் மிதக்கிறது கேரளா: பலி எண்ணிக்கை 37 ஆக உயர்வு

கனமழையால் வெள்ளத்தில் மிதக்கிறது கேரளா: பலி எண்ணிக்கை 37 ஆக உயர்வு
கேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 37 பேர் வரை பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #KeralaFloods2018
திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் இடுக்கி, வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு, பாலக்காடு, கோட்டயம், ஆலப்புழை உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்த மாவட்டங்களில் ஓடும் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மாநிலத்தின் 24 அணைகளும் முழு கொள்ளளவை எட்டி உள்ளன.

இதனால் அணைகளையொட்டிய தாழ்வான பகுதிகள் மற்றும் ஆறுகளின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

நிலச்சரிவு ஏற்பட்டதாலும், சாலைகளை வெள்ளம் அடித்துச் சென்றதாலும் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

மழை வெள்ளம் காரணமாக கடந்த 3 நாட்களாக மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். மேலும் காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள்.
மழையினால் வீடு, வாசல்களை இழந்த 54 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தற்காலிகமாக அமைக்கப்பட்டு உள்ள 439 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

பெரியாறு ஆற்றின் கரையோரம் வசித்து வரும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் எர்ணாகுளம் மாவட்டம் பரவூர், ஆலுவா, கனயன்னூர், குன்னத்நாடு ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ உதவிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

கடல் மட்டத்தில் இருந்து 2 ஆயிரத்து 401 அடி உயரம் கொண்ட இடுக்கி அணை தொடர் மழை காரணமாக முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து அணையில் இருந்து 5 மதகுகளிலும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து ஆர்ப்பரித்து வெளியேறும் தண்ணீர் செருதோணி ஊருக்குள் புகுந்துள்ளது.

இதனால் அப்பகுதியில் உள்ள பாலம், கட்டிடங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. மேலும் ஆற்றின் கரையோரத்தில் இருந்த ஏராளமான கடைகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் இடுக்கி அணையை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். 

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மீட்பு பணிகளில் ராணுவம், கடலோர காவல்படை, தேசிய பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு படை, நீரில் மூழ்கி தேடும் வீரர்களும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அசம்பாவிதம் எதுவும் நிகழாமல் தடுக்க 3 படகுகள், 20 உயிர்காக்கும் படகுகள், உயிர் காக்கும் ஆடை, சிறப்பு கயிறு பயன்படுத்தப்படுகிறது.

மாநிலத்தில் மழை, வெள்ளத்துக்கு நேற்று வரை 32 பேர் பலியாகி விட்டனர். இந்தநிலையில், இன்று வந்த தகவலின்படி பலி எண்ணிக்கை 37ஆக உயர்ந்துள்ளது. மேலும் 150 பேர்களை காணவில்லை என்ற தகவல் வந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

கேரளாவில் மொத்தம் உள்ள 14 மாவட்டங்ளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், குறிப்பாக இடுக்கி, கோழிக்கோடு, கொல்லம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. 

மலையோர பகுதிகளாக இருப்பதால் பாதிப்பின் தாக்கம் அதிகம் இருந்ததாக கேரள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்  கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களின் உத்தரவின்படி 25 ஹெலிகாப்டர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகிறது. இரவுபகலாக மீட்புப்படையினர் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்டு வருகின்றனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று கேரளா வருகிறார்.