கிரிக்கெட்

டி.என்.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டி: மதுரை பாந்தர்ஸ் அணி “சாம்பியன்” + "||" + TNPL. Cricket finals: Madurai Panthers team "Champion"

டி.என்.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டி: மதுரை பாந்தர்ஸ் அணி “சாம்பியன்”

டி.என்.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டி: மதுரை பாந்தர்ஸ் அணி “சாம்பியன்”
டி.என்.பி.எல். கிரிக்கெட்டின் இறுதிப்போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி வெற்றிபெற்று கோப்பையை தட்டிச் சென்றது. #TNPL2018
சென்னை,

3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 11-ந் தேதி தொடங்கி நெல்லை, நத்தம் (திண்டுக்கல்), சென்னை ஆகிய இடங்களில் நடந்தது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் திண்டுக்கல் டிராகன்ஸ் (5 வெற்றி, 2 தோல்வி), மதுரை பாந்தர்ஸ் (5 வெற்றி, 2 தோல்வி), கோவை கிங்ஸ் (4 வெற்றி, 3 தோல்வி), காரைக்குடி காளை (4 வெற்றி, 3 தோல்வி) அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறின.


நத்தத்தில் நடந்த முதலாவது தகுதி சுற்றில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கோவை கிங்சை சாய்த்து இறுதிபோட்டிக்குள் நுழைந்தது. இரு அணிகளும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று இருப்பது இதுவே முதல்முறையாகும்.

இந்நிலையில் டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

அதன்படி திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஹரி நிஷாந்த், என் ஜெகதீசன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மதுரை பாந்த்ர்ஸ் அணியின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திண்டுக்கல் டிராகன்ஸ் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மறுமுனையில் சிறப்பாக விளையாடி ஜெகதீசன் 42 பந்தில் அரைசதம் அடித்தார். இறுதியில் திண்டுக்கல் அணியின் சார்பில் அதிகபட்சமாக ஜெகதீசன் 51(44) ரன்கள் எடுத்தார். மதுரை பாந்தர்ஸ் அணியின் சார்பில் அதிகபட்சமாக அபிஷேக் தன்வர் 4 விக்கெட்டுகளும், லோகேஷ் ராஜ் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இறுதியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்களுக்கு சுருண்டது. இதன் மூலம் மதுரை பாந்தர்ஸ் அணிக்கு 118 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை பாந்தர்ஸ் அணியின் சார்பில் அருண் கார்த்திக், தலைவன் சற்குணம் ஆகியோர் களமிறங்கினர். இதில் தலைவன் சற்குணம் சந்தித்த முதல் பந்திலே எல்.பி.டபிள்யு முறையில் வெளியேற்றப்பட்டார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரகிஜா (0), கேப்டன் ரோகித் (0) ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றினர். அடுத்ததாக அருண் கார்த்திக்குடன், ஷிஜித் சந்திரன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியின் நிதான ஆட்டத்தின் மூலம் ரன் ரேட் மெதுவாக உயர்ந்தது.

முடிவில் அருண் கார்த்திக் 75(50) ரன்களும், ஷிஜித் சந்திரன் 38(49) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். திண்டுக்கல் அணியின் சார்பில் அதிகபட்சமாக சிலம்பரசன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இறுதியில் மதுரை பாந்தர்ஸ் அணி 17.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது.

இதன் மூலம் சாம்பியன் பட்டம் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணிக்கு ரூ.1 கோடியும், 2-வது இடம் பெற்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு ரூ.60 லட்சமும் பரிசாக கிடைத்துள்ளது.