மாநில செய்திகள்

இன்று ஆசிரியர் தினம்: ஆளுநர், முதல் அமைச்சர், ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து + "||" + Teachers day: TN governor, CM, Opposition leaders greets

இன்று ஆசிரியர் தினம்: ஆளுநர், முதல் அமைச்சர், ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து

இன்று ஆசிரியர் தினம்: ஆளுநர், முதல் அமைச்சர், ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து
இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஆளுநர், முதல் அமைச்சர், மு.க ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சென்னை,

ஒரு நல்ல ஆசிரியராக தமது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டி, மாபெரும் தத்துவமேதையாக விளங்கிய முன்னாள் ஜனாதிபதி டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 05 ஆம் நாளை ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் திருநாளாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒழுக்கம், பண்பு, ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வாழ்க்கை, பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பித்து, ஒரு உண்மையான வழிகாட்டியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள். அப்படிபட்ட ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், செப்டம்பர் 05 நாளை ‘ஆசிரியர் தினமாக’ கொண்டாடுகிறோம். 

ஆசிரியர் தினம் இன்று கொண்டாடப்படுவதை  முன்னிட்டு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல் அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

முன்னாள் குடியரசுத் தலைவர் எஸ்.ராதாகிருஷ்ணனின் பிறந்த தினத்தை ஒட்டி, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ஆம் தேதியன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு சிறந்த, மிகப் பெரிய ஆண் மற்றும் பெண்ணின் குணாதிசயங்கள், தொலைநோக்குப் பார்வை போன்றவை அவர்களின் ஆசிரியர்கள் அளிக்கும் கற்பித்தல் மற்றும் வழிகாட்டுதல்களில் இருந்தே கிடைக்கிறது.

ஆசிரியர் பணியில் ஈடுபட்டுள்ளோரின் விலைமதிப்பில்லாத பங்களிப்பானது சமூகத்தாலும், மாநிலத்தாலும் இந்தத் தினத்தின் போது அங்கீகரிக்கப்படுகிறது. மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் திறன்கள், ஒழுக்கம், அறிவு, நலன்கள் ஆகியவற்றை உயர்த்துவதில் அளப்பரிய பணியை ஆசிரியர்கள் ஆற்றி வருகிறார்கள். சமூகத்தை தகவமைப்பதில் பெரும் பங்கினை அளித்து வரும் ஆசிரியர்களுக்கு இந்தத் தினத்தில் நமது மரியாதையையும், மதிப்பையும் அளித்திடுவோம்.

முதல் அமைச்சர் பழனிசாமி:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ‘ஆசிரியர் தின’ வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

ஆசிரியராக பணியை தொடங்கி, தமது கடின உழைப்பினாலும், நற்சிந்தனையாலும் இந்திய குடியரசுத் தலைவராக உயர்ந்து, நமது தாயகத்தின் சிறப்பைத் தரணிக்கு உணர்த்திய தத்துவமேதை டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5-ந் தேதியை ஆசிரியர் தினமாக கொண்டாடும் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.அத்துடன், இந்நன்நாளில் நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு அடித்தளமாக விளங்கிடும் கல்வியை இளம் தலைமுறையினருக்கு கற்பித்து, அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கிடும் ஆசிரியப் பெருமக்களின் சேவை மென்மேலும் சிறக்க வேண்டுமென வாழ்த்தி, அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.ஆசிரியர் பணி சிறக்கட்டும்! அறிவோங்கித் தமிழ்நாடு உயரட்டும்!

மு.க ஸ்டாலின்:

கல்வி வளர்ச்சிக்கு அரும்பணியாற்றி, நாட்டின் முன்னேற்றத்துக்கு வித்திடும் அறிவுசார்ந்த இளைஞர் சமுதாயத்தை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு திமுக சார்பில் நல் வாழ்த்துகள். ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை தரமான கல்வியை வழங்கிட தங்கள் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து, அறிவு மணிகளைக் கோர்த்தெடுத்து வருங்கால தலைமுறையை உருவாக்கும் மாமணிகளாகத் திகழும் தியாக உணர்வுமிக்க ஆசிரியர்களை இந்த நாடே ஓரணியில் நின்று மனமார வாழ்த்துகிறது. ஆசிரியர் சமுதாயத்தின் நலனுக்காக திமுக என்றும் துணை நிற்கும்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

ஏழைக்குடும்பத்தில் பிறந்து, ஆசிரியராக பணி செய்து, இந்தியாவின் முதல் குடிமகன் என்ற உன்னத நிலையை அடைந்தவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். ஆசிரியர்களுக்கெல்லாம் ஆசிரியர் என்று போற்றப்படும் அவரது பிறந்த நாள் தான் ஆசிரியர் நாளாக கொண்டாடப்படுகிறது.

இந்த நன்னாளில் தமிழக அளவிலும், தேசிய அளவிலும் நல்லாசிரியர் விருது பெறும் அனைத்து ஆசிரியர்களுக்கும் உளமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் தரமான கல்வி முறை நடைமுறைப்படுத்தப்படுவதும், ஆசிரியர்களுக்கு சிறப்பான பயிற்சி வழங்குவதுடன், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றப்படுவதும் அவசியம் ஆகும். இவற்றை செய்து முடிப்பதுடன், ஆசிரியர்களின் உதவியுடன் தமிழகத்தில் தமிழ் வழிக் கல்வியை வழங்கவும் இந்த நல்ல நாளில் அனைவரும் உறுதி ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்:-

ஆசிரியர் தினத்தன்று ஆசிரியர்களை கவுரவிக்கும் மத்திய-மாநில அரசுகள் மாணவ, மாணவிகளின் கல்வி சிறக்கவும், ஆசிரியர் பணிக்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்களை தேர்வு செய்வதில் நேர்மையான வழிமுறைகளை கையாளவும், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று த.மா.கா. சார்பில் வலியுறுத்துகிறேன்.

நல்லாசிரியர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு த.மா.கா. சார்பில் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். உன்னத மனிதர்களாக, சிறந்த படைப்பாளிகளாக திகழ்கின்ற ஆசிரியர் பெருமக்களுக்கு த.மா.கா. சார்பில் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.