தேசிய செய்திகள்

அருண் ஜெட்லி- விஜய் மல்லையா விவகாரம்: சுப்ரமணியன் சுவாமி டுவிட்டால் புது சர்ச்சை + "||" + Vijay Mallya's 'meeting' with Arun Jaitley: Subramanian Swamy says liquor baron's statement bring up 2 'undeniable facts'

அருண் ஜெட்லி- விஜய் மல்லையா விவகாரம்: சுப்ரமணியன் சுவாமி டுவிட்டால் புது சர்ச்சை

அருண் ஜெட்லி- விஜய் மல்லையா  விவகாரம்: சுப்ரமணியன் சுவாமி டுவிட்டால் புது சர்ச்சை
அருண் ஜெட்லியை விஜய் மல்லையா சந்தித்தது உண்மைதான் என்று சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லி,

பொதுத்துறை வங்கிகளில் 9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் மோசடி செய்துவிட்டு, லண்டனில் தஞ்சம் அடைந்துள்ளார் பிரபல தொழில் அதிபர் விஜய்மல்லையா. அவரை நாடு கடத்தக்கோரி இந்தியா தொடர்ந்த வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் வரும் டிசம்பர் மாதம் லண்டன் நீதிமன்றம் தீர்ப்பளிப்பதாக தெரிவித்துள்ளது. 

இந்த சூழலில், இந்தியாவை விட்டு வெளியேறும் முன் நிதி மந்திரி அருண் ஜெட்லியை சந்தித்தாகவும் வங்கி பிரச்சினைகளுக்கு தீர்வு காண தயாராக இருப்பதாகவும் அவரிடம் தெரிவித்தேன் என்று விஜய்மல்லையா கூறியது இந்திய அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. இதையடுத்து,  விஜய் மல்லையா பேட்டி குறித்து மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி விளக்கம் அளித்தார். அப்போது, ”விஜய் மல்லையா கூறியது பொய் எனவும், மாநிலங்களை உறுப்பினராக இருந்த விஜய் மல்லையா, நாடாளுமன்றத்தில் நான் சென்று கொண்டிருந்த போது, என்னிடம் நடந்தபடியே பேசியதாகவும், “கடன் தீர்வுக்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறேன்” எனவும் கூறினார். 

அவர் முன்பே பலதடவை இதுபோல் ஏமாற்றி இருப்பதால், மேற்கொண்டு அந்த உரையாடலை வளர்க்க விரும்பாமல், நான் குறுக்கிட்டேன். “என்னிடம் பேசுவதில் அர்த்தம் இல்லை. வங்கிகளை அணுகுங்கள்” என்று அவரிடம் கூறினேன். அவரது கையில் வைத்திருந்த ஆவணங்களைக் கூட நான் வாங்கவில்லை” என்று விளக்கம் அளித்து இருந்தார். இருப்பினும், இந்த பிரச்சினையை முன்வைத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரி வந்தன. 

இந்த நிலையில், பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்ட பதிவு புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. சுப்ரமணியன் சுவாமி கூறியதாவது :மல்லையா தப்பிய விவகாரத்தில் இரண்டு மறுக்க முடியாத உண்மைகள் உள்ளன. முதலாவது விவகாரம் என்னவெனில், மல்லையா 54 பைகளுடன் வெளியேறுவதற்கு வசதியாக அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டு இருந்த  லுக் அவுட் நோட்டீஸ் 2014, அக்.25-ல் நீர்த்துப்போகச்செய்யப்பட்டது. இரண்டாவது விவகாரம் என்னவெனில், பாராளுமன்றத்தின் செண்ட்ரல் ஹாலில், நிதி அமைச்சரிடம் மல்லையா தான் லண்டன் செல்ல இருப்பதாக கூறினார்” இவ்வாறு சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். சுப்ரமணியன் சுவாமி வெளியிட்ட இந்த தகவல் அரசியல் வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.