உலக செய்திகள்

ஸ்கிரிபால் விவகாரம்; கொலை முயற்சியில் தொடர்பில்லை என சந்தேக நபர்கள் விளக்கம் + "||" + 'Skripal suspects' tell Russian media they visited Britain's Salisbury as tourists

ஸ்கிரிபால் விவகாரம்; கொலை முயற்சியில் தொடர்பில்லை என சந்தேக நபர்கள் விளக்கம்

ஸ்கிரிபால் விவகாரம்; கொலை முயற்சியில் தொடர்பில்லை என சந்தேக நபர்கள் விளக்கம்
முன்னாள் ரஷ்ய உளவாளி கொலை முயற்சியில் எங்களுக்கு தொடர்பில்லை என இங்கிலாந்து அரசு சந்தேகம் தெரிவித்த 2 பேர் இன்று மறுப்பு தெரிவித்துள்ளனர்.
மாஸ்கோ,

ரஷ்ய ராணுவத்தின் உளவு பிரிவில் தளபதியாக பணிபுரிந்தவர் செர்கெய் ஸ்கிரிபால்.  ஓய்வு பெற்ற பின்னர் இவர் இங்கிலாந்து நாட்டிற்காக உளவு வேலையில் ஈடுபட்டார் என கைது செய்யப்பட்டார்.

அதன்பின் உளவாளிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் கடந்த 2010ம் ஆண்டு இவர் இங்கிலாந்து நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இங்கிலாந்து நாட்டில் வசித்து வந்த ஸ்கிரிபால் தனது மகள் யூலியாவுடன் சாலிஸ்பரி நகரில் இருந்தபொழுது நினைவிழந்த நிலையில் காணப்பட்டனர்.  அவர்கள் நோவிசோக் என்ற நரம்பு மண்டலத்தில் பாதிப்பு ஏற்படுத்தும் நச்சுபொருளை முகர்ந்துள்ளனர் என பின்னர் தெரிய வந்தது.  இதனை அடுத்து அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

செர்கெய் விவகாரத்திற்கு பின்னால் ரஷ்யா உள்ளது என்று இங்கிலாந்து குற்றம் சாட்டியது.  இதற்கு ரஷ்யா மறுப்பு தெரிவித்தது.  எனினும், இங்கிலாந்தில் இருந்து ரஷ்ய தூதர்கள் வெளியேற்றப்பட்டனர்.  ஐரோப்பிய யூனியன் நாடுகள், அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகள் ஆகியவை இங்கிலாந்துடன் இணைந்து தங்களது நாடுகளில் இருந்து 150க்கும் மேற்பட்ட ரஷ்ய தூதர்களை வெளியேற்றியது.

இந்த சம்பவத்தில் அலெக்சாண்டர் பெட்ரோவ் மற்றும் ருஸ்லான் போஷிரோவ் ஆகிய ரஷ்ய ராணுவ உளவு பிரிவை சேர்ந்த 2 பேர் மீது இங்கிலாந்து சந்தேகம் எழுப்பியிருந்தது.

அவர்களை போன்ற உருவம் கொண்ட 2 பேரின் புகைப்படங்களையும் இங்கிலாந்து வெளியிட்டது.

இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் விளாடிவோஸ்டாக் நகரில் நடந்த பொருளாதார கூட்டம் ஒன்றில் நேற்று பேசும்பொழுது, முன்னாள் ரஷ்ய உளவாளிக்கு விஷம் வைத்த விவகாரத்தில் இங்கிலாந்து சந்தேகிக்கும் 2 பேரையும் யாரென்று எங்களுக்கு தெரியும்.  அவர்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்.  அவர்கள் குற்றவாளிகள் இல்லை.  பொதுமக்களில் இருவர் என கூறினார்.

அந்த இரண்டு பேரையும் ஊடகத்தின் முன் பேசும்படி புதின் வலியுறுத்தினார்.  அவர்கள் இருவரும் தங்களை பற்றி யாரென்று பத்திரிகையாளர்களிடம் கூறுவார்கள்.  இதில் விசேஷம் எதுவும் இல்லை.  குற்றம் எதுவுமில்லை என நான் உறுதி கூறுகிறேன் என்றும் புதின் கூறினார்.

இந்த நிலையில், இங்கிலாந்து அரசு தெரிவித்த சந்தேகத்திற்குரிய 2 பேரும் இன்று ரஷ்ய ஊடகம் முன் வந்து தங்களது தரப்பு விளக்கத்தினை தெரிவித்துள்ளனர்.

அதில், இங்கிலாந்து நாட்டின் சாலிஸ்பரி நகருக்கு சுற்றுலா நோக்கத்திற்காக நாங்கள் வந்தோம்.  கொலை முயற்சிக்கும் எங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று அவர்கள் மறுப்பு தெரிவித்து உள்ளனர்.