மாநில செய்திகள்

கடலோர பாதுகாப்பு படைக்கு புதிய ரோந்து கப்பல் + "||" + New Patrol Ship for Coast Guard

கடலோர பாதுகாப்பு படைக்கு புதிய ரோந்து கப்பல்

கடலோர பாதுகாப்பு படைக்கு புதிய ரோந்து கப்பல்
இந்திய கடலோர பாதுகாப்பு படையில் விஜயா என்ற புதிய ரோந்து கப்பல் இணைக்கப்பட்டுள்ளது.
சென்னை, 

போதைப்பொருள் கடத்தல், ஆயுதங்கள் கடத்தல், ஊடுருவல் போன்ற குற்றங்களை தடுப்பதற்காக இந்திய கடலோர பாதுகாப்பு படை செயல்பட்டு வருகிறது. இதற்காக ஆயுதங்கள் தாங்கிய பிரத்யேக கப்பல்களை இந்திய கடலோர பாதுகாப்பு படை கொண்டுள்ளது. அந்த வரிசையில் 98 மீட்டர் நீளம் கொண்ட விஜயா என்ற புதிய ரோந்து கப்பல் இந்திய கடலோர பாதுகாப்பு படையின் பணியில் இணைக்கப்பட்டது.

சென்னை துறைமுகத்தில் நேற்று நடந்த விழாவில் இந்திய பாதுகாப்புத்துறை செயலாளர் சஞ்சய் மித்ரா, இந்திய கடலோர பாதுகாப்பு படையின் தென்பகுதி இயக்குனர் ஜெனரல் ராஜேந்திர சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விஜயா என்பதற்கு வெற்றி என்று அர்த்தமாகும்.

இந்த கப்பலை லார்சன் மற்றும் டியூப்ரோ கம்பெனி நிர்மாணித்து உள்ளது. இதில் முழுக்க நவீன கண்காணிப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன. நவீன துப்பாக்கிகள், தானியங்கி மின்சார மேலாண்மை, உயர் அழுத்த தீயணைப்பு கருவிகள், ஒரு ஹெலிகாப்டர் மற்றும் 4 அதிவேக படகுகளை ஏந்தி செல்லும் வசதி விஜயா கப்பலில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கடலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டால் அதை நீக்கும் கருவிகளை கொண்டு செல்லும் வசதியும் விஜயா கப்பலில் உள்ளது. இந்த கப்பல் அதிகபட்சமாக 26 கடல் மைல் வேகத்தில் செல்லும். விஜயா கப்பலை கமாண்டர் ஹரிந்தர்ஜித் சிங் நிர்வகிப்பார். 12 அதிகாரிகளும், 91 வீரர்களும் அதில் பணியாற்றுவார்கள்.

இந்திய கடலோர பாதுகாப்பு படையில் தற்போது 137 கப்பல்களும், 62 விமானங்களும் உள்ளன. 61 கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றன என அதிகாரிகள் தெரிவித்தனர்.