தேசிய செய்திகள்

வரதட்சணை புகாரில் உடனே கைது நடவடிக்கை எடுக்கலாம் - சுப்ரீம் கோர்ட்டு புதிய உத்தரவு + "||" + The arrest can be made immediately in the dowry complaint - Supreme Court's new order

வரதட்சணை புகாரில் உடனே கைது நடவடிக்கை எடுக்கலாம் - சுப்ரீம் கோர்ட்டு புதிய உத்தரவு

வரதட்சணை புகாரில் உடனே கைது நடவடிக்கை எடுக்கலாம் - சுப்ரீம் கோர்ட்டு புதிய உத்தரவு
வரதட்சணை புகாரில் உடனே கைது நடவடிக்கை எடுக்க வகைசெய்து, தனது பழைய தீர்ப்பை மாற்றி அமைத்து சுப்ரீம் கோர்ட்டு புதிய உத்தரவு பிறப்பித்து உள்ளது.
புதுடெல்லி,

வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டம் (இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 498-ஏ) தவறாகப் பயன்படுத்தப்படுவதாக புகார்கள் உள்ளன. கணவர், மாமனார், மாமியார், நாத்தனார், மச்சினர் என யாரைப் பிடிக்காவிட்டாலும், அவர்கள் மீது பெண்கள் வரதட்சணை புகார் கொடுத்து, வழக்கு பதிவு செய்து, சிறையில் தள்ளிவிட இந்த சட்டப்பிரிவு ஆயுதமாக உபயோகிக்கப்படுவதாகவும் கூறப்பட்டது.


இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை (தற்போது ஓய்வு பெற்றுவிட்ட) நீதிபதி ஏ.கே.கோயல் மற்றும் நீதிபதி யு.யு.லலித் ஆகியோர் விசாரித்து, கடந்த ஆண்டு ஜூலை மாதம் தீர்ப்பு அளித்தனர்.

அந்த தீர்ப்பில், வரதட்சணை புகாரின்மீது கணவரையோ, கணவர் குடும்பத்தினரையோ உடனடியாக கைது செய்வது தடை செய்யப்பட்டது. மேலும், “மாவட்டம் தோறும் குடும்ப நல கமிட்டி அமைக்க வேண்டும். அந்த கமிட்டி வரதட்சணை புகாரை ஆராய்ந்து, சம்மந்தப்பட்ட நபர்களிடம் பேசி ஒரு மாதத்தில் அறிக்கை அளிக்க வேண்டும். அதன் பின்னர்தான் வழக்கு பதிவு செய்து, கைது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது.

ஆனால் இந்த தீர்ப்பு வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப்போக செய்வதாக கருத்து எழுந்தது. இந்த தீர்ப்பினை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் சுப்ரீம் கோர்ட்டை நாடினார்கள்.

அவர்களது மனுக்களை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் 23-ந் தேதி முடிவுக்கு வந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டின் 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு கடந்த ஆண்டு அளித்த தீர்ப்பை, இப்போது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு மாற்றி அமைத்து நேற்று தீர்ப்பு அளித்தது. இதில் வரதட்சணை கொடுமை தடுப்பு புகார்கள் தொடர்பாக மாவட்ட அளவில் குடும்ப நல கமிட்டிகள் அமைக்க ஏற்கனவே பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இப்படி மாவட்ட அளவில் கமிட்டி அமைக்குமாறு கோர்ட்டு உத்தரவிட முடியாது, அதற்கு குற்றவியல் நடைமுறை சட்டத்தில் வழிவகை செய்யப்படவில்லை. தண்டனைச்சட்டத்தில் உள்ள இடைவெளிகளை அரசியல் சாசனப்படி கோர்ட்டுகள் நிரப்பி விட முடியாது என நீதிபதிகள் கூறி உள்ளனர்.

இந்த உத்தரவின்படி, வரதட்சணை புகார்கள் மீது உடனே வழக்கு பதிவுசெய்து, கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கும் அதிகாரம் போலீசாருக்கு மீண்டும் தரப்படுகிறது. மேலும், வரதட்சணை கொடுமை தடுப்பு வழக்குகளில் புகார்கள் குறித்து ஆராய்வதற்கு இனி மாவட்ட அளவிலான குடும்ப நல கமிட்டிகள் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.