தேசிய செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சீராய்வு மனு + "||" + Sterlite factory case: Tamil Nadu government review petition in Supreme Court

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சீராய்வு மனு

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சீராய்வு மனு
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்தது.
புதுடெல்லி,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் நடந்த போராட்டத்தின்போது போலீசார் நடத்திய தடியடி, துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாயினர். இதனால் அந்த ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் நிர்வாக பணிகளை மேற்கொள்ள அந்த ஆலையின் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்தது.


மேலும் ஆலையை ஆய்வுசெய்ய மேகாலயா ஐகோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் ஒரு குழுவை அமைத்து கடந்த 30-ந் தேதி உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை கடந்த 10-ந் தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்த குழுவுக்கு தடை விதிக்க முடியாது என்று தெரிவித்தது.

ஏற்கனவே, இந்த வழக்கின் தகுதி மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் இந்த வழக்கை விசாரிப்பதற்கான முகாந்திரம் ஆகியவை பற்றி விசாரிக்கவேண்டும் என்று கடந்த மாதம் 17-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த மாதம் 20-ந் தேதி பிறப்பித்த உத்தரவில் இதுபற்றி எதுவும் கூறவில்லை.

ஆய்வுக்குழு தனது ஆய்வை முடித்து அறிக்கை தாக்கல் செய்த பிறகு, இந்த வழக்கின் தகுதி மற்றும் இந்த வழக்கை தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரிப்பதற்கான ஏற்புத்தன்மை குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் முடிவு செய்யலாம் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

இதனையடுத்து, இவ்வழக்கில் தமிழக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தமிழக அரசு வக்கீல் யோகேஷ் கன்னா சீராய்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவில் கூறப்பட்டதாவது:-

சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 17-ந் தேதி பிறப்பித்த தீர்ப்பின்படி தேசிய பசுமை தீர்ப்பாயம் இந்த வழக்கை விசாரிப்பதற்கான முகாந்திரம் மற்றும் இந்த வழக்கின் தகுதி பற்றியவை குறித்து விசாரிக்காமல் குழுவை அமைத்தது தவறான முடிவாகும்.

தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கடந்த ஆகஸ்டு 20-ந் தேதியன்று தாக்கல் செய்துள்ள அறிக்கையின் அடிப்படையில் தூத்துக்குடி பகுதியில் நிலத்தடி நீர் ஸ்டெர்லைட் ஆலையால் மாசு படுத்தப்பட்டுள்ளது என்று தெளிவாக கூறி இருக்கிறது. இந்த அறிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாயம் கருத்தில் கொள்ளவில்லை.

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக அந்த நிறுவனம் ஐகோர்ட்டில்தான் மனு தாக்கல் செய்திருக்கவேண்டும். தேசிய பசுமை தீர்ப்பாயம் இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்தது தவறானது ஆகும்.

இந்த வழக்கை விசாரிக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு முகாந்திரம் கிடையாது. எனவே, சுப்ரீம் கோர்ட்டு இது தொடர்பாக கடந்த 10-ந் தேதி பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்து மீண்டும் உத்தரவு பிறப்பிக்கவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.