மாநில செய்திகள்

நெடுஞ்சாலை துறை டெண்டரில் ஊழல் நடந்ததா? தி.மு.க. குற்றச்சாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி பதில் + "||" + Was corruption done in highway tender?

நெடுஞ்சாலை துறை டெண்டரில் ஊழல் நடந்ததா? தி.மு.க. குற்றச்சாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி பதில்

நெடுஞ்சாலை துறை டெண்டரில் ஊழல் நடந்ததா? தி.மு.க. குற்றச்சாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி பதில்
நெடுஞ்சாலை துறை டெண்டரில் ஊழல் நடந்ததாக தி.மு.க. கூறும் குற்றச்சாட்டுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்து உள்ளார்.
காஞ்சீபுரம், 

அறிஞர் அண்ணாவின் 110-வது பிறந்தநாளையொட்டி காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நேற்று மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்கு காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் தலைமை தாங்கினார். அமைப்புச் செயலாளர்கள் வி.சோமசுந்தரம், மைதிலி திருநாவுக்கரசு, காஞ்சீபுரம் எம்.பி. கே.மரகதம் குமரவேல், ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. மதனந்தபுரம் கே.பழனி, மாவட்ட அவைத்தலைவர் குண்ணவாக்கம் ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், பா.பென்ஜமின், முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் ஆகியோர் பேசினார்கள்.

கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

காஞ்சியில் அண்ணா பிறந்த விழா பொதுக்கூட்டத்தில் பேசுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். கடந்த 1968-ம் ஆண்டு மதராஸ் மாநிலத்தை தமிழ்நாடு என்று மாற்றிய பெருமைக்கு உரியவர் அண்ணா.

தற்போது எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் இந்த ஆட்சியில் என்ன திட்டத்தை கொண்டுவந்தார்கள்? நாட்டு மக்களுக்கு என்ன நன்மைகளை செய்தார்கள்? என்று கேட்கிறார்கள். நாங்களும் பதில் சொல்லிக்கொண்டு இருக்கிறோம். எதிர்க்கட்சியினர் மக்களிடம் தவறான தகவல்களை பரப்பிகொண்டு வருகிறார்கள். காவிரி நதிநீர் பிரச்சினை தீர்வு காணப்படாமல் இருந்தது. ஜெயலலிதா சட்டப் போராட்டம் நடத்தினார். அவரது வழியில் வந்த அரசு உச்சநீதிமன்றத்தில் சிறந்த வாதத்தினால் சிறந்த தீர்ப்பை பெற்றுத்தந்தது.

எம்.ஜி.ஆர். ஆட்சியிலும், அதன் பின் வந்த ஜெயலலிதா ஆட்சியிலும், தற்போது உள்ள ஆட்சியிலும் சட்டம்-ஒழுங்கை பேணி காப்பதில் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது.

தி.மு.க.வினர் ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு பில்லை கொடுக்காமல் அதன் உரிமையாளரை அடிக்கின்றனர். வேலூரில் ஒரு செல்போன் கடையில் செல்போன் வாங்கிவிட்டு கடைக்காரரை அடிக்கின்றனர். ஒரு அழகு நிலையத்தில் தி.மு.க. முன்னாள் மாவட்ட கவுன்சிலர் உள்ளே சென்று ஒரு பெண்ணை அடித்து உதைக்கிறார். எதிர்க்கட்சியாக இருக்கும்போதே இந்த நிலை என்றால் ஆளும் கட்சியாக வந்தால் யாராவது? ஓட்டலில் காசு கொடுப்பார்களா? எந்த பெண்ணையாவது நிம்மதியாக வாழ விடுவார்களா? என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். அ.தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது.

தி.மு.க. ஆட்சியில் எவ்வளவு ஊழல் நடந்தது என்று நாட்டு மக்களுக்கு தெரியும். ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரு ஆட்சி என்றால் அது தி.மு.க. ஆட்சிதான். அப்படிப்பட்டவர்கள் நம்மை விமர்சனம் செய்கிறார்கள்.

தற்போது முதல்-அமைச்சர் நெடுஞ்சாலை துறையில் ஊழல் செய்ததாக விமர்சனம் செய்கிறார்கள். எப்படி ஊழல் செய்தோம் என்று சொல்லுங்கள். நீங்கள் டெண்டர் போட்டது போலத்தான் நாங்களும் டெண்டர் போட்டோம். 2006 லிருந்து 2011 வரைக்கும் நீங்கள் எப்படி நடைமுறையில் டெண்டர் வைத்தீர்களோ அப்படிதான் நாங்களும் டெண்டர் வைக்கிறோம்.

என்மீது வேண்டும் என்றே ஒரு பொய்யான வழக்கை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளார்கள். எனது உறவினருக்கு ஒரு டெண்டரை கொடுத்துவிட்டதாக கூறிவருகிறார்கள். இதை இந்த நாட்டுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக கூறுகிறேன். ராமலிங்கம் அண்டு கோ என்ற நிறுவனம் 35 ஆண்டுகளாக காண்டிராக்டர் தொழில் செய்து வருகின்றது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு எனது மகனுக்கு திருமணம் நடந்தது. 2 ஆண்டுகளுக்கு முன்பு எனது மருமகளின் தங்கையை ராமலிங்கம் அண்டு கோ உரிமையாளரின் பையனுக்கு கொடுத்தார்கள். இதனால் எனக்கு அவர் உறவு முறை ஆனார். அவர் ஒரு டெண்டர் போட்டார். அதை ஊழல் என்று சொல்கிறார்கள். இது சர்வதேச டெண்டர். அதில் கலந்துகொண்டு அவர் ஒப்பந்தம் செய்கிறார். அது யாருக்கும் தெரியாது.

இதே ராமலிங்கம் அண்டு கோ நிறுவனம் 2010-ல் தி.மு.க. ஆட்சியிலும் குடிசை மாற்று வாரியத்தில் உலக வங்கி திட்டத்தில் டெண்டர் போட்டு உள்ளார்கள். இப்போது அவர் ஒரு டெண்டர்தான் போட்டுள்ளார். அவர் டெண்டர் போட்டதே தெரியாது. ஆனால் தி.மு.க. ஆட்சியில் 2010-ம் ஆண்டில் 10 டெண்டர் அந்த நிறுவனத்திற்கு கொடுத்துள்ளார்கள். இதில் 5 டெண்டர் சிங்கிள் டெண்டர். ஒரு கால்வாய்க்கு ரூ.88 கோடி, ரூ.98 கோடி, ரூ.56 கோடி, ரூ.76 கோடின்னு ஒரே ஆளுக்கு கொடுத்துள்ளர்கள். இதிலிருந்து யார் ஊழல் செய்தது என்று தெரியவரும்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தொண்டர்கள் அனைவரும் விழிப்புடன் செயல்பட்டு அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க.வுக்கு வெற்றியை தேடித்தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன், திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம், மாவட்ட பிரதிநிதி ஆர்.வி.ரஞ்சித்குமார், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கே.யூ.எஸ்.சோமசுந்தரம், மாவட்ட மாணவரணி செயலாளர் வீ.வள்ளிநாயகம், ஒன்றிய செயலாளர்கள் தும்பவனம் டி.ஜீவானந்தம் (காஞ்சீபுரம்), எழிச்சூர் இ.வி.ராமச்சந்திரன் (குன்றத்தூர்), எஸ்.கவுஸ்பாஷா (காட்டாங்கொளத்தூர்) உள்பட பலர் கலந்து கொண்டனர்.