தேசிய செய்திகள்

தூய்மையான இந்தியாவை உருவாக்கி காந்தியின் கனவை நனவாக்குவோம் - பிரதமர் மோடி + "||" + Let's create a pure India and make Gandhi's dream come true - Prime Minister Modi

தூய்மையான இந்தியாவை உருவாக்கி காந்தியின் கனவை நனவாக்குவோம் - பிரதமர் மோடி

தூய்மையான இந்தியாவை உருவாக்கி காந்தியின் கனவை நனவாக்குவோம் - பிரதமர் மோடி
தூய்மையான இந்தியாவை உருவாக்கி மகாத்மா காந்தியின் கனவை நனவாக்குவோம் என்று பிரதமர் மோடி கூறினார்.
புதுடெல்லி,

பிரதமர் மோடி 4 ஆண்டுகளுக்கு முன்பு ‘தூய்மை இந்தியா’ என்னும் திட்டத்தை தொடங்கினார். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக தூய்மையே சேவை இயக்கம் என்னும் 2 வார தீவிர விழிப்புணர்வு பிரசாரத்தை மோடி டெல்லியில் இருந்தவாறு நாடு முழுவதும் நேற்று தொடங்கி வைத்தார். மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த இயக்கத்தை அக்டோபர் 2-ந் தேதி வரை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.


இதையொட்டி பிரதமர் மோடி, நாட்டின் 18 இடங்களில் உள்ள பள்ளிக் குழந்தைகள், பொதுமக்கள், தொழில் அதிபர்கள், திரையுலக பிரபலங்கள், ஆன்மிக தலைவர்கள், இந்திய-திபெத்திய எல்லை படை வீரர்கள், ரெயில்வே ஊழியர்கள் என பல்வேறு தரப்பினருடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்துரையாடினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

இன்று தொடங்கி அக்டோபர் 2-ந் தேதி வரை, அதாவது மகாத்மா காந்தியின் பிறந்த நாள் வரை அவருடைய கனவான தூய்மையான இந்தியாவை உருவாக்க நம்மை நாம் மறு அர்ப்பணிப்பு செய்து கொள்வோம்.

4 ஆண்டுகளுக்கு முன்பு தூய்மை இந்தியா இயக்கத்தை தொடங்கினோம். தற்போது இத்திட்டம் முக்கிய கட்டத்தை அடைந்து இருக்கிறது. இதற்கு நாடு முழுவதும் மக்கள் நல்ல ஒத்துழைப்பை தந்து இருக்கிறார்கள். இந்த பிரசாரத்தில் நாட்டின் எந்த பகுதியும் தொடாமல் விடப்படவில்லை.

இந்த 4 வருடத்தில் நாடு முழுவதும் 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 450 மாவட்டங்களைச் சேர்ந்த 4.5 லட்சம் கிராமங்களில் 9 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டு உள்ளன. இதை 4 ஆண்டுகளில் செய்து முடிக்க முடியுமா? என்று யாரும் கற்பனை கூட செய்ய முடியாது. இதனால் இந்த பகுதிகள் அனைத்தும் திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத தூய்மை பகுதியாக மாறியுள்ளது. இதுதான் இந்தியா மற்றும் அதன் மக்களின் பலம்.

தூய்மை இந்தியா திட்டத்திற்கு பெண்களின் பங்களிப்பு மிகவும் அளப்பரியது. இளைஞர்கள் சமூக மாற்றத்திற்கான பிரசார தூதர்களாக செயல்பட்டனர்.

தூய்மை இந்தியா இயக்கம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அவர்கள் ஆற்றிய பணிகள் குறிப்பிடத்தக்கவை. இந்தியாவில் ஆக்கப்பூர்வமான மாற்றத்தை ஏற்படுத்துவதில் இளைஞர்கள்தான் முன்னணியில் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

தூய்மை இந்தியா திட்டத்தில் தனக்கு கிடைத்த அனுபவம் பற்றி பிரதமர் மோடியுடன் கலந்துரையாடிய பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சன், “ஒரு நாட்டின் பிரஜை என்கிற முறையில் தூய்மை இந்தியா திட்டத்தில் பங்கேற்பது எனது கடமை. 4 ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள்(மோடி) இத்திட்டத்தை தொடங்கினீர்கள். அதில் என்னையும் இணைத்துக் கொண்டேன். மும்பை கடற்கரையை சுத்தம் செய்தது உள்பட பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களில் ஈடுபட்டேன். தொடர்ந்து இத்திட்டத்தில் பணியாற்றி வருகிறேன்” என்றார்.

பிரபல தொழில் அதிபர் ரத்தன் டாடா பேசும்போது, “இந்தியா பலமானதாக இருக்கவேண்டும் என்றால் நமது மக்களின் சுகாதாரம் என்ற அடித்தளமும் பலமாக அமையவேண்டும். ஒவ்வொரு இந்தியனின் கனவான தூய்மை இந்தியாவை உருவாக்கிட நீங்கள் எடுத்துள்ள முயற்சிகளை பாராட்டுகிறேன்” என்றார்.

இதன்பின்பு பிரதமர் மோடி டெல்லி பகர்கஞ்ச் பகுதியில் உள்ள பாபா சாஹிப் அம்பேத்கர் மேல்நிலைப்பள்ளிக்கு சென்றார். அங்கு பள்ளி வளாகத்தில் இருந்த அம்பேத்கர் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் பள்ளி வளாகத்தின் பல பகுதிகளை துடைப்பத்தால் பெருக்கி குப்பைகளை அள்ளினார். சில இடங்களில் காகித மற்றும் பிளாஸ்டிக் கப்புகள் இரைந்து கிடந்தன. அதை தனது கைகளாலேயே மோடி அகற்றி குப்பை கூடைகளில் சேகரித்தார். அவருடன் சேர்ந்து மாணவ-மாணவிகளும், ஆசிரியர்களும் குப்பைகளை அள்ளும் பணியில் ஈடுபட்டனர்.

அங்கிருந்து புறப்படுவதற்கு முன்பு மோடி மாணவர்கள் சிலரிடம் தூய்மையின் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடினார்.