தேசிய செய்திகள்

அ.தி.மு.க. விதிகளில் திருத்தம்: தேர்தல் கமிஷனில் அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் மனு + "||" + ADMK Revision of the rules: Minister CV Shanmugam filed in the Election Commission

அ.தி.மு.க. விதிகளில் திருத்தம்: தேர்தல் கமிஷனில் அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் மனு

அ.தி.மு.க. விதிகளில் திருத்தம்: தேர்தல் கமிஷனில் அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் மனு
அ.தி.மு.க. விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்களை ரத்து செய்யக்கோரும் கே.சி.பழனிசாமியின் வேண்டுகோளை ஏற்கக்கூடாது என்று தேர்தல் கமிஷனில் அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று மனு அளித்தார்.
புதுடெல்லி,

அ.தி.மு.க.வில் ஜெயலலிதா பொதுச்செயலாளராக இருந்தார். அவருடைய மறைவுக்கு பிறகு பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் புதிதாக உருவாக்கப்பட்டன. இதற் காக கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் நியமிக்கப்பட்டனர்.


இதற்கு, முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி (அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்) எதிர்ப்பு தெரிவித்தார். புதிய பதவிகள் மற்றும் அ.தி.மு.க. கட்சி விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்களை ரத்து செய்யவேண்டும் என்று, டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் கமிஷனில் முறையிட்டார். மேலும், டெல்லி ஐகோர்ட்டிலும் மனுதாக்கல் செய்தார்.

ஐகோர்ட்டில் இந்த மனுவை தனிநீதிபதி காமேஸ்வரராவ் விசாரித்து, 4 வாரத்துக்குள் வழக்கை முடிக்குமாறு இந்திய தலைமை தேர்தல் கமிஷனுக்கு கடந்த ஆகஸ்டு மாதம் 21-ந் தேதி உத்தரவிட்டார்.

தலைமை தேர்தல் கமிஷன் விசாரிப்பதற்கான இந்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் டெல்லி ஐகோர்ட்டின் மற்றொரு அமர்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். அதை விசாரித்த நீதிபதிகள் ஹிமா கோஹ்லி, ரேகா பாலி அமர்வு, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி வாதங்களை ஏற்க மறுத்து, தேர்தல் கமிஷனே 4 வாரத்துக்குள் வழக்கை விசாரித்து முடிவெடுக்கவேண்டும் என்று கடந்த மாதம் 13-ந் தேதி உத்தரவிட்டது.

மேலும், வழக்கிற்கு தேவையான எழுத்துப்பூர்வ வாதங்களை தேர்தல் கமிஷனில் அனைத்து தரப்பினரும் (சசிகலாவும் ஒரு தரப்பாக வழக்கில் சேர்க்கப்பட்டு உள்ளார்) 3 வாரங்களுக்குள் தாக்கல் செய்யவேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவின் அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பு சார்பில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று டெல்லிக்கு வந்து தேர்தல் கமிஷனில் எழுத்துப்பூர்வ வாதங்களை மனுவாக முன் வைத்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், ‘கே.சி.பழனிசாமி அ.தி.மு.க.வில் உறுப்பினரே இல்லை. அவர் திடீரென வந்து அ.தி.மு.க.வுக்கு எதிராக மனு அளித்துள்ளார். அதை தேர்தல் கமிஷன் ஏற்றுக்கொள்ளக்கூடாது’ என்று குறிப்பிட்டு இருப்பதாக தெரிகிறது.

இதுகுறித்து நிருபர்களிடம் சி.வி.சண்முகம், “அ.தி.மு.க.வுக்கு எதிராக மனு தாக்கல் செய்ய கே.சி.பழனிசாமிக்கு எந்த முகாந்திரமும் இல்லை. எனவே, அவரது மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் தேர்தல் கமிஷனிடம் கோரியுள்ளனர்” என்று தெரிவித்தார்.