தேசிய செய்திகள்

ஸ்டெர்லைட் போராட்ட கலவரம்: சி.பி.ஐ. விசாரணையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு - சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் + "||" + Sterlite protest riots: CBI Tamil Nadu government appeals against trial - Filed in Supreme Court

ஸ்டெர்லைட் போராட்ட கலவரம்: சி.பி.ஐ. விசாரணையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு - சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்

ஸ்டெர்லைட் போராட்ட கலவரம்: சி.பி.ஐ. விசாரணையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு - சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்
ஸ்டெர்லைட் போராட்ட கலவரத்தில் சி.பி.ஐ. விசாரணையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு நேற்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
புதுடெல்லி,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே மாதம் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் போலீசாரின் தடியடி மற்றும் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். மேலும் இந்த கலவரத்தில் 99 போலீசாரும், நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களும் காயமடைந்தனர்.


நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தின.

இந்த சம்பவம் தொடர்பாக முதலில் தூத்துக்குடி சிப்காட் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட்டது. மேலும் ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷனும் அமைத்தது.

அதன்படி நீதிபதி அருணா ஜெகதீசன் தூத்துக்குடியில் முகாமிட்டும், துப்பாக்கி சூடு நடந்த பகுதிக்கு நேரடியாக சென்றும் விசாரணை நடத்தினார். சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகளும் அங்கேயே முகாமிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

இதற்கிடையே ஸ்டெர்லைட் போராட்டம் மற்றும் வன்முறை தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு கடந்த ஆகஸ்டு 14-ந் தேதி உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையின் இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

ஸ்டெர்லைட் கலவரம் தொடர்பாக ஏற்கனவே தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் முறையாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அத்துடன் ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷனும் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று இருக்கிறது.

இதனால் இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க தேவை இல்லை. எனவே இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மேலும் இந்த வழக்கில் சில போலீஸ் அதிகாரிகள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு இந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.