தேசிய செய்திகள்

‘தித்லி’ புயல்: ஒடிசாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12 பேர் சாவு; 4 பேர் மாயம் + "||" + 'Titli' storm: 12 killed in landslide in Orissa 4 people missing

‘தித்லி’ புயல்: ஒடிசாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12 பேர் சாவு; 4 பேர் மாயம்

‘தித்லி’ புயல்: ஒடிசாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12 பேர் சாவு; 4 பேர் மாயம்
தித்லி புயலை தொடர்ந்து கனமழை காரணமாக, ஒடிசாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12 பேர் பலியானதுடன், 4 பேர் மாயமாகி உள்ளனர்.
புவனேஸ்வர்,

ஒடிசாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் மாயமாகி உள்ளனர்.

வங்கக்கடலில் உருவான ‘தித்லி’ புயல் ஒடிசாவின் கோபால்பூர் அருகே கடந்த 11-ந் தேதி கரையை கடந்தது. அப்போது அசுர வேகத்தில் வீசிய காற்றினால் ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களின் பல பகுதிகளில் பெருத்த சேதம் ஏற்பட்டது. இந்த புயலை தொடர்ந்து ஒடிசாவின் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.


இதில் கஜபதி மாவட்டத்தின் சில இடங்களில் நேற்று முன்தினம் மாலையில் பலத்த மழை பெய்தது. இதனால் அங்குள்ள பரகரா கிராமத்தை சேர்ந்த சிலர் பாதுகாப்புக்காக அருகில் உள்ள குகை போன்ற ஒரு பகுதிக்குள் சென்று தங்கியிருந்தனர். அப்போது திடீரென அப்பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில் அந்த குகைப்பகுதி முழுவதையும் மண் மூடியது. அதில் தங்கியிருந்த மக்கள் அனைவரும் உயிரோடு புதைந்தனர். இந்த கோர சம்பவத்தில் 12 பேர் சம்பவ இடத்திலேயே மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். மேலும் 4 பேரை காணவில்லை. அவர்கள் அனைவரும் குகையின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என தெரிகிறது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகள் பரகரா கிராமத்துக்கு விரைந்தனர். ஆனால் சம்பவம் நடந்த இடம் தொலைதூரத்தில் இருப்பதாலும், அங்கு செல்லும் சாலைகளில் மரங்கள் விழுந்து கிடப்பதால் போக்குவரத்து வசதிகள் துண்டிக்கப்பட்டு உள்ளதாலும் அங்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டு இருப்பதாக தெரிகிறது.

இதற்கிடையே ‘தித்லி’ புயலை தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் கஞ்சம், கஜபதி, ராயகடா, பூரி, கந்தமால், கேந்திரபாரா மற்றும் பாலாசோர் மாவட்டங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இந்த மாவட்டங்களில் ஓடும் பிரதான ஆறுகளில் நீர்மட்டம் அபாய அளவை தாண்டி செல்கிறது.

இந்த புயல் மற்றும் கனமழையால் மாநிலத்தில் சுமார் 60 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை சேர்ந்த சுமார் 1¼ லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதற்காக 963 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டு உள்ளன.

இந்த பேரிடரால் பாதிக்கப்பட்டு உள்ள பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மற்றும் மாநில மீட்புக்குழுவினர் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கஞ்சம் மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கியுள்ள மக்களுக்கு கடற்படை ஹெலிகாப்டர்கள் மூலம் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்பார்வையிடுவதற்காக மந்திரிகள் குழுவை அமைத்துள்ள முதல்-மந்திரி நவீன் பட்நாயக், பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் நேரில் பார்வையிட்டு வருகிறார். இந்த பேரிடரில் சிக்கியுள்ள மக்களை மீட்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தொடர்புடைய செய்திகள்

1. உலகைச்சுற்றி...
இந்தோனேசியாவில் பாலி தீவில் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் சிக்கி 5 பேர் பலியாகினர்.
2. ஒடிசா என்கவுண்டரில் 5 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை
ஒடிசாவில் பாதுகாப்பு படையினர் மாவோயிஸ்ட்கள் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 5 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
3. ஆந்திரா, ஒடிசாவை தாக்கிய தித்லி புயல் ஜார்கண்டை நெருங்கிறது
ஆந்திரா, ஒடிசாவை தாக்கிய தித்லி புயல் ஜார்கண்டை நெருங்குவதாக அம்மாநில வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
4. தித்லி புயல்: ஆந்திராவில் 8 பேர் உயிரிழப்பு மரங்கள் மின் கம்பங்கள் சாய்ந்து பலத்த சேதம்
தித்லி புயலால் ஆந்திர மாநிலத்தின் விஜயநகரம், ஸ்ரீகாகுளம் மாவட்டங்களில் மரங்களும் மின்கம்பங்களும் சாய்ந்து பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
5. ஆந்திரா–ஒடிசா இடையே காலை கரையை கடக்கும் தித்லி புயல், 5 மாவட்டங்களில் மக்களை வெளியேற்றும் பணி தொடங்கியது
வங்கக்கடலில் உருவான தித்லி புயல் நாளை காலை ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினத்திற்கும், ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கும் இடையே கரையை கடக்கிறது. ஒடிசா மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.