தேசிய செய்திகள்

பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் மத்திய-மாநில அரசுகள் பயன் அடைந்தன - அருண் ஜெட்லி சொல்கிறார் + "||" + Central-state governments benefited from monetary removal proceedings - Arun Jaitley says

பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் மத்திய-மாநில அரசுகள் பயன் அடைந்தன - அருண் ஜெட்லி சொல்கிறார்

பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் மத்திய-மாநில அரசுகள் பயன் அடைந்தன - அருண் ஜெட்லி சொல்கிறார்
வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் மத்திய-மாநில அரசுகள் பயன் அடைந்தன என்றும் அருண் ஜெட்லி கூறினார்.
புதுடெல்லி,

பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்ததுடன், மத்திய-மாநில அரசுகளுக்கு மிகப்பெரும் பயன் கிடைத்திருப்பதாக நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி, கள்ளநோட்டு மற்றும் கருப்பு பண புழக்கம் போன்றவற்றை ஒழிப்பதற்காக, அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். இது நாடு முழுவதும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.


மத்திய அரசின் இந்த அறிவிப்பால் மக்கள் தங்களிடம் இருந்த மேற்படி நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்தனர். இதில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் டெபாசிட் செய்தவர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி விசாரணையும் மேற்கொண்டது.

பா.ஜனதா அரசின் இந்த அதிரடி நடவடிக்கை மிகப்பெரும் தோல்வியடைந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த நிலையில் பணமதிப்பு நீக்கம் அமல்படுத்தப்பட்டு நேற்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதையொட்டி அதன் பயன்களை மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நேற்று வெளியிட்டு இருந்தார். இது தொடர்பாக தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் அவர் கூறியிருந்ததாவது:-

பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டதாகவும், இதனால் பணமதிப்பு நீக்க நடவடிக்கை முற்றிலும் தோல்வியடைந்திருப்பதாகவும் தவறான விமர்சனங்கள் வைக்கப்படுகிறது.

அதிக அளவிலான பணத்தை கைப்பற்றுவது, இந்த நடவடிக்கையின் அங்கம் அல்ல. மாறாக அவற்றை முறைப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தில் சேர்த்து வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதே இந்த நடவடிக்கையின் முக்கிய அம்சம் ஆகும். குறிப்பாக பணப்பரிமாற்றத்தை டிஜிட்டல் பரிமாற்றமாக மாறுவது முக்கியமாகும்.

அந்தவகையில் பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டதால் பணப்பரிமாற்றம் பெரும்பாலும் கட்டுப்படுத்தப்பட்டு டிஜிட்டல் பரிமாற்றங்கள் அதிகரித்து இருக்கிறது. இத்தகைய முறைப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தால் வரிசெலுத்துவோரின் எண்ணிக்கையும் பெருகி உள்ளது.

அதன்படி வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 64 லட்சத்தில் (ஜி.எஸ்.டி.க்கு முன்) இருந்து 1.20 கோடியாக உயர்ந்து இருக்கிறது. சரக்கு மற்றும் சேவைகளின் உண்மையான நுகர்வுத்தன்மை அதிகரித்து, வரித்தளம் தற்போது அதிகரித்து இருக்கிறது. இதன் மூலம் மறைமுக வரியும் அதிகரித்து உள்ளது.

இது மத்திய-மாநில அரசுகளுக்கு மிகுந்த பயனை அளித்து இருக்கிறது. குறிப்பாக ஜி.எஸ்.டி.க்கு பிறகு ஒவ்வொரு மாநிலமும் ஆண்டுதோறும் வரிவிதிப்பில் 14 சதவீதம் நிச்சய வளர்ச்சியை கண்டிருக்கின்றன.

குறைவான வரி செலுத்துவோருக்கு ரூ.97 ஆயிரம் கோடி மற்றும் ஜி.எஸ்.டி. பங்களிப்போருக்கு ரூ.80 ஆயிரம் கோடி என ஆண்டுதோறும் வரிச்சலுகை வழங்கப்பட்ட பிறகும், வரி வசூல் அதிகரித்து இருக்கிறது. இதைப்போல நேரடி மற்றும் மறைமுக வரி விகிதங்கள் குறைக்கப்பட்ட பிறகும் வரி வசூல் அதிகரித்து இருக்கிறது. வரித்தளம் விரிவடைந்து உள்ளது.

இந்த தொகையை உள்கட்டமைப்பு மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்காகவும், பல்வேறு சமூக துறைகளிலுமே மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது. இப்படி பொருளாதாரம் முறைப்படுத்தப்பட்டதால் 13 கோடி தொழில் முனைவோர் முத்ரா கடன்களை பெற்று இருக்கின்றனர். 7-வது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தப்பட்டதுடன், ஒரு பதவி-ஒரே ஓய்வூதிய திட்டமும் இறுதியில் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு அருண் ஜெட்லி கூறியுள்ளார்.