தேசிய செய்திகள்

தலீபான்களுடன் பேசும் போது, பிரிவினைவாதிகளுடன் ஏன் பேசக்கூடாது: உமர் அப்துல்லா கேள்வி + "||" + If you can talk to Taliban why not separatists, asks Omar Abdullah

தலீபான்களுடன் பேசும் போது, பிரிவினைவாதிகளுடன் ஏன் பேசக்கூடாது: உமர் அப்துல்லா கேள்வி

தலீபான்களுடன் பேசும் போது, பிரிவினைவாதிகளுடன் ஏன் பேசக்கூடாது: உமர் அப்துல்லா கேள்வி
தலீபான்களுடன் பேசும் போது, பிரிவினைவாதிகளுடன் ஏன் பேசக்கூடாது என உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.
ஸ்ரீநகர்,

அமெரிக்காவில் 2001-ம் ஆண்டு நடந்த பயங்கரவாத தாக்குதல்களை தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்டது. ஆனால் தொடர்ந்து 18 ஆண்டுகளாக அங்கு உள்நாட்டுப்போர் நீடித்து வருகிறது. பல பகுதிகள் இன்னும் தலீபான்கள் ஆதிக்கத்தின்கீழ்தான் உள்ளன. அவர்கள் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருவதால் அந்த நாட்டின் மறுசீரமைப்பு பணிகள் பாதித்து உள்ளன.

இந்தநிலையில் மாஸ்கோவில் ஒரு கூட்டம் நடத்தி, அதில் தலீபான்களுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தும் திட்டத்தை ரஷியா வெளியிட்டது. அதற்கான ஏற்பாடுகளையும் செய்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதில் பல நாடுகள் தயக்கம் காட்டின. அமெரிக்காவும், ஆப்கானிஸ்தான் அரசும் இதில் பங்கேற்க மறுத்து விட்டன.

இருப்பினும் மாஸ்கோவில் இந்த கூட்டம் நேற்று நடந்தது. ஈரான், சீனா, பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், துர்க்மேனிஸ்தான் நாடுகளின் பிரதிநிதிகளுடன் தலீபான்களும், ஆப்கானிஸ்தான் உயர் அமைதி கவுன்சில் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் இந்தியாவும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் கலந்து கொண்டது. இந்தியாவின் சார்பில் ஆப்கானிஸ்தானுக்கான முன்னாள் தூதர் அமர்சின்காவும், பாகிஸ்தானுக்கான முன்னாள் தூதர் டி.சி.ஏ.ராகவனும் கலந்து கொண்டனர். இது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

ரஷிய கூட்டத்தில் இந்தியாவின் பங்கேற்பு தொடர்பாக மத்திய அரசின் சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தலீபான்களுடன் இந்தியா நேரடி பேச்சுவார்த்தை நடத்தவில்லை, ரஷியா நடத்துகிற ஒரு கூட்டத்தில் நாங்கள் கலந்து கொள்கிறோம் என்று மட்டுமே சொன்னோம். அதிகாரப்பூர்வமற்ற முறையில் அதில் கலந்து கொள்வது என முடிவு எடுத்திருக்கிறோம் என்றுதான் சொன்னோம்.ஒரு முடிவு எடுப்பதில் நிறைய அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்படுகின்றன. இந்த முறை, அந்த கூட்டத்தில் நாம் பங்கேற்பது என்பது மத்திய அரசு பரிசீலித்து எடுத்த முடிவு ஆகும்”என்றார். 

உமர் அப்துல்லா கேள்வி

இந்த நிலையில், தலீபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் இந்தியா, பிரிவினைவாதிகளுடன் ஏன் பேச்சு வார்த்தை நடத்தக்கூடாது என்று உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார். உமர் அப்துல்லா இது குறித்து கூறும் போது, “ ஆப்கானிஸ்தானின் தலீபான் பயங்கரவாத இயக்கத்தின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பேச்சுவார்த்தையில்  அதிகாரப்பூர்வமற்ற முறையில்  இந்தியா பங்கேற்கிறது. 

சர்வதேச பயங்கரவாத இயக்க பிரதிநிதிகளுடன் பேசும் இந்தியா, காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியாக, இங்குள்ள பிரிவினைவாதிகளுடன் ஏன் பேசக்கூடாது?  பிரிவினைவாத அமைப்பினர் தலீபான்  அமைப்பை விட மோசமானவர்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.