தேசிய செய்திகள்

நிதி நிறுவன அதிபரிடம் 57 கிலோ தங்கம் பெற்ற வழக்கு: போலீஸ் விசாரணைக்கு கர்நாடக முன்னாள் மந்திரி ஜனார்த்தன ரெட்டி ஆஜர் + "||" + Financial institution chief 57 kg gold received Case: Karnataka former minister Janardana Reddy told the police investigation

நிதி நிறுவன அதிபரிடம் 57 கிலோ தங்கம் பெற்ற வழக்கு: போலீஸ் விசாரணைக்கு கர்நாடக முன்னாள் மந்திரி ஜனார்த்தன ரெட்டி ஆஜர்

நிதி நிறுவன அதிபரிடம் 57 கிலோ தங்கம் பெற்ற வழக்கு: போலீஸ் விசாரணைக்கு கர்நாடக முன்னாள் மந்திரி ஜனார்த்தன ரெட்டி ஆஜர்
நிதி நிறுவன அதிபரிடம் 57 கிலோ தங்கம் பெற்ற வழக்கில், போலீஸ் விசாரணைக்கு கர்நாடக முன்னாள் மந்திரி ஜனார்த்தன ரெட்டி ஆஜரானார்.
பெங்களூரு,

நிதி நிறுவன அதிபரிடம் 57 கிலோ தங்க கட்டிகள் பெற்ற வழக்கில், போலீஸ் விசாரணைக்கு கர்நாடக முன்னாள் மந்திரி ஜனார்த்தன ரெட்டி ஆஜரானார். அவரிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நிதி நிறுவன அதிபர் சையத் அகமது பரீத் என்பவர் மீதான அமலாக்கத்துறை வழக்கை சுமுகமாக முடித்து கொடுப்பதாக முன்னாள் மந்திரி ஜனார்த்தன ரெட்டி கூறியதுடன், இதற்காக ரூ.20 கோடி பேரம் பேசி, ரூ.18 கோடிக்கு 57 கிலோ தங்க கட்டிகளை பெற்றதாக கூறப்படுகிறது.


இதையடுத்து, தலைமறைவான ஜனார்த்தன ரெட்டியை பிடிக்க 4 போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில், 57 கிலோ தங்க கட்டிகள் பெற்ற வழக்கில் 11-ந் தேதிக்குள் (அதாவது இன்று) விசாரணைக்கு ஆஜராகும்படி நேற்று முன்தினம் குற்றப்பிரிவு போலீசார் ஜனார்த்தன ரெட்டிக்கு நோட்டீஸ் அனுப்பினார்கள். மேலும் விசாரணைக்கு ஆஜராக 48 மணி நேரம் காலஅவகாசமும் அவருக்கு வழங்கப்பட்டது.

இந்த நிலையில், தலைமறைவாக இருந்ததாக தேடப்பட்ட ஜனார்த்தன ரெட்டி தான் பேசிய வீடியோ ஒன்றை நேற்று மதியம் வெளியிட்டார். அதில், அரசியல் காரணங்களுக்காக வழக்கில் சிக்க வைக்க போலீசார் முயற்சிப்பதாகவும், இன்று (அதாவது நேற்று) போலீசார் முன்பு விசாரணைக்கு ஆஜராக இருப்பதாகவும் அவர் பேசி இருந்தார்.

இதையடுத்து போலீஸ் தலைமை அலுவலகத்திற்கு நேற்று மாலை ஜனார்த்தன ரெட்டி காரில் வந்தார். அங்கு விசாரணை அதிகாரி முன்பு அவர் ஆஜரானார்.

விசாரணையின்போது, போலீஸ் அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்ததாகவும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததாகவும் கூறப்படுகிறது. ஜனார்த்தன ரெட்டியிடம் 2 மணி நேரத்திற்கும் மேலாக போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். மேலும் நிதி நிறுவன அதிபர் பரீத்திடமும் விசாரணை நடத்தப்பட்டது.