மாநில செய்திகள்

உளுந்தூர்பேட்டையில் டேங்கர் லாரி-கார் மோதல்: தாயுடன் சென்னை என்ஜினீயர் பலி + "||" + In Ulundurpettai Tanker truck car collision Chennai engineer kills her mother

உளுந்தூர்பேட்டையில் டேங்கர் லாரி-கார் மோதல்: தாயுடன் சென்னை என்ஜினீயர் பலி

உளுந்தூர்பேட்டையில் டேங்கர் லாரி-கார் மோதல்: தாயுடன் சென்னை என்ஜினீயர் பலி
தந்தையின் உடலை எடுத்துச்சென்றபோது நடந்த இந்த பரிதாப விபத்து, உளுந்தூர்பேட்டையில் டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்தில் தாயுடன் சென்னை என்ஜினீயர் பலியானார்.
உளுந்தூர்பேட்டை,

திருச்சி அருகே உள்ள நாச்சிக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் பாபு(வயது 52). இவருடைய மனைவி ராதா(45). இவர்களுக்கு அஜன்(28), அம்ரிஷ் ராமச்சந்திரன்(22) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். பாபு குடும்பத்துடன் சென்னை சிட்லப்பாக்கத்தில் வசித்தபடி அங்குள்ள இந்தியன் வங்கி கிளையில் காசாளராக வேலை பார்த்து வந்தார்.


திருமணமான அஜன், சென்னை விமான நிலையத்தில் அதிகாரியாக உள்ளார். சாப்ட்வேர் என்ஜினீயரான அம்ரிஷ் ராமச்சந்திரன் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பாபு, நேற்றுமுன்தினம் திடீரென இறந்தார். இதையடுத்து பாபுவின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

அதன்படி நேற்றுமுன்தினம் நள்ளிரவு பாபுவின் உடல் ஒரு ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு சென்னையில் இருந்து நாச்சிக்குறிச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆம்புலன்சில் அஜன் சென்றார். பின்தொடர்ந்து ராதா, அம்ரிஷ் ராமச்சந்திரன், பாபுவின் தாய் தங்கம், உறவினர் புவானியா(25) ஆகியோர் ஒரு காரில் சென்றனர். காரை சென்னையை சேர்ந்த கோகுல் என்பவர் ஓட்டினார்.

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் உள்ள ரவுண்டானா அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், நடுரோட்டில் பஞ்சராகி நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது மோதியது.

இதில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. இந்த விபத்தில் ராதா, அவரது மகன் அம்ரிஷ் ராமச்சந்திரன் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். தங்கம், புவானியா, டிரைவர் கோகுல் ஆகியோரும், பஞ்சரான டேங்கர் லாரியின் டயரை கழற்றிக் கொண்டிருந்த உளுந்தூர்பேட்டை அடுத்த செம்மணங்கூரை சேர்ந்த சந்திரபாபு(31) என்பவரும் படுகாயம் அடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் எடைக்கல் போலீசார் விரைந்து வந்து தங்கம், புவானியா, கோகுல் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சந்திரபாபு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பலியான ராதா, அம்ரிஷ் ராமச்சந்திரன் ஆகியோரது உடல்களை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பஞ்சரான லாரியை நடுரோட்டில் நிறுத்தி பஞ்சர் ஒட்டுவதற்காக தொழிலாளி சந்திரபாபு, அதன் டயரை கழற்றியபோது விபத்து நடந்துள்ளது போலீஸ் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக எடைக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விபத்தில் பலியான அம்ரிஷ் ராமச்சந்திரனுக்கும், சென்னை பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர் மற்றும் உறவினர்கள் முடிவு செய்து, திருமண நிச்சயதார்த்தமும் சமீபத்தில் நடந்தது. வருகிற மார்ச் மாதம் திருமணம் நடைபெற இருந்தது. அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வந்தன.

துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக அம்ரிஷ் ராமச்சந்திரனுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த இளம்பெண் மற்றும் அவர்களது உறவினர்கள் மற்றொரு காரில் வந்து கொண்டிருந்தனர். விபத்து நிகழ்ந்தது பற்றி தகவல் அறிந்ததும் அடுத்த 15 நிமிடங்களில் அவர்கள் அங்கு வந்து விட்டனர். அம்ரிஷ் ராமச்சந்திரனின் உடலை பார்த்து, அந்த இளம்பெண் கதறி அழுதது காண்போரின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.

தொடர்புடைய செய்திகள்

1. ராணுவ வீரர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உளுந்தூர்பேட்டையில், மவுன ஊர்வலம்
பயங்கரவாதிகள் தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உளுந்தூர்பேட்டையில் மவுன ஊர்வலம் நடந்தது.
2. நைஜீரியா: டேங்கர் லாரி வெடித்து 20 பேர் பலி
நைஜீரியாவில் டேங்கர் லாரி கவிழ்ந்து, வெடித்து சிதறிய விபத்தில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை