தேசிய செய்திகள்

புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லும் -சுப்ரீம் கோர்ட் + "||" + Puducherry appointments MLAs The appointment goes on Supreme Court

புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லும் -சுப்ரீம் கோர்ட்

புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லும் -சுப்ரீம் கோர்ட்
புதுச்சேரியில் 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செய்தது செல்லும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்து உள்ளது.
புதுடெல்லி,

புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 30 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்கள் தவிர மாநில அரசின் பரிந்துரையின் பேரில் மத்திய அரசு 3 பேரை எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கலாம். இந்த நிலையில் புதுவை அரசின் பரிந்துரையின்றி பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோரை நியமன எம்.எல்.ஏ.க்களாக மத்திய அரசு நியமித்தது. 

இதற்கான உத்தரவு புதுவை அரசுக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 3-ந்தேதி வந்தது. அவர்களுக்கு சபாநாயகர் வைத்திலிங்கம் பதவிப்பிரமாணம் செய்து வைக்காத நிலையில் கவர்னர் கிரண்பெடி மறுநாளே பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

மத்திய அரசின் இந்த நியமனத்துக்கு புதுச்சேரி அரசியல் கட்சிகள் சார்பில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. நியமன எம்.எல்.ஏ.க்களை கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்க சபாநாயகர் வைத்திலிங்கம் மறுத்து விட்டார்.

இந்த நியமனத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் முதல்-அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ. மற்றும் தனலட்சுமி என்பவரும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கினை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு மத்திய அரசின் இந்த நியமனம் செல்லும் என்று உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து ஐகோர்ட்டின் உத்தரவுடன் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த சட்டமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ள நியமன எம்.எல். ஏ.க்கள் வந்தனர். ஆனால் சபாநாயகர் அவர்களை சட்டசபைக்குள் நுழைய அனுமதி மறுத்தார்.

இதற்கிடையே சென்னை ஐகோர்ட்டின் உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., தனலட்சுமி ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு கடந்த ஜூலை  13-ந்தேதி விசாரணைக்கு வந்தது. 

சென்னை ஐகோர்ட்டின் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை எதுவும் பிறப்பிக்கவில்லை. எனவே, நியமன எம்.எல்.ஏ.க்களை சட்டசபைக்குள் சபாநாயகர் அனுமதிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.

இன்று இந்த வழக்கில்  சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது. அதில் சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை உறுதி செய்து உள்ளது.

புதுச்சேரி பாஜக நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேரை மத்திய அரசு நேரடியாக நியமித்தது செல்லும்.  நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் புதுச்சேரி அரசு தலையிட தேவையில்லை  என சுப்ரீம் கோர்ட்  கூறி உள்ளது.