தேசிய செய்திகள்

டொனால்டு டிரம்ப் மிரட்டல் புறக்கணிப்பு, ரூபாய் மூலம் கச்சா எண்ணெய் வாங்க ஈரானுடன் இந்தியா புதிய ஒப்பந்தம் + "||" + India inks pact with Iran to pay crude bill in rupee

டொனால்டு டிரம்ப் மிரட்டல் புறக்கணிப்பு, ரூபாய் மூலம் கச்சா எண்ணெய் வாங்க ஈரானுடன் இந்தியா புதிய ஒப்பந்தம்

டொனால்டு டிரம்ப் மிரட்டல் புறக்கணிப்பு, ரூபாய் மூலம் கச்சா எண்ணெய் வாங்க ஈரானுடன் இந்தியா புதிய ஒப்பந்தம்
அமெரிக்காவின் மிரட்டலை நிராகரித்து ரூபாய் மூலம் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியா புதிய ஒப்பந்தத்தை செய்துள்ளது.

புதுடெல்லி,


கடந்த 2015-ம் ஆண்டு, ஈரானுக்கும், அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா இருந்தபோது, இந்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. 

டொனால்டு டிரம்ப் ஜனாதிபதி ஆன நிலையில், அந்த ஒப்பந்தத்தால் பயன் இல்லை என்று கருத்து தெரிவித்தார். ஈரான் தனது வருவாயை பயங்கரவாதத்துக்கு பயன்படுத்துவதாகவும் நினைத்தார். எனவே, கடந்த மே மாதம் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியது. அத்துடன், ஈரானுடன் எவ்வித வர்த்தக தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்று மற்ற நாடுகளை டிரம்ப் மிரட்டினார். ஈரானின் வருவாயை குறைக்க நினைத்த அவர், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நவம்பர் 4-ந் தேதியுடன் எல்லா நாடுகளும் நிறுத்திக்கொள்ள வேண்டும். அப்படி நிறுத்தாவிட்டால், அத்தகைய நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்று டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்தார். 
 
சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாதான் ஈரானிடம் இருந்து அதிகமாக கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது. பொருளாதார தடையை தவிர்க்க நினைத்த இந்தியா, ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் வருடாந்திர அளவை 2 கோடியே 26 லட்சம் டன்னில் இருந்து ஒரு கோடியே 50 லட்சம் டன்னாக குறைத்துக்கொள்வதாக உறுதி தெரிவித்தது. மேலும், கச்சா எண்ணெய்க்கான பணத்தை, உணவு, மருந்தை தவிர வேறு தேவைகளுக்கு ஈரான் பயன்படுத்துவதை தவிர்க்க, விசேஷ கணக்கில் செலுத்தவும், பணத்தை உள்ளூர் நாணயத்தில் வழங்கவும் ஒப்புக்கொண்டது.

இதையடுத்து, ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய இந்தியாவுக்கு தற்காலிக அனுமதி வழங்க அமெரிக்கா சம்மதம் தெரிவித்தது. சீனா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட 7 நாடுகளுக்கும் அனுமதி வழங்க ஒப்புக்கொண்டது. ஈரானின் கச்சா எண்ணெயை சந்தையில் முற்றிலுமாக நிறுத்திவிட்டால், கச்சா எண்ணெய் விலை உயரும் ஆபத்து இருப்பதால், அமெரிக்காவும் தனது பிடிவாதத்தை தளர்த்தியது. 8 நாடுகளும் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டபோதிலும், கச்சா எண்ணெய் அளவை படிப்படியாக குறைக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் அமெரிக்காவின் மிரட்டலை நிராகரித்து ரூபாய் மூலம் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியா புதிய ஒப்பந்தத்தை செய்துள்ளது. ஏற்கனவே ரூபாய் மூலம் வர்த்தகத்தை மேற்கொள்ள இந்தியா பேச்சுவார்த்தை மேற்கொண்டது, இதற்கு ஈரான் நேர்மறையான நகர்வையே முன்னெடுத்தது. ஈரானிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய்க்கு, அமெரிக்க டாலருக்கு பதிலாக இந்திய ரூபாயில் பணத்தை செலுத்த ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. ஈரானிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய்க்கு தர வேண்டிய தொகையை பாதியளவு பொருட்கள் ஏற்றுமதி செய்தும், மீதித்தொகையை ரூபாயாகவும் இந்தியா செலுத்த உள்ளது.

அமெரிக்காவின் தடையிருந்தாலும் உணவு தானியங்கள், மருந்து பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் போன்றவற்றை இந்தியா ஏற்றுமதி செய்கிறது. அதற்கு நிகரான தொகை ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும்போது கழித்து கொள்ளப்படும். ஈரான் தேசிய கச்சா எண்ணெய் கழகத்தின் யூகோ வங்கி கணக்கில், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தொகையை செலுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்திய ரூபாயை செலுத்த இருப்பதால் இந்தியாவின் அந்நியச் செலவாணி கையிருப்பு குறையாமல் பார்த்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


ஆசிரியரின் தேர்வுகள்...