மாநில செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்காமல் இருக்க நடவடிக்கைஎடப்பாடி பழனிசாமி உறுதி + "||" + Step to avoid reopening the Sterlite plant Edappadi Palanisamy confirmed

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்காமல் இருக்க நடவடிக்கைஎடப்பாடி பழனிசாமி உறுதி

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்காமல் இருக்க நடவடிக்கைஎடப்பாடி பழனிசாமி உறுதி
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்தார்.
சென்னை,

சட்டசபையில் நேற்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

தி.மு.க. ஆட்சியில்

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டெர்லைட் ஆலையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி வெளிநடப்பு செய்திருக்கிறார். தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஸ்டெர்லைட் சம்பந்தமாக என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்பதை தெரிவிக்க விரும்புகிறேன்.

தி.மு.க. ஆட்சியில் இருந்தபொழுது, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில், 1996 முதல் 1998 வரை பல்வேறு தேதிகளில் தூய சுற்றுச்சூழலுக்கான தேசிய அறக்கட்டளையில் இருந்து ஒருவர், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தூத்துக்குடி மாவட்ட சி.ஐ.டி.யு. செயலாளர் கனகராஜ் ஆகியோரால் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

ஐகோர்ட்டு தீர்ப்பு

இந்த வழக்கில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் எல்லாவிதமான விதிமுறைகளையும், சட்டங்களையும் பின்பற்றி தொழிற்சாலை பணிகளை தொடர்ச்சியாக கண்காணித்த பிறகே அனுமதி வழங்கப்பட்டது என்ற தனது நிலைப்பாட்டை ஐகோர்ட்டில் எடுத்துரைத்தது. அப்பொழுது ஆட்சியில் இருந்த தி.மு.க. அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக இந்த நிலைப்பாட்டை எடுத்தது.

ஆனால், ஐகோர்ட்டு மேற்கூறிய வழக்குகளை ஒன்றிணைத்து விசாரித்து 28-9-2010 அன்று கீழ்க்கண்ட தீர்ப்பினை வழங்கியது. ஸ்டெர்லைட் தொழிற்சாலை உடனடியாக மூடப்பட வேண்டும், தொழிலாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும். தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் தொழிலாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது.

தி.மு.க.வே மூலகாரணம்

ஐகோர்ட்டு ஆணைக்கு எதிராக தொழிற்சாலை நிர்வாகம் 1-10-2010 அன்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. அதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலையும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்மனு செய்தது. சுப்ரீம் கோர்ட்டு 1-10-2010 அன்று ஐகோர்ட்டின் மூடுதல் ஆணையை நிறுத்திவைத்தது. சுப்ரீம் கோர்ட்டு இவ்வாறு ஆணை பிறப்பிக்க, தி.மு.க. ஆட்சியில் தாக்கல் செய்த வாதுரை தான் காரணம். 14-10-1996 அன்று இந்த ஆலையை இயக்குவதற்கான இசைவாணையும், 20-5-1999 அன்று கூடுதல் பொருட்கள் தயாரிப்பதற்கான இசைவாணையும், 2-11-2006 அன்று ஆலையின் 2-வது விரிவாக்கத்தை நிறுவுவதற்கான இசைவாணையும், 15-11-2006 அன்று 2-ம் விரிவாக்கத்தை இயக்குவதற்கான இசைவாணையும், 19-1-2009 அன்று ஆலையை புதுப்பிக்க இசைவாணையும், 14-8-2009 அன்று ஆலையை புதுப்பித்தல் இசைவாணையும் தி.மு.க. ஆட்சியில் தான் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தி.மு.க. ஆட்சிக் காலத்தில் 324.53 ஏக்கர் நிலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஸ்டாலின் தொழில் துறை அமைச்சராக இருந்தபொழுது 89.36 ஏக்கர் நிலத்தை ஒப்படை செய்வதற்கு 243.84 ஏக்கர் நிலம் கூடுதலாக ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டதின் அடிப்படையில் தான் இந்நிறுவனத்தின் 2-வது விரிவாக்கத்திற்கான நிலம் முழுமையாக தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட்டது. தி.மு.க. அரசு, மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் நிபந்தனைகள் எதையும் உறுதிப்படுத்தாமல், 14-10-1996-ல் ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கான இசைவாணையை வழங்கியதுதான் இன்றைய அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மூலகாரணம்.

தீர்ப்பு நகல் கிடைத்ததும்

அதுமட்டுமன்றி, தொழிற்சாலைக்கு எதிராக எந்த ஏற்பாட்டையும் தி.மு.க. அரசு எடுக்கவில்லை என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட விழைகின்றேன். ஆனால் அ.தி.மு.க. அரசு உரிய சட்டப்போராட்டம் நடத்தி மீண்டும் ஆலை திறக்காமல் இருக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன்.

சுப்ரீம் கோர்ட்டு இறுதித் தீர்ப்பு இருந்தால் மட்டுமே, தமிழ்நாடு அரசு தக்க நடவடிக்கை மேற்கொள்ள இருப்பது குறித்து பரிசீலிக்கும். விரிவான அறிக்கை நீதிமன்ற தீர்ப்பு வந்தபின் தெரிவிக்கப்படும்.

எதிர்க்கட்சி தலைவர் ஏதாவது ஒரு காரணத்தைக்காட்டி வெளிநடப்பு செய்யலாம் என்று வந்தார், இதை காரணம்காட்டி வெளிநடப்பு செய்துவிட்டார். இன்றைக்குத்தான் நீதிமன்றத்திலே அந்த வழக்கு வந்தது. அந்த வழக்கினுடைய தீர்ப்பு முழுவதும் வந்தால்தான் அரசு அதை முழுமையாக தெரிவிக்க முடியும். தீர்ப்பினுடைய நகல் கிடைத்த பிறகு அரசின் முடிவு தெரிவிக்கப்படும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.